தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ் அப்பில் டவுன்லோட் செய்வது இவ்வளவு ஈஸியா?
கொரோனா தடுப்பூசி சான்றிதழை, வாட்ஸ் அப்பில் எளிதாக டவுன்லோட் செய்யும் 4 படி நிலைகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 கோடி என்ற சாதனையை தொட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி நமக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே, அதை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழும் தற்போது மிகவும் அவசியமாகிறது.
வெளியூர் பயணங்கள், ஹோட்டல்களில் தங்கும் போது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ்கள் இன்றி பயனர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, ஆதார் அட்டையை போலவே தடுப்பூசி சான்றிதழும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது.
அதெல்லாம் சரி, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை, எவ்வாறு எளிதாக பெறலாம்; இதை எப்போதுமே கையில் வைத்திருக்க முடியாதே என்ற கேள்வி எழும். தற்போது அதற்கான எளிய வழிமுறையை மத்திய சுகாதாரத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது. எல்லோரும் பயன்படுத்தும் வாட்ஸ் அப் வாயிலாக, எளிதாக கொரோனா தடுப்பூசி சான்றிதழை பெறலாம்.
இதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, MyGov Corona Helpdesk சேவை பயன்படுத்தப்படும் 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைல் போனில் சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.
அடுத்து, தடுப்பூசி செலுத்திய போது நீங்கள் பதிவு செய்து வைத்திருந்த மொபைல் எண்ணில் இருந்து MyGov Corona Helpdesk சேவைக்கு, Download Certificate என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.
மூன்றாவதாக, இதை தொடர்ந்து உங்கள் மொபைலுக்கு வரும் 6 இலக்க OTP எண்ணை டைப் செய்ய வேண்டும். அதன் பிறகு, 30 வினாடிகளில் நீங்கள் பதிவு செய்தவரின் பெயருடன் உறுதி செய்ய, எண் ஒன்றை அழுத்த கோரிக்கை வரும்.
இறுதியாக, நீங்கள் 1 என்று டைப் செய்ய வேண்டும். அவ்வளவு தாங்க, உங்களின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ், உங்கள் வாட்ஸ் அப்பிற்கு வந்துவிடும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இதேபோல், கொரோனா தடுப்பூசி சான்றிதழை, CoWin இணையதளம் அல்லது ஆப் மற்றும் ஆரோக்யா சேது ஆப் வழியாகவும் பெறலாம்.