மழையால் மெகா தடுப்பூசி முகாம் 14ம் தேதி நடக்குமா? அமைச்சர் விளக்கம்
பருவமழை நீடித்தாலும், வரும் 14-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.;
இது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் சென்னையில் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதே நேரம், சுகாதாரத்துறையும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 1,858 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. தவிர, 965 நடமாடும் மருத்துவ முகாம்கள் செயல்பட்டுள்ளன.
மழைக்கால பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக ரூ.120 கோடி செலவில் மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. தண்ணீரில் குளோரின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசியை பொருத்தவரை, இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் செல்கிறது. அவ்வகையில், 8-வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருந்தாலும் மெகா தடுப்பூசி முகாம் திட்டமிட்டபடி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.