மூடப்படும் அபாயத்தில் மோகனூர் சர்க்கரை ஆலை: முதல்வர் காப்பாற்றுவாரா?
Mohanur sugar mill issue
Mohanur sugar mill issue-இது குறித்து, நாமக்கல் மாவட்டம், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மணிவண்ணன், பொதுச்செயலாளர் மணிவேல் ஆகியோர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பு அரவை பருவத்துக்கு, 1.50 லட்சம் டன் கரும்பு மட்டுமே உள்ள நிலையில், ஆலை அரவையை, நவம்பர் மாதம் துவக்கி, பொங்கல் பண்டிகைக்குள் முடிக்க வேண்டும். இதன்மூலம், பொங்கல் பண்டிகைக்குப் பின், வெட்டுக்கூலி அதிகமாகி விவசாயிகள் நஷ்டம் அடைவதை தடுக்க முடியும். வெளி ஆலைகளில் இருந்து கரும்பை கொண்டுவருவதால், ஆலைக்கு அதிக நஷ்டம் ஏற்படும்.
ஆலை நிர்வாகம் அலட்சியம்
காலத்தே கரும்பை வெட்டிக் கொடுப்பதன் மூலம், விவசாயிகள் ஆர்வத்துடன் கரும்பு நடவு செய்து, ஆலைக்கு கரும்பு பதிவு செய்தால், கரும்பு பதிவு அதிகரிக்கும். இது குறித்து பல முறை விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆலை நிர்வாகம், விவசாயிகளின் கோரிக்கைகளை நிராகரித்து, சர்க்கரை கட்டுமானத்தை உயர்த்தி, ஆலைக்கு லாபம் ஏற்பட வழிவகை செய்வதாகவும், வெட்டுக்கூலி உயராமல் இருக்க, கிராம வாரியாக குழு அமைத்து, கட்டுப்படுத்தப்படும் எனவும் கூறினார்கள்.
இந்நிலையில், வெளி ஆலைகளில் இருந்து, தினமும் 700 டன் கரும்பு எடுத்து வந்து இங்கு அரவை செய்யப்படுகிறது. அதனால், ஆலைக்கு கரும்பு பதிவு செய்த விவசாயிகளின் வயல்களில், உரிய காலத்தில் கரும்பைவெட்டிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வெட்டுக்கூலியும், டன் ஒன்றுக்கு ரூ.850 முதல், 900 ஆக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், பொங்கல் பண்டிகைக்குப் பின் வெட்டுக்கூலி டன்னுக்கு ரூ. 1,200 கொடுக்க வேண்டிய அபாயம் உள்ளது.
ஆலை மூடப்படும் அபாயம்
தற்போது, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சர்க்கரை கட்டுமானம் 7.85 ஆக உள்ளது. அருகில் உள்ள தனியார் ஆலைகளில் 9.20, 9.50 ஆக உள்ளது. 2010–11ல் இந்த ஆலை ரூ.100 கோடி லாபத்தை வைப்பு நிதியாக வைத்திருந்தது. ஆனால், 10 ஆண்டு கழிந்து தற்போது ரூ. 136 கோடி கடனில் உள்ளது. நடப்பு அரவை பருவத்தில் ரூ. 15 கோடி மேலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதே நிலை நீடித்தால், அதிக நஷ்டம் ஏற்பட்டு, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை அடுத்த ஆண்டே மூடக்கூடிய அபாயம் உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பின், 80 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஒரு டன் கரும்புக்குவெட்டிக்கூலியாக, கூடுதலாக ரூ. 300 வீதம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், 80 ஆயிரம் டன்னுக்கு ரூ.2.40 கோடி பணத்தை விவசாயிகள் தங்கள் கரும்பு தொகையில் இருந்து கொடுக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே, கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளை காப்பாற்றவும், வாழ்வாதாரம் மேம்படவும், சர்க்கரை ஆலை லாப நோக்கில் செயல்படவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu