தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தொற்றால் உயிரிழக்கின்றனர்: அமைச்சர்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தொற்றால் உயிரிழக்கின்றனர் என்று அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்தார்.
19வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளலாம்.
1,71,616 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 6 சதவிகிதம் பேர் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ள 94 சதவிகிதம் பேர் வீட்டுத்தனிமையில் இருந்து வருகின்றனர்.
2,580 ஊராட்சிகளில் 100 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 94.19 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 74.11 சதவிகிதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். சென்னையில் 38,850 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் 21 மாநகராட்சிகளில் 100 சதவிகிதம் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர்.
உருமாற்றம் அடைந்த கொரோனா உள்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு. இதில் எந்தவொரு மாற்றமும் கிடையாது இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரவித்தார்.