மீன்வளப் படிப்பில் சேர விரும்புகிறீர்களா? இதோ விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் நடத்தும் மீன்வளப் படிப்புகளில் சேர விரும்புவோர் அதற்கு விண்ணப்பிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பம் கடந்த 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுகுமார் அரசின் உத்தரவின்படி தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் என்று தெரிவித்தார்.
மேலும், மாணவர் சேர்க்கை குறித்து மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் கூறியதாவது:
2023-24 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையானது இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். வேளாண்மை மற்றும் மீன்வளம் பல்கலைக்கழங்களின் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் பெறப்படும். இந்த கல்வி ஆண்டில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 345 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 57 சிறப்பு இடஒதுக்கீட்டு இடங்களும் நிரப்பப்பட உள்ளது.
அரசின் விதிமுறைப்படி, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், விளையாட்டு வீரர்கள் (3 இடங்கள்), மாற்றுத் திறனாளிகள் (மொத்த இடஒதுக்கீட்டீல் 5 சதவீத ஒதுக்கீடு) முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் (1 இடம்), அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் (மொத்த இடஒதுக்கீட்டீல் 7.5 சதவீத ஒதுக்கீடு) மற்றும் தொழிற்பிரிவில் பயின்றோர் (மொத்த இடஒதுக்கீட்டீல் 5 சதவீத ஒதுக்கீடு) ஆகியோர்களுக்கும் சிறப்பு இடஒதுக்கீட்டின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மேலும், மீனவ சமுதாய குழந்தைகள் (20 சதவீதம்), வெளிநாடுவாழ் இந்தியர்கள் (14 இடங்கள்), வெளிநாட்டினர் (5 இடங்கள்), அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவில் பயின்ற குழந்தைகள் (5 இடங்கள்) மற்றும் காஷ்மீர் புலம் பெயர்ந்த இந்து பண்டிட் குழந்தைகளுக்கு (2 இடங்கள்) கூடுதலாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 சதவீத பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படும் மீனவ சமுதாய குழந்தைகளுக்கு பருவ கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், சாப்பாடு கட்டணம் அனைத்தும் தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.
மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மூலம் இளநிலை மீன்வள அறிவியல் Bachelor of Fisheries Science (B.F.Sc.) தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சென்னை பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாகை தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 40 இடங்கள் வீதம் உள்ளன.
இளநிலை மீன்வளப் பொறியியல் B. Tech. (Fisheries Engineering) படிப்பு மற்றும் இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் B.Tech. (Energy and Environmental Engineering) படிப்பு நாகை மீன்வள பொறியியல் கல்லூரியில் உள்ளன. இளநிலை உயிர் தொழில்நுட்பவியல் படிப்பு சென்னை வாணியன்சாவடி மீன்வள உயிர்தொழில்நுட்ப நிலையத்திலும், இளநிலை உணவு தொழில்நுட்பவியல் படிப்பு சென்னை மாதவரம் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரியிலும், இளநிலை வணிக நிர்வாகவியல் படிப்பு சென்னை முட்டுக்காடு மீன்வள வணிக கல்லூரியிலும், இளநிலை தொழிற்கல்வி (தொழில்சார் மீன்பதன நுட்பவியல்) படிப்பு சென்னை மாதவரம் மீன்வள தொழில்நுட்பம்சார் தொழிற்கல்வி நிலையத்திலும் உள்ளன.
இளநிலை தொழிற்கல்வி தொழில்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு படிப்பு சென்னை முட்டுக்காடு மீன்வளர்ப்பு தொழில் காப்பகம் மற்றும் தொழிற்கல்வி இயக்ககத்திலும் இளநிலை தொழிற்கல்வி தொழில்சார் மீன்பிடி நுட்பவியல் படிப்பு ராமநாதபுரம் மண்டபம் மீன்வள பயிற்சி நிலையம், மீன்பிடி தொழில் காப்பகம் மற்றும் தொழிற்கல்வி இயக்ககத்திலும் உள்ளன.
சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் அதற்கான தகுதி சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். http://tnagfi.ucanapply.com என்ற இணையதளம மூலம் ஜுன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில்இ தரவரிசைப்பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இட ஒதுக்கீடு, பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்தல், ஆகிய அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். மேலும் தகவல் பெற தொலைபேசி-04365-256430, செல்போன் (9442601908) மற்றும் மின்னஞ்சல் (ugadmission@tnjfu.ac.in) மூலமாக அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் தெரிவித்தார்.