உலக பத்திரிக்கை (மே 3)சுதந்திர தினம்
பைல் படம்
இன்று 30வது உலக பத்திரிக்கை சுதந்திர தின நிறைவு தினம். 1993ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள "யுனெஸ்கோ" அமைப்பு பத்திரிக்கை சுதந்திரத்தின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கிலும், பத்திரிக்கை சுதந்திரத்திற்காக உயிர்நீத்த பத்திரிக்கையாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், தற்போது களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களை கெளரவிக்கும் வகையிலும் இந்த தினத்தை மே 3, பத்திரிக்கை சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்று ஐ.நா.சபைக்கு பரிந்துரைத்தது. அதனை ஏற்றுக்கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை பத்திரிக்கை சுதந்திர தினமாக கொண்டாட ஆரம்பித்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஐநா ஒரு கருப்பொருளை வெளியிடும். 2023ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்-"Shaping a future of Rights: Freedom of Expression as a driver for All other Human Rights " "உரிமைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பது; மற்ற அனைத்து மனித உரிமைகளுக்கும் ஒரு இயக்கியாக கருத்துச் சுதந்திரம்". "பத்திரிக்கைச் சுதந்திரம்" என்பது ஜனநாயகத்தின் ஆணிவேர். மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க பத்திரிக்கை சுதந்திரம் அவசியம்.
பத்திரிக்கைச் சுதந்திரம் என்பது பத்திரிக்கை நடத்துவதற்கான சுதந்திரம் மட்டுமன்று. எவ்வித இடையூறும் அச்சுறுத்தலும் இன்றி செய்திகள் திரட்டப்படல்; எவ்வித தடங்கலும் இல்லாமல் அது செய்தித்தாள் அலுவலகங்களைச் / தொலைகாட்சி, வானொலி / சென்றடைதல் ; தணிக்கைக் கட்டுபாடின்றி செய்திகளை அச்சிடல்; அச்சான செய்திகள் தடை ஏதுமின்றி மக்களிடம் பரவ விடுதல்; செய்தி வெளியிட்டமைக்காகப் பத்திரிக்கைகளையும் பத்திரிக்கையாளர்களையும் ஒடுக்கும் அடக்குமுறைகள் இல்லாத சூழ்நிலை அமைதல்- இவைகள் பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கிய கூறுகள்.
இது குறித்து புதுக்கோட்டை வாசகர் பேரவை செயலர் சா. விஸ்வநாதன் கூறியதாவது:
இந்தியாவின் முதல் பத்திரிக்கை ஆணைக்குழு (press Commission)"பொது அதிகாரத்தின் எந்த வகையான தலையீடும் இல்லாமல் கருத்துக்களைக் கொண்டிருக்கவும், செய்திகளைப் பெறவும், அச்சிட்டு வெளியிடவும் இருக்கின்ற சுதந்திரம்" என்று பத்திரிக்கை சுதந்திரத்தை விளக்குகிறது. பத்திரிக்கை சுதந்திரம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள "கருத்துச் சுதந்திரத்தின்" மற்றொரு வெளிப்பாடே.
பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு பல்வேறு தடைகளும், அச்சுறுத்தல்களும் எப்போதும் உண்டு. நவீன உலக வரலாற்றில், கம்யூனிசம், பாசிசம், நாசிசம் போன்ற கொள்கைகளை செயல்படுத்திய பழைய சோவியத் யூனியன், முஸோலினியின் இத்தாலி, ஹிட்லரின் ஜெர்மனி போன்ற நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் என்பதே கிடையாது. இந்தியாவில் அவசரநிலையின்போது பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக்குறியானது.
சுதந்திரமான பத்திரிக்கைகளே ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியும். அதுவே ஆட்சியாளர்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ளவும் உதவும் . மிகச் சமீபத்திய உதாரணம், தமிழக அரசு 12 மணி வேலைநேர சட்டத்தை திரும்பப் பெற்றது.
உண்மைச் செய்திகளை வெளியிட்டதற்காக பத்திரிக்கையாளார்கள் பலரும் தங்கள் இன்னுயிர்களை இழந்திருக்கிறார்கள். அவர்களின் தியாகத்தை இந்த நாளில் நினைவு கூறுவோம். பல்வேறு இன்னல் களுக்கிடையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பத்திரியாளர்களை இந்த தினத்தில் பாராட்டுவோம்.நம் உரிமைகளைப் பெற, பாதுகாக்க பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க உறுதியேற்போம் என்றார் அவர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu