கரூரில் சாரண, சாரணீய மாணவர்களை மாநில விருதிற்கு தேர்வு செய்வதற்கான முகாம்

கரூரில் சாரண, சாரணீய மாணவர்களை மாநில விருதிற்கு தேர்வு செய்வதற்கான முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.;

Update: 2023-11-26 11:43 GMT

கரூர் பரணி பார்க் பள்ளியில் சாரண சாரணீயர் மாணவர்களை மாநில விருதிற்கு தேர்வு செய்வதற்கான முகாம் தொடங்கியது.

பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான (ராஜ்ய புரஸ்கார்) மாநில விருது பெறுவதற்கான மூன்று நாள் மாநில விருது தேர்வு முகாம் கரூர் பரணி பார்க் சாரணர் திடலில் பாரத சாரண, சாரணீய தமிழ்நாடு மாநில தலைமையகம் சார்பாக நடைபெற்றது. இம்முகாமில் பரணி பார்க் சாரணர் மாவட்டத்தைச் சேர்ந்த 400 சாரண, சாரணீயர்கள் பங்கு பெற்றனர்.

பரணி பார்க் கல்விக் குழும தாளாளரும், பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவருமான மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலரும், பரணி பார்க் சாரணர் மாவட்ட துணை தலைவருமான பத்மாவதி மோகனரங்கன், பரணி பார்க் கல்விக் குழும அறங்காவலரும் சாரண மாவட்டத் துணை தலைவருமான சுபாஷினி அசோக் சங்கர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட முதன்மை ஆணையரும், தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையருமான குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் பேசுகையில், “நமது தமிழ்நாட்டு இளம் மாணவர்கள் மத்தியில் சுய ஒழுக்கம், கீழ்ப்படிதல், உயர்ந்த லட்சியம் நோக்கிய கடின உழைப்பு, குழு உணர்வு, ஆக்கபூர்வமான நேர மேலாண்மை, சகோதரத்துவம், மன & உடல் முழுமையான ஆரோக்கியம், படைப்பாற்றல் திறன், ஆக்கல் கலை, சேவை, வாழ்வின் வெற்றி தோல்விகளை சரியாகக் கையாளும் திறன், பயனுள்ள பல்வேறு வாழ்க்கைத் திறன்கள், முதலுதவி, தாய்நாட்டுப் பற்று, தலைமைப் பண்பு ஆகியவற்றை மாணவர்களிடம் செவ்வனே மேம்படுத்தும் மாநில உயர் விருது தேர்வு முகாம் நடைபெற்று வருகிறது.

இத்தேர்வு முகாமில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு கலை, முதலுதவி பயிற்சி, ஆக்கல் கலை, திசை அறியும் பயிற்சி, மதிப்பீட்டு திறன், சீருடை அணி திறன், கலைத்திறன், வனக்கலை, அணி வகுக்கும் திறன் போன்ற பல்வேறு திறன்களை சோதிக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெறுபவர்களுக்கு மாநில உயர் விருதான ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

மாநில தலைமையகத்தால் மாநில விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பின்னாளில் குடியரசுத் தலைவரின் தேசிய விருதுத் தேர்வில் கலந்துகொள்ள தகுதியாவார்கள். மேலும் மாநில, தேசிய விருது பெறும் மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பல்வேறு அரசு சலுகைகள், முன்னுரிமைகள் வழங்கப்படுகிறது. சாரணர் இயக்க மாநில தலைவரும் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தலைமையில் தமிழகம் முழுவதும் இது போன்ற சாரணர் இயக்க சீரிய செயல்பாடுகள் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் செவ்வனே நடைபெறுகிறது,” என்று கூறினார்.

திறன்களின் அடிப்படையில் மாநில விருதுக்குத் தேர்வு செய்வதற்காக பாரத சாரணர் இயக்க தமிழ்நாடு மாநில தலைமையகத் தேர்வாளர்கள் வீரப்பா, பாஸ்கரன், ரூத்பேபி ஆகியோர் பங்கேற்று பரணி பார்க் சாரண, சாரணீயர்களின் திறன்களை மதிப்பீடு செய்தனர். ஏற்பாடுகளை பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா, மாவட்ட துணை ஆணையர்கள் சுதாதேவி, சேகர், சாந்தி, மாவட்ட நிர்வாகிகள், துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News