அதிமுகவில் சசிகலாவை சேர்க்க ஓபிஎஸ் பச்சைக்கொடி!
அதிமுகவில் மீண்டும் சசிகலா மற்றும் தினகரனை சேர்க்க ஓபிஎஸ் திட்டம் என தகவல் வெளியாகி உள்ளன.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இது வரை இப்படி தோற்றதே கிடையாது என்று கட்சி நிர்வாகிகள் சிலர் புலம்பி கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்களும் அவர்களது சுயலாபத்துக்காக திமுகவுக்கு தாவி வருகின்றனர். இதே நிலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகிறது. இப்படியே சென்றால் அதிமுக என்ற ஒரு கட்சியே இல்லாமல் போய்விடும் என்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். இதற்கிடையே ஜெயக்குமார் கைது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் அதிமுக சிக்கி சின்னாபின்னாமாகி உள்ளது. இவற்றுக்கெல்லாம் காரணம் அதிமுக 2 துண்டாக பிரிந்து கிடப்பதுதான். எனவே பிரிந்து கிடக்கும் அதிமுகவையும், அதிமுகவினரையும் ஒன்று சேர்த்தால் மட்டுமே எதிர்காலத்தில் வெற்றி பெற முடியும் என்ற முடிவில் கட்சி மேலிடம் அவ்வப்போது நினைக்கின்றது.
இந்நிலையில் இன்னும் சில நாட்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் உள்ளார். அவ்வாறு அவர் சுற்றுப்பயணம் செய்யும்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகரை சந்திப்பார். அவ்வாறு சந்தித்தால் அவர்களும் அவருடன் சென்றுவிடுவார்களா? என்ற அச்சமும் கட்சி மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தேனியில் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதில் அதிமுகவை பலப்படுத்த பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்று சேர்க்க வேண்டும். இதற்கு சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எது எப்படியோ? பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேர்ந்தால்தான் இனி கட்சியை நடத்த முடியும் என்று அதிமுகவின் உண்மை விசுவாசிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.