ஆயத்தமாகிறது 'ஜிகர்தண்டா-2'..!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்.;
பைல் படம்
அண்மைக் காலமாகவே தமிழ்த் திரையுலகில் ஏற்கெனவே வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராவதும் அவை எதிர்பார்ப்பைக் கடந்த வெற்றியைப் பெறுவதும் தொடர்கதையாக உள்ளது. அவ்வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது 'ஜிகர்தண்டா' படத்தின் ஆயத்தப் பணிகளை தற்போது ஆரம்பித்திருக்கிறார்.
'ஜிகர்தண்டா' படம் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு பெருவெற்றியைப் பெற்றுத் தந்தது. இப்படத்தில் கொடூரமான கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது. அதோடு, சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது விவேக் ஹர்ஷனுக்குக் கிடைத்தது.
இந்தநிலையில், மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அச்சாரமாக, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தற்போது படத்தின் இரண்டாம் பாகத்துக்கான முதற்கட்டப் பணிகள் நடப்பதை உறுதிசெய்துள்ளார்.
அதன் வெளிப்பாடாக, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'ஜிகர்தண்டா-2' படத்தின் ஸ்கிரிப்ட் பேப்பரை வைத்து பூஜை செய்துள்ள கார்த்திக் சுப்புராஜ், அந்தப் புகைப்படங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்தப் பகிர்வில், அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்ட ட்வீட், திரையுலகினரிடையேயும் அவரது ரசிகர்களிடையேயும் ஏராளமான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.