தனியார்பள்ளிகள் கல்வி கட்டணம் கேட்டு பெற்றோர்களுக்கு நெருக்கடி
தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும். முதல் தவணையில் 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் வசூல் செய்யலாம்.
சில தனியார் பள்ளி நிர்வாகங்கள், கட்டணம் கேட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு நெருக்கடி தருவதாக புகார் எழுந்துள்ளது
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கொரோனா 2 வது அலை கடந்த ஏப்ரல் மாதம் தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 24 ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. இதனால், கடந்த 2021-22 ம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்று வரை தொடங்கப்படவில்லை. ஆனால், ஒரு சில தனியார் பள்ளி நிர்வாகங்கள், கட்டணம் கேட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு நெருக்கடி தருவதாக புகார் எழுந்தது.
தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும். முதல் தவணையில் 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் வசூல் செய்யலாம். மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் துவங்கிய பின்னர் 2 மாதங்களில் வசூல் செய்யலாம். மீதமுள்ள 25 சதவீதம் கட்டணங்களை வசூல் செய்வது குறித்து கொரோனா பெருந்தொற்றின் நிலையை பொருத்து அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது.