ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 660 பேருக்கு அபராதம் விதிப்பு
ஈரோடு மாவட்டத்தில், நேற்று ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 660 பேருக்கு அபராதம் விதித்தனர்.;
ஈரோடு மாவட்டத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன், சுகாதாரத்துறை, போலீசார் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, அபராதம் விதிக்க ஈரோடு எஸ்.பி. சசிமோகன், அனைத்து சப்-டிவிசன் டி.எஸ்.பி.க்களுக்கும் உத்தரவிட்டார். ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி ஆகிய ஐந்து டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் நேற்று சோதனை மேற்கொண்டு, முகக்கவசம் அணியாமல் வருவோரை பிடித்து அபராதம் விதித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும், முகக் கவசம் அணியாமல் வந்த, 660 பேருக்கு தலா, 200 ரூபாய் என அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து, ஒரு லட்சத்து, 32 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.