மண் வளமே விவசாயிகளின் நலன்: வேளாண்மைத்துறை பயிற்சி முகாமில் அறிவுரை
தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ், மண்நலம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;
தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ், மண்வள அட்டை இயக்கத்தின் சார்பாக, விக்ரமம் கிராமத்தில், 118 விவசாயிகளுக்கு மண் நலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு, மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தலைமை வகித்தார். விக்ரமம் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் முன்னிலையில் நடைபெற்ற பயிற்சியில், மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் பேசுகையில், "மண் வளமே விவசாயிகளின் நலனாகும். எனவே விவசாயிகள் மண்ணை பரிசோதனை செய்து மண்ணில் இருக்கும் சத்துக்களுக்கு தகுந்தவாறு தேவையான உரங்களை மட்டும் தேவையான நேரத்தில் இட்டு உரச் செலவை குறைத்து, மண் வளத்தை பெருக்க வேண்டும்" என்றார்.
மதுக்கூர் கிராம முன்னோடி விவசாயி வித்யாசாகர் பேசும்போது, "விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் மாடுகளைப் பராமரிப்பதன் மூலம், விவசாயிகள் தற்சார்பாக ஜீவாமிர்தம், மீன் அமினோ அமிலம் மற்றும் டீகம்போஸர் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம், மண்ணின் வளத்தை மண்ணின் உயிர் சத்துக்களை மற்றும் நுண்ணுயிர்களின் பெருக்கத்தை அதிகரித்து இயற்கையான முறையில் மண்ணின் நலத்தை வரும் சந்ததிக்கு எவ்வாறு கொண்டு செல்லலாம்" என்று விளக்கினார்.
அத்துடன், நெல் வயலில் அசோலா பயன்படுத்துவதன் மூலம் களைகளை கட்டுப்படுத்துவதோடு பயிருக்கு தேவையான தழைச்சத்தை காற்றில் இருந்து எவ்வாறு கிரகித்துக் கொடுக்கிறது; இதனால் இயற்கையாக மண்ணின் வளமும் பயிரின் வளமும் எவ்வாறு செலவின்றி அதிகரிக்கிறது என்பதை, விவசாயிகளுக்கு அசோலாவை கொடுத்து விளக்கிக் கூறினார். வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன், மண்வள அட்டையின் பயன்பாடு பயன்படுத்தும் முறைகள் மண்ணின் குறைகளை எவ்வாறு மண் வள அட்டை மூலம் கண்டறிந்து நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இப்கோ நிறுவன தஞ்சை மாவட்ட அலுவலர் சரவணன் பேசுகையில், "பயிருக்கு தேவையான தழைச்சத்தை வழங்கும் புதிய தொழில்நுட்பமான, திரவ வடிவிலான நானோ யூரியாவை மேலுரமாக இடலாம் அதற்கு ஒரு லிட்டர் நீரில் 4 மிலி வீதம், நானோ யூரியா உரத்தை கலந்து பயிர்கள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். இதனால் பயிர்களுக்கு தழைச்சத்து உடனடியாக கிடைக்கிறது. ஒரு ஏக்கருக்கு 500 மில்லி நானும் யூரியா உரத்தை தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகள் படும்படி தெளிக்கலாம். இதனால் ஒரு மூட்டை யூரியா உரம் இடுவதால் கிடைக்கும் பயன், 500 மிலி நானோ யூரியா பயன்படுத்துவதால் கிடைக்கும்" என்றார்.
தொடர்ச்சியாக யூரியாவை அதிகளவில் பயன்படுத்துவதால் எவ்வாறு பூச்சி நோய்கள் அதிகரிக்கிறது என்பது பற்றியும் விளக்கிக் கூறினார். வருங்காலங்களில் பொட்டாஷ் உரத்தையும் விவசாயிகளின் தேவைக்கேற்ப திரவ பொட்டாஸ் ஆக பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையைப் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதில், விக்ரமம் கிராம முன்னோடி விவசாயிகள் பழனியப்பன், பிரபாகர், மணிவண்ணன் ஆகியோர், வித்யாசாகர் மற்றும் இப்கோ அலுவலர் சரவணன் ஆகியோருடன் கலந்துரையாடி தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை முன்னோடி விவசாயி பிரபாகரன் செய்திருந்தார். வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன், அட்மா திட்ட அலுவலர் ஐயா மணி, சிசி பணியாளர் பவித்ரா ஆகியோர் மண்வள பயிற்சிக்கான கருத்து காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.