வேளாண்மைத்துறை விதைப்பரிசோதனைக் கட்டணம் திடீரென ரூ.50 அதிகரிப்பு

வேளாண்மைத் துறையில் விதைப்பரிசோதனைக் கட்டணம் திடீரென ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-29 12:45 GMT

கோப்பு படம் 

இது குறித்து நாமக்கல் விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சரண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விவசாயிகள் தரமான விதையை உபயோகித்தால் மட்டுமே நல்ல மகசூல் பெற முடியும். தரமான விதை என்பது விதையின் முளைப்புத்திறன், புறத்தூய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். தேவையான பயிர் எண்ணிக்கை பராமரிக்க நல்ல முளைப்புத்திறன் இருத்தல் வேண்டும். நல்ல முளைப்புத் திறன் கொண்ட விதையை மட்டும் விதைப்பதால் விதை செலவு குறையும்.

புறத்தூய்மை பரிசோதனையில் பிற பயிர் விதை மற்றும் களை விதை ஆகிய கலப்புகள் இல்லாமல் இருத்தல் வேண்டும். விதைகளின் முளைப்புத்திறனை காக்க ஈரப்பதத்தை தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். விதைகளை சேமிக்கும்போது பூச்சி நோய் மற்றும் குறிப்பிட்ட அளவுக்குமேல் ஈரப்பதம் இருத்தல் கூடாது. அதனால் விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்க விதை பரிசோதனை மூலம் ஈரப்பதத்தை தெரிந்துகொள்ளுதல் அவசியம்.

எனவே விதை விற்பனையாளர்கள் தாங்கள் இருப்புவைத்துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விவசாயிகள் விதைப்புக்காக சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும் விதைகளில், விதை மாதிரி எடுத்து, வேண்டுகோள் கடிதத்துடன நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி, விதைகளின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே விதைப் பரிசோதனை கட்டணமாக ஒரு மாதிரிக்கு ரூ.30 ஆக இருந்தது. அரசு உத்தரவின்படி வருகிற ஏப்.1ம் தேதி முதல் விதைப்பரிசோதனைக் கட்டணம் ஒரு மாதிரிக்கு ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News