அன்பான ஆசிரியரை பிரிய மனமில்லாமல் பள்ளியை மாற்றிய 133 மாணவர்கள்
ஆசிரியரை பிரிய மனமில்லாமல் பள்ளியை மாற்றிய 133 மாணவ மாணவிகள் பற்றிய நெகிழ்ச்சி தகவல் கிடைத்துள்ளது.;
ஆசிரியரை பிரிய மனமில்லாமல் 133 மாணவர்கள் அவர் மாற்றம் செய்யப்பட்ட பள்ளியில் சேர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாணவனோ மாணவியோ தங்களது பெற்றோர்களை விட அதிக நேரம் ஆசிரியரின் கண்காணிப்பிலேயே அதிகம் உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். பல ஆசிரியர்கள் தங்கள் பணியை மாணவர்களுக்காக அர்ப்பணித்து மாணவர்களிடம் மட்டுமல்ல அந்தப் பகுதி மக்களிடமும் நன்மதிப்பை பெற்று கொள்கிறார்கள்.
குறிப்பாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் சில ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் கற்றுக் கொடுப்பதையும் தாண்டி ஒவ்வொரு மாணவர்களின் உயர்வுக்கும் தனிப்பட்ட முறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இதன் காரணமாக தான் மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் தெய்வத்திற்கு அதாவது நம்மை படைத்த கடவுளுக்கு முந்தைய இடத்தை ஆசிரியர்கள் பிடித்து விடுகிறார்கள்.
இப்படி சிறப்பிடம் பெறும் ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து மாறுதலாகி செல்லும்போதோ அல்லது பணி ஓய்வு பெற்று செல்லும்போதோ மாணவர்கள் அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழும் நெகிழ்ச்சி சம்பவங்கள் பல இடங்களிலும் பலமுறை நடந்துள்ளது.
இது போன்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. அது என்ன என்பதை இனி பார்ப்போம். நமது அண்டை மாநிலமான தெலுங்கானா மாநிலத்தின் மஞ்சேரியில் மாவட்டம் பனகல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் சீனிவாஸ்.
53 வயதான இவர் அந்த பள்ளியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். அந்த பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலங்களில் கவனம் எடுத்து பணியாற்றினார். அவர் பணியில் சேர்ந்த போது அந்த பள்ளியில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இருந்தனர். தனது முயற்சியால் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு இடமும் சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தார். தனது அன்பால் ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் சீனிவாஸ் கட்டிப்போட்டார். மாணவர்களும் அவரை தங்களின் பாசத்துக்குரியவராகவே பார்த்தனர். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட அக்கறை எடுத்தார். கண்டிப்பும் அவரது தனிச்சிறப்பாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் சீனிவாஸ் அந்த பகுதியில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இதனால் அவர் பணியாற்றிய அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வந்த அந்த பிஞ்சு மாணவர்கள் மிகவும் தவித்து போய்விட்டனர்.
அவரை பிரிய மனம் இல்லாமல் அழுதனர் .மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியரின் பணியிட மாறுதலை திரும்ப பெற அதிகாரிகளிடம் முறையிட்டனர் அதற்கெல்லாம் வழியில்லாமல் போய்விட்டது. இதனால் ஏங்கிய மாணவர்கள் தேற்ற முடியாமல் இருந்த பெற்றோர் ஒரு முடிவுக்கு வந்தனர்.
அந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வந்த 250 மாணவர்களில் 133 பேர் அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்றுக்கொண்டு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அக்கபெல்லா குடாவில் உள்ள தங்களுக்கு பிரியமான ஆசிரியர் பணியாற்றும் பள்ளியில் சேர்ந்து விட்டனர். ஆசிரியர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும். மாணவர்களை தனது அன்பால் கட்டிப்போட்ட இந்த ஆசிரியருக்கு ராயல் சல்யூட் அடிக்கலாம்.