சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு- சிலிண்டருக்கு ரூ.15 உயர்வு
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. இது இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் ரூ.700க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, கடைசியாக, ரூ.900 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. அதன்படி, இன்று காலை ஒரு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை நகரின் நிலவரப்படி, ஒரு சிலிண்டர் விலை 915 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒரே ஆண்டில் 200 ரூபாய்க்கும் மேல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது, நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.