உலகை உலுக்கிய புகைப்படம் : படம் எடுத்த புகைப்படக்காரர் தற்கொலை, ஏன்?
உலகப் புகழ்பெற்ற இந்தப் படம் செய்தித்தாளில் வெளிவந்து உலகையே உலுக்கவைத்தது. நம் பதிவில் உள்ள புகைப்படம் உலகப்புகழ் பெற்றது. ஏப்ரல் 1, 1993ம் ஆண்டு இப்படத்தை தன் கேமராவில் படம் பிடித்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார். ஏன்? தன்னிரக்கமா? மனசாட்சியா..? மனக்குமுறலில் அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்று நல்ல உள்ளங்களுக்கு மட்டும் விளங்கும்.
கெவின் கார்ட்டர்- உலக புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும், ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு, நகரம், கிராமம், காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993ம் ஆண்டில் இந்த ஆர்வம் அவரை தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் அழைத்துச் சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருக நீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கிடந்தனர். பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் கேமராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார். இறுதியாக அவர் முயற்சி கைகூடியது.
ஒரு நாள் தன் கேமராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி ஒன்று தென்பட்டது. பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சான் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார். அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.
தோளில் இருந்து கேமராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது. ஆம். அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கு பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக் கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது. எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும். மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார். சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு 'க்ளிக்' செய்தார். இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது. இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் கேமராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் மாதம் 26 ஆம் தேதி காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் இருக்கிறாளா? பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைபேசி ஆபரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டரிடமோ இல்லை.
1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிய புகைப்படத்திற்கான புலிட்சர் விருதைப் பெற்றுக்கொண்டார். இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது. விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கெவினுக்கும், அங்கு இருந்த பிணம் தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமான செயல் தானே? 'குறைந்தபட்சம் புகைப்படக்காரர், கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது விட்டிருக்கலாம். கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்.
ஆனால், இவற்றில் எதையும் செய்யாமல் உணர்ச்சியற்ற ஜடமாக வெறும் படத்தை மட்டுமே எடுத்தார். அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார். கெவின் தற்கொலை செய்துகொண்டார். அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.
முதல் வரி 'I am Really, Really Sorry... நாம் எவராக இருந்தாலும் சரி, நம்மிடம் மனிதம் இல்லையெனில் நாமும் மிருகத்திற்கே ஒப்பாவோம்..' என்று எழுதி வைத்திருந்தார். தான் மிருகமாகவே நடந்து கொண்டுவிட்டோம் என்ற மன உறுத்தல், அவரை கொன்றுவிட்டது. அவர் எடுத்த புகைப்படத்தை பார்த்து மனம் கலங்காதவர் இருக்க முடியாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu