எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 3 நிமிடத்தில் சார்ஜ்: தூத்துக்குடி மாணவர் சாதனை

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 3 நிமிடத்தில் சார்ஜ் செய்யக் கூடிய சார்ஜரை கண்டுபிடித்து தூத்துக்குடி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-07-18 14:05 GMT

தூத்துக்குடி கல்லூரி மாணவர் கார்த்திக்.

தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர், தூத்துக்குடியில் உள்ள வஉசி கல்லூரியில் இளங்கலை இயற்பியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயது முதலே எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் துறையில் ஆர்வம் கொண்ட கார்த்திக் அதுகுறித்து சிந்தித்து வந்துள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் பொதுமக்களிடையே புழக்கத்தில் வந்துள்ளது. ஆனால் இதற்கு 60 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் ஆகிறது மேலும் 10 முதல் 30 யூனிட் வரை மின்சாரம் செலவாகிறது கால விரையமும் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கும் வகையில், மாணவர் கார்த்திக் எலக்ட்ரிக் வாகனங்களை வீட்டு உபயோக மின்சாரம் மற்றும் அதிக வோல்டேஜ் மின்சாரம் உள்ள இணைப்புகள் மூலம் எந்தவித மின்சார விபத்து ஏற்படாத வண்ணம் மூன்றே நிமிடத்தில் சார்ஜ் செய்யக்கூடிய உடனடி மின்சார சார்ஜரை எளிய முறையில் உருவாக்கி உள்ளார்.


இதற்கு சுமார் ரூ. 800 முதல் 1000 வரை செலவாகி உள்ளது என்றும் இதற்கு ஒரு யூனிட் முதல் மூன்று யூனிட் வரை மின்சாரம் மட்டுமே செலவாகும் என்றும் மாணவர் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதனால் 15 ரூபாயில் 60 கிலோ மீட்டர் வரை வாகனங்களை இயக்கலாம் என்றும் இந்த சார்ஜர் ஜீரோ வோல்ட் மின்சாரம் முதல் 320 வோல்ட்டு வரை மின் இணைப்புகளில் சார்ஜ் செய்யலாம் என்றும் மாணவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்த சார்ஜர் பயன்பாட்டிற்கு வந்தால் பெட்ரோல் வாகனங்கள் குறைந்து எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என சாதனை மாணவரான கார்த்திக் தெரிவித்தார். கார்த்திக் தனது கண்டுபிடிப்பை மத்திய அரசின் எலக்ட்ரானிக் சோதனை டெவலப்மெண்ட் மையத்திலும் திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலும் சோதனை அடிப்படையில் செய்து காண்பித்து அதற்குரிய சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

மேலும், மாணவர் கார்த்திக்கின் கண்டுபிடிப்பை பல்வேறு நிறுவனங்கள் பார்த்து சார்ஜரை உருவாக்க முயற்சி எடுத்து வருகின்றன. குறைந்த செலவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் சார்ஜரை கண்டுபிடித்த மாணவர் கார்த்திக்குக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

Similar News