Zombie narcotics-அமெரிக்காவை அச்சுறுத்தும் ஜாம்பி போதைப்பொருள் ;போதைக்கெதிரான விழிப்புணர்வு தேவை..!

Zombie narcotics-ஜாம்பி போதைப் பொருள் பயன்படுத்தீயவர்கள் விழுந்து கிடக்கும் காட்சி. (கோப்பு படம்)
அமெரிக்காவில் இப்போது ஜாம்பி போதைப் பொருள் என்பது பிரபலமாகி வேகமாகப் பரவி வருகிறதாம். அதென்ன ஜாம்பி போதை பொருள். அது என்ன பாதிப்பை ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் மோசமான ஆபத்து என்ன என்பதைப் பார்க்கலாம்..
அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் போதை பழக்கம் அதிகரித்தே வருகிறது. அதிலும் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்திற்கு அடுத்து இந்த போதை பயன்பாடே பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
பல மாகாணங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டப்பூர்வமானதாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் கோஷம் போடத் தொடங்கிவிட்டனர். அந்தளவுக்குப் போதைப்பொருள் பிரச்னை அங்கு தலைவலியாக மாறியுள்ளது.
உச்ச போதையை அடைய அவர்கள் பல வினோதமான பொருட்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். இது அவர்களின் உடல்நிலையையும் கடுமையாகப் பாதிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இதேபோல தான் வீடியோ ஒன்று பரவியது. அதில் அமெரிக்காவில் பல இடங்களில் மக்கள் நிற்கவே முடியாத அளவுக்கு வித்தியாசமாகத் தள்ளாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்களை 'ஜாம்பி வைரஸ்' தாக்கியதாகவும் இதன் காரணமாகவே அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் பரவின.
இந்த விவகாரத்தில் இப்போது உண்மை என்ன என்பது தெரிய வந்துள்ளது. அது ஜாம்பி வைரஸ் இல்லை. அதுவும் ஒரு வகை போதைப் பொருள் தான். 'டிராங்க்,' 'ட்ராங்க் டோப்', 'ஜாம்பி மருந்து' என்றும் அழைக்கப்படும் இந்த போதை மருந்தின் பெயர் சைலாசின். இந்த போதை மருந்தை எடுத்துக் கொண்டால் மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்படும். இதை எடுத்துக் கொண்டால் மயக்க மருந்தை எடுத்துக் கொண்டது போல இருக்குமாம். தீவிர தூக்கம், மன அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படும். இது பற்றி அந்த நாடு மிகுந்த அச்சம் அடைந்து உள்ளது.
அங்கு இளைய தலைமுறையினர் இது போன்ற கேடு விளைவிக்கும் போதை பொருட்களில் இருந்து வெளியே வரவில்லை என்றால், அந்த நாடு வரும் காலங்களில் மிகப்பெரும் அழிவை சந்திக்க நேரிடும்.
இந்தியாவும் இது போன்ற ஆபத்துகளை எதிர் கொள்ள தயார் ஆகவேண்டும். இளைய தலைமுறையினருக்கு யோகா, தியானம் போன்ற நல்ல விசயங்களை பள்ளிகளில் கட்டாயம் ஆக்க வேண்டும்.
பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாகவும், போட்டி போடுவதை மட்டுமே வெற்றி என்று கற்றுத் தந்த இந்த மெக்காலே கல்வி முறைக்கு மாற்றாக , அறம் சார்ந்த கல்வி முறைக்கு மாற வேண்டும். இல்லை என்றால், நாளை நம் குழந்தைகளும் இது போன்ற அழிவுகளுக்குள் தள்ளப்படலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu