மாணவர்கள் படிப்பிற்காக வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது எப்படி? முழுமையான தகவல்கள்

பணம் இல்லாத மாணவர்களும் படிப்பைத் தொடர வேண்டும் எனும் நோக்கில் மத்திய அரசு கல்விக்கடன் திட்டத்தை செயல்படுத்துகிறது.

Update: 2021-07-29 02:04 GMT

கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்தும், பணம் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் படிப்பை தொடராமல் நிறுத்தி விடக்கூடாது என்ற நோக்கத்தில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முனைப்புடன் செயல்படுத்திவருகிறது.

மாணவச் செல்வங்கள் வங்கிகளில் கல்விக்கடனை பெறுவதற்காக "வித்யாலட்சுமி" திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி +2 படித்துவிட்டு உயர்கல்வி படிக்க கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, 10ம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கும் கல்விக்கடன் கிடைக்கும். வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறுவதற்கு வித்யாலட்சுமி திட்ட இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நாம் விரும்பும் வங்கிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, கல்விக்கடன் பெற முடியும். எளிமையான நடைமுறை இருந்தாலும் சில தயக்கங்கள், சந்தேகங்கள் கல்விக்கடன் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இயல்பாக வந்துவிடுகிறது. அவர்கள் சந்தேகங்களுக்கான விளங்கங்களை பார்ப்போம்.

எந்தெந்தப் படிப்புகளில் சேருவதற்கு கல்விக்கடன் வழங்கப்படுகிறது?

பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் போன்ற அரசு அமைப்புகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை டிப்ளமோ படிப்புகளிலும் சேர்ந்துள்ளவர்கள் கல்விக்கடன் கேட்டு பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பம் செய்யலாம்.

ஐசிடபிள்யூஏ, சிஏ, சிஎஃப்ஏ போன்ற படிப்புகளில் சேருபவர்களும் ஐஐஎம், ஐஐடி, ஐஐஎஸ்சி, எக்ஸ்எல்ஆர்ஐ, நிஃப்ட், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் போன்ற கல்வி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளில் சேருபவர்களும் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.


இந்திய நர்சிங் கவுன்சில், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏவியேஷன், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் போன்ற அரசு அங்கீகார அமைப்புகளின் அனுமதியுடன் நடத்தப்படும் நர்சிங் டிப்ளமோ அல்லது நர்சிங் பட்டப்படிப்பு, பைலட் டிரெயினிங், ஷிப்பிங் போன்ற பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேருபவர்களும் கல்விக்கடன் பெற விண்ணப்பம் செய்யலாம்.

சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நடத்தும் அங்கீகாரம் பெற்ற படிப்புகளில் சேருபவர்களுக்கும் கல்விக்கடன் கிடைக்கும். இதுதவிர, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய படிப்புகளுக்கும் கல்விக்கடன் வழங்குவது குறித்து வங்கிகள் பரிசீலனை செய்யும். அத்துடன், வெளிநாடுகளில் உள்ள தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் படிக்க தேர்வு செய்யப்பட்ட மாணவர்களும் கல்விக்கடன் பெறலாம்.

பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மேலும் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்குமா?

பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கும். அதாவது, பத்தாம் வகுப்பு படித்துவிட்டு தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கும் வங்கிகளில் கல்விக்கடன் பெற தனித்திட்டம் உள்ளது. ஆனால், கல்விக்கடனுக்கு வட்டிச் சலுகை மட்டும் கிடைக்காது.


வங்கிகளில் கல்விக் கடனாக எவ்வளவு பணம் கிடைக்கும்?

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம். வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், தேர்வுக் கட்டணம், நூலகம் மற்றும் லேபரட்டரி கட்டணம், புத்தகங்கள், லேப்டாப், புராஜக்ட், ஸ்டடி டூர் போன்ற பல்வேறு படிப்பு தொடர்பான செலவுகளுக்கும் கல்விக்கடன் பெறலாம்.

வெளிநாடு செல்லும் மாணவர்களின் போக்குவரத்துச் செலவுக்கும் கல்விக்கடன் பெறலாம். நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெற்றவர்களுக்கு அரசு அமைப்புகள் நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தின்படியே கல்விக்கடன் பெற முடியும். அதேசமயம், மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் முக்கியத்துவம் வாய்ந்த படிப்புகளில் படிப்பதற்கு இதைவிட கூடுதலாக கடன் தேவைப்பட்டால், அதை வழங்குவது குறித்தும் வங்கிகள் பரிசீலனை செய்யலாம்.

வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதற்கு "மார்ஜின் மணி" எனப்படும் முன் பணம் எவ்வளவு செலுத்த வேண்டும்.?

ரூ.4 லட்சம் வரை கல்விக்கடன் பெறுவதற்கு வங்கிகளில் முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இந்தியாவில் படிக்க ரூ.4 லட்சத்துக்குமேல் கல்விக்கடன் வாங்கினால் கடன் தொகையில் 5% வெளிநாடுகளில் படிக்க ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக்கடன் வாங்கினால் கடன் தொகையில் 15% முன்பணமாக மாணவர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

வங்கிகளில் கல்விக்கடன் பெறும் மாணவர்கள் இன்சூரன்ஸ் திட்டத்தில் கட்டாயம் சேர வேண்டுமா?

கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள், இன்சூரன்ஸ் திட்டத்தில் சேரவேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்காக குறைந்த அளவு தொகைதான் செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கல்விக்கடன் பெறும் மாணவர்கள் எதிர்பாராத விதமாக இறந்துபோனால், அவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வங்கிகளுக்குச் செலுத்திவிடும். அவர்களது குடும்பங்களுக்கு அந்தக் கல்விக்கடன் சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த இன்சூரன்ஸ் திட்டம் உள்ளது.

மாணவர்கள் கல்விக்கடன் பெற ஜாமீன் அல்லது உத்தரவாதத்தை யார் அளிக்க வேண்டும் ?

ரூ 4 லட்சம் வரை வாங்கினால் மாணவர்களின் பெற்றோர்கள் கையெழுத்திட்டால் போதும், அதற்கு செக்யூரிட்டி எதுவும் தேவையில்லை. ரூ.4 லட்சத் திலிருந்து ரூ.7.5 லட்சம் வரை கடன் வாங்கினால், அதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவையில்லை என்று சில வங்கிகள் கூறலாம், ஆனாலும் சில சமயங்களில் மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவைப்படும்.

ரூ.7.5 லட்சத்துக்கு மேல் கடன் தேவைப்பட்டால் பெற்றோரின் சொத்து உத்தரவாதம் (with tangible collateral security of suitable value) தேவைப்படும்.

வங்கிகளில் கல்விக்கடனுக்கு வட்டி எவ்வளவு வசூல் செய்கின்றனர் ?

'பேஸ் ரேட்' அடிப்படையில் வங்கிகள் கல்விக் கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கும் முறை முதலில் அமலில் இருந்தது.

தற்போது மார்ஜினல் காஸ்ட் ஆன் லெண்டிங் ரேட் (எம்.சி.எல்.ஆர்.) என்ற முறையில் வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது.

வங்கிகளைப் பொருத்து வட்டி விகிதம் வேறுபடும். தொடக்க நிலையில் குறைந்தது சுமார் 11.5% லிருந்து 12% வரை வட்டி இருக்கும்.

மாணவர்கள் படிக்கின்ற காலத்திலேயே வட்டியைச் செலுத்தவேண்டுமா ?

கல்விக்கடன் பெறும் மாணவர்கள் படிக்கின்ற காலத்திலேயே வட்டியைச் செலுத்தவேண்டும் என்று வங்கிகள் மாணவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. படித்து முடிக்கும் வரை வட்டியைச் செலுத்த இயலாது என்பது குறித்து மாணவர்களே வங்கிகளிடம் எழுதிக் கொடுத்து விடலாம்.

கல்விக் கடனுக்கு அரசு வழங்கும் வட்டிச் சலுகை யாருக்குக் கிடைக்கும் ?

கல்விக்கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை இந்தியன் வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் படி, வங்கிகளில் கல்விக்கடன் பெறுபவர்களுக்குத்தான் மத்திய அரசின் கல்விக்கடன் வட்டிச் சலுகை கிடைக்கும். இந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டும் மாணவர்களுக்கு வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன. அதன்படி, கல்விக்கடன் பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டிச் சலுகை கிடைக்காது. அதேபோல, கலை, அறிவியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விக்கடன் வட்டிச் சலுகை கிடைக்காது.

தொழில் மற்றும் தொழில்நுட்ப (புரபஷனல் அண்ட் டெக்னிக்கல்) படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும். அதாவது, ஆண்டுக்கு ரூ.4.5 லட்சத் துக்குக் குறைவான வருவாய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசின் முழு வட்டிச் சலுகை வழங்கப்படும். படிப்புக் காலம் முடிந்து அதிகபட்சம் ஒரு வருடம் வரை வட்டிச் சலுகை கிடைக்கும். கல்விக் கடனுக்கான வட்டிச் சலுகை பெற விரும்பும் மாணவர்கள், தங்களது பெற்றோரின் வருமானம் குறித்து தாசில்தாரிடம் வருவாய்ச் சான்றிதழைப் பெற்று கல்விக்கடன் பெறும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்விக் கடனை எவ்வளவு காலத்திற்குள் திருப்பிச் செலுத்தவேண்டும்?

படிப்பை முடித்த ஒரு வருடத்தில் இருந்து கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 15 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்திவரும் காலத்தில் வேலையில்லாமல் போனாலோ அல்லது குறைந்த வருவாயில் வேலை செய்யும் நிலை ஏற்பட்டாலோ, இரண்டிலிருந்து மூன்று முறை வரை ஆறு மாத காலம் வரை கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஒத்திவைக்கவும் அனுமதி அளிக்கப்படும்.

படித்து முடித்த மாணவர்கள் புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களது தொழில் தொடங்கி நடத்தும் காலம் வரை (இன்குபேஷன் பீரியட்) கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்படும்.

வங்கிக் கடன் வாங்கிப் படித்து முடித்த மாணவர்கள், வேலையில் சேர்ந்தாலும்கூட, தொடக்கத்தில் குறைந்த ஊதியம் பெறும் மாணவர்கள் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த சிரமப்படுவார்கள். அதனால், 'டெலஸ்கோப்பிக்' முறையை இந்திய வங்கிகள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில், தொடக்கத்தில் குறைந்தபட்சத் தொகையை செலுத்தலாம். பின்னர், படிப்படியாக, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு வங்கி அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.


`ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் உயர்கல்வி படிக்க அவர்களுக்கு வங்கியில் கல்விக்கடன் கிடைக்குமா?'

நிறைய பேருக்கு இருக்கும் சந்தேகம் இது.

ஆம்... அவர்கள் அனைவருமே கல்விக்கடன் பெறலாம்.

ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி படித்தாலும், அவர்கள் அனைவரும் படிக்க வங்கிகளில் கல்விக்கடன் பெறலாம். ஒரு குடும்பத்தில் ஒரு மாணவருக்கு கல்விக்கடன் வாங்கினாலும்கூட, அந்த மாணவரின் சகோதர, சகோதரிகள் படிக்க வங்கிகள் கல்விக்கடன் வழங்கத் தடையில்லை. கல்விக்கடன் பெறுவதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. மாணவர் மைனராக இருந்தால் பெற்றோர்கள் உறுதியளிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு ரூ. 2 லட்சமும் இரண்டாவது மாணவருக்கு ரூ. 3 லட்சமும் கல்விக்கடன் வாங்குவதாக வைத்துக்கொள்வோம்.

அந்தக் குடும்பத்துக்கான மொத்தக் கல்விக்கடன் தொகையைக் கணக்கிட்டு அதற்கேற்ற ஜாமீனை மாணவர்களின் பெற்றோர்கள் கல்விக்கடன் வட்டிச்சலுகை பெற தகுதி பெற்றிருந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அந்தச் சலுகை கிடைக்கும். அதற்குத் தடை எதுவும் இல்லை.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்குமா?

நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் சேரும் மாணவர்களும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது கல்விக்கடன் வழங்குவதற்கான விதிமுறை. நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் நேரடியாகச் சேரும் மாணவர்கள், இந்தியன் வங்கிகள் சங்கத் திட்டத்தின் கீழ் வங்கிகளிலிருந்து கல்விக்கடன் பெற முடியாது. இந்தியன் வங்கிகள் சங்கத்தின் திட்டம் அல்லாத நடைமுறையில் வங்கிகளை அணுகி கல்விக்கடன் பெற முயற்சிக்கலாம். இந்தக் கடனுக்கு மத்திய அரசின் வட்டிச் சலுகை கிடைக்காது.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு நிர்ணயம் செய்த கட்டணத்தைக் கல்விக் கடனாகப் பெற முடியும். அத்துடன், தங்குமிடம், உணவு, லேப்டாப் போன்ற பல்வேறு செலவுகளுக்கு ஆகும் பணத்தையும் கல்விக் கடனாகப் பெறலாம்.

வங்கிக் கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பது எப்படி?

வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதற்கு இந்தியப் பிரஜையாக இருக்கவேண்டும்.

கல்வி நிறுவனத்தில் அட்மிஷன் பெறுவதற்கு முன்னதாகக் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க முடியாது. வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடப் பிரிவில் சேர அட்மிஷன் கிடைத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து படிப்புக்கு ஆகும் செலவுகள் பற்றிய மதிப்பீட்டை (எஸ்டிமேஷன்) பெற வேண்டும். வருடம் முழுவதிலும் எப்போது வேண்டுமானாலும் கல்விக்கடன் வேண்டி வங்கிகளை அணுகலாம். இந்த வங்கியில்தான் கல்விக்கடன் பெற முடியும் என்கிற விதி எதுவும் இல்லை. உங்கள் ஊரில் உள்ள எந்த வங்கியிலும் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம். வங்கியில் உங்களுக்குக் கணக்கு இல்லை என்றாலும், நீங்கள் கடன் வேண்டி எந்த வங்கியையும் அணுகலாம்.

தற்போது வித்யாலட்சுமி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் வங்கிகள் மூலம் கல்விக்கடன் - பெறுவதற்கு இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்தால், அவை நாம் விரும்பும் மூன்று வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கல்விக்கடன் பெற முடியும். இதுகுறித்த விவரங்களுக்கு வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்டத்துக்கான இணைய தளத்தைப் (www.vidyalakshmi.co.in) பார்க்கவும். வங்கிகளை அணுகியும் துகுறித்த விவரங்களைக் கேட்டறியலாம்.

வங்கிகளில் கல்விக்கடன் எத்தனை நாள்களில் கிடைக்கும்?

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதற்கு பரிசீலனை செய்ய 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை வங்கிக் கிளைகள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்.

தகுதி இருந்தும் கல்விக்கடன் கிடைக்கா விட்டால் என்ன செய்வது?

உரிய ஆவணங்களுடன் கொடுக்கப்படும் கல்விக்கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை.

கல்விக்கடன் கிடையாது என மறுக்கவோ, நம் விண்ணப்பத்தை நிராகரிக்கவோ வங்கிக்கிளை அதிகாரிக்கு அதிகாரமில்லை.

ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில், அதற்கான காரணங்களை எழுத்து மூலம் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும்.

கல்விக்கடன் வழங்குவதற்கான இலக்கு முடிந்துவிட்டது போன்றவற்றை வங்கி அதிகாரிகள் கடனை மறுக்கும் காரணமாகக் கூற முடியாது. சில வங்கிகளில் கல்விக்கடனுக்கான விண்ணப்பம் ஸ்டாக் இல்லை என்று கூறி வந்தார்கள்.

முன்பு இருந்ததைப்போல சம்பந்தப்பட்ட வங்கிக்கிளையிலிருந்துதான் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியின் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, குறிப்பிட்ட காலத்துக்குள் நம் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படவில்லையென்றால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் முறையிடலாம். வங்கித் தலைவருக்குக் கடிதம் எழுதியும் தீர்வை கண்டுபிடிக்கலாம். ரிசர்வ் வங்கியிலும் மாணவர் கல்விக்கடன் குறை தீர்ப்புக்கென்றே தனிப்பிரிவு உள்ளது. அதையும் அணுகலாம்.

உரிய காலத்தில் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படவில்லை என்றால், உயர் அதிகாரிகளிடம் முறையிடலாம். வங்கித் தலைவருக்குக் கடிதம் எழுதியும் நிவாரணம் பெறலாம். ரிசர்வ் வங்கியிலும் மாணவர் கல்விக்கடன் குறை தீர்ப்புக்கு என்று தனிப்பிரிவு உள்ளது. அங்கும் முறையிடலாம். வங்கியில் கல்விக்கடன் பெறுவது தொடர்பான பல்வேறு முக்கியத் தகவல்கள் இந்தியன் வங்கிகள் சங்க இணையதளத்திலும் (www.iba.org.in) எஜுகேஷன் லோன் டாஸ்க் ஃபோர்ஸ் இணையதளத்திலும் (www.eltf.in) உள்ளன.

ஆனால், கடன் பெறுபவர்கள் நிச்சயமாக கடனைத் திரும்ப செலுத்த முடியாது என்று தெரியவரும் பட்சத்தில், கடன் பெறுபவர் அல்லது பெறுபவருக்கு ஜாமீன் கொடுப்பவர் இதற்கு முன் பல கடன்களின் இஎம்ஐ அல்லது வட்டித் தொகையை சரியான நேரத்தில் கட்டத் தவறியிருந்தாலோ, மிகக் குறைவான சிபில் ஸ்கொரை உடையவராக இருந்தாலோ, வங்கிகளால் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியும்.

கல்விக்கடன் கேட்டு ஆன்லைன் மூலமோ, வங்கிகளில் விண்ணப்பங்களைப் பெற்று நேரிலுமோ சமர்ப்பிக்கலாம். நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் வங்கியில் தரும் ரசீதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு நேரில்சென்று, எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கேட்டறிந்து, அதற்கேற்றாற்போல ஆவணங்களைத் தயார்நிலையில் வைத்திருக்கலாம்.

வங்கிக்கடன் பெற உதவும் இணையதளங்கள்

www.vidyalakshmi.co.in / www.iba.org.in / www.eltf.in /

Tags:    

Similar News