தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, நிரந்தரமாக பணியமர்த்த கோரிக்கை
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டுவிட்டு, தகுதியான ஆசிரியர்களை நிரந்தரமாக நியமனம் செய்ய ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
1990 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். 1990-ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கிட உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது.
2004-ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் மாநில அளவிலான கோரிக்கை மாநாட்டை நடத்தியது.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 01.06.2006 முதல் அனைத்து தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கும் கால முறை ஊதியம் வழங்கப்பட்டது. இவ்வாறு தொகுப்பூதியத்தை ஒழித்து ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிய கருணாநிதியின் வழியில் நடை போடுவதாகக் கூறும் இன்றைய தமிழக அரசு மீண்டும் மதிப்பூதிய நியமனத்தைக் கொண்டு வருவது சிறிதும் பொருத்தமற்றதாக உள்ளது.
மேலும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முன்கூட்டியே உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இக்கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆசிரியர் நியமனங்களை மேற்கொண்டிருக்க முடியும். தமிழக அரசின் இந்த நடவடிக்கை இனி வருங்காலங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதையே அரசு கைவிட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமன அதிகாரம் என்பது தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியோ என்ற ஐயத்தையும் ஏற்பட்டுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு தற்காலிக மதிப்பூதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதைக் கைவிட்டு, தகுதிவாய்ந்த நிரந்தர ஆசிரியர்களை நியமித்திட வேண்டும் என்று கூறியுள்ளார்