எள் சாகுபடியில் அதிக மகசூலுக்கு விவசாயிகள் இதை செய்தால் போதும்

எள் சாகுபடியில் அதிக மகசூலுக்கு விவசாயிகள் இதை செய்தால் போதும்
X

கோப்பு படம் 

பயிர் பராமரிப்பு தொழில் நுட்பங்களை கடைபிடித்து எள் சாகுபடியில், அதிக மகசூல் பெறலாம் என, வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், குளிர்காலம் மற்றும் இறவை பட்டத்தில், எள் பயிரிடப்படுகிறது. இப்பயிருக்கு, அதிக நீர் தேவையில்லை.அதிக வெப்பத்தை தாங்கக்கூடியது. சரியான பயிர்ப் பராமரிப்பு தொழில்நுட்பங்களை தவறாமல் கையாண்டால், எள் பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்.

என்ன செய்ய வேண்டும்?

ஏக்கருக்கு, இரண்டு கிலோ எள் விதையை, மணலுடன் கலந்து, சீராகத்தூவி விதைக்க வேண்டும். ஏக்கருக்கு, 1.5 கிலோ விதையை வரிசை பயிராக விதைக்கலாம். கார்பன்டாசிம், ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் வீதமும், டிரைக்கோடெர்மா, ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் வீதமும், தலா ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா, இரண்டு கிலோ விதைக்கு என்றளவில் கலந்து விதைக்கலாம்.

மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கத்தை அதிகரிக்க, கடைசி உழவின் போது, மக்கிய தொழு உரத்தை ஏக்கருக்கு 5 டன் இடவேண்டும். எள் பயிருக்கு குறைந்த நீர்பாசனம் போதுமானது. இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. எள் செடி முளைத்து, 5 இலை விடும்போது ஒரு நீர் பாய்ச்சுவதும், பிறகு பூவும், காயும் தோன்றும்போது ஒரு நீர் பாய்ச்சுவதும் போதுமானது.எள் பயிரை, காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். பயிரின் வயதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும். தண்டின் அடிப்பாகத்தில் இலைகள் உதிர்ந்து காணப்படும்.

எள் பிரித்தெடுப்பது எப்படி?

தண்டின் மேல் பாகத்தில் இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும். தண்டில் மத்திய பாகம் வரை காய்கள் மஞ்சள் நிறமாக காணப்படும். தண்டில் கீழ் பாகத்தில் இருந்து, 10வது காயை உடைத்துப் பார்த்தால், நிறம் மாற்றம் காணப்படும் (கரும்பு மற்றும் பழுப்பு நிறம்). வெள்ளை நிற எள்ளிற்கு இது பொருந்தாது. செடிகளை அடியோடு (வேரை மட்டும் விட்டு) அறுத்து, பின், செடிகளை வட்டமாக ஒன்றின் மீது ஒன்றாக தண்டு வெளியில் தெரியும் படியும் அடுக்க வேண்டும். பிறகு வைக்கோல் கொண்டு மூடிவிட வேண்டும். அதையடுத்து, 5ம் நாள் செடிகளை வெய்யிலில் காய வைத்து, உலுக்கி எள்ளினை பிரித்தெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!