வேலை இல்லையா, இனி கவலை வேண்டாம் -தமிழக அரசு உதவித் திட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது;

Update: 2025-04-16 09:00 GMT

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் உமா அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பின்னும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் தகுதியான இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும். இதில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலை தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தத் தொகை உயர்த்தப்பட்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, மேல்நிலை தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் பத்தாண்டுகள் வரை வழங்கப்படும். இந்த நிதியுதவிக்காக, 2024 ஜூன் 30 வரை, ஐந்து ஆண்டுகள் பதிவு முடிவடைந்த இளைஞர்கள் மற்றும் ஒரு ஆண்டு பதிவு முடிவடைந்த மாற்றுத்திறனாளிகள் தகுதியானவர்களாக கருதப்படுவர். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்கள் அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்களுடன் நேரில் செல்லலாம். மேலும், www.tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News