தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வளாகம் திருச்சியில் அமைகிறது
திருச்சியில் சுமார் 31 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வளாகம் விரைவில் அமைக்கப்படுகிறது.
திருவாரூர் அருகே நீலக்குடியில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. திருவாரூரில் செயல்படும் மத்திய பல்கலைக்கழகத்தில், 27 துறைகள் உள்ளன. இதன் மூலம், 55 திட்டங்களில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கிறனர். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணை கல்வி வளாகம் திருச்சியில் அமைக்க இடம் தருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதன்படி, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கே. அபிஷேகபுரம் பகுதியில், 31 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக துணை கல்வி வளாகம் கொண்டுவரப்பட உள்ளது.
இதற்கான பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இடையே அண்மையில் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, இந்த வளாகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் மேலாண்மைத்துறை பாடப்பிரிவுகள் நடத்தப்படும்.
மத்திய பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட 210 கல்வியாளர்களுக்கு பதில், 158 பேராசிரியர்களே உள்ளனர். எஞ்சிய காலி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.