நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு
தமிழகத்தில் , மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், வரும் 1ம் தேதி திறக்கப்படாது என்று, தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது.;
கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 1-இல் இருந்து, 9-ம் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறன.
அதேபோல், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெறும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து, தற்போது பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன், நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புக்கு மாறாக, தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது என, அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என, அதில் கூறப்பட்டுள்ளது.