பள்ளியில் மாணவர்கள் நெற்றிப்பொட்டு வைக்க தடை: நீதிபதி சந்துரு குழு பரிந்துரை
பள்ளியில் மாணவர்கள் நெற்றிப்பொட்டு வைக்க தடை விதிக்க வேண்டும் என நீதிபதி சந்துரு குழு பரிந்துரை செய்துள்ளது.
ஜாதி வன்முறைகளை ஒழிக்க உடனடியாக செய்ய வேண்டியவை, நீண்டகால செயல்திட்டங்கள் என 2 விதமாக பரிந்துரைகளை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒருநபர் குழு வழங்கியது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சக மாணவர்களால் மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவமானது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரியில் மாணவர்களிடையே சாதி பிரச்சனை இல்லாத ஒரு சூழல்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒருநபர் குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அந்த ஒருநபர் குழுவானது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் பள்ளிகளில் சாதி வன்முறைகளை தடுக்க பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக சாதி வன்முறைகளை ஒழிக்க எடுக்கவேண்டிய நீண்டகால நடவடிக்கைகள், குறுகிய கால நடவடிக்கைகள் என 2 வகையாக பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு பள்ளிகளில் உள்ள சாதிய அடையாளங்களை முழுவதுமாக நீக்கவேண்டும். சாதிய அடையாளங்களே இருக்காது என்ற உறுதிமொழி பெற்றப்பிறகு புதிய பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்நிலை மேல்நிலை பள்ளி ஆசிரியர்களை குறிப்பிட்ட இடைவெளியில் இடமாற்றம் செய்யவேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் போது அவர்களுக்கு சமுகநீதி தொடர்பான பார்வை எந்த அளவுக்கு உள்ளது என்பதையும் கண்டரிந்து அதற்கும் மதிப்பெண் வழங்கி ஆசிரியர் நியமனத்தை செய்ய வேண்டும்.
கையில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடைவிதிக்க வேண்டும். பள்ளிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களில் குறிப்பிடும்போதும் ஜாதி அடையாளங்கள் கூடாது. தனியார் பள்ளிகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஜாதி பெயர்களை நீக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடி பள்ளிகள் அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். குறிப்பிட்ட ஜாதி ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது என பல்வேறு பரிந்துரைகள் 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.