அமைதியா இருக்கிறது ஒன்னும் தப்பில்லையே..? உலகமே திரும்பி பார்க்குது..!

அமைதியா இருக்கிறது ஒன்னும் தப்பில்லையே..?  உலகமே திரும்பி பார்க்குது..!
X

போரில் சிதிலமாகி கிடக்கும் கட்டிடங்கள்.

ரஷ்யா-உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் ஆதரவை நாடுவதன் காரணம் என்ன? அது சரியா?

ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து ஆக்கிரமிப்பு செய்வது இங்கு விவாதப்பொருள் அல்ல. ஏனெனில் அது உலக நாடுகளுக்கே தெரியும். ஆனால், ரஷ்யா வேறொரு நாட்டின் மீது படையெடுப்பது முற்றிலும் தார்மீக அடிப்படையில் தவறு என்கிறது மேற்கத்திய நாடுகள்.

சரி, அது எவ்வாறாயினும், ஈராக், சிரியா அல்லது லிபியா மீது குண்டுவீசத் தொடங்கும் முன் மேற்கத்திய நாடுகள் இந்தியா கருத்துச் சொல்ல வேண்டும் என்று காத்திருக்கவில்லை. அவ்வாறிருக்க மேற்கத்திய நாடுகளுக்கு ஏன் இப்போது இந்தியாவின் ஆதரவு தேவைப்படுகிறது?

இனப்படுகொலை :

கொஞ்சம் முன்னாடி போய் வரலாற்றை பார்ப்போம். 1971 ம் ஆண்டில் வங்காள இனப்படுகொலை நடந்தபோது, ​​மேற்கு நாடுகள் அதைக் கண்டிக்க முன்வரவில்லை. அவர்கள் இனப்படுகொலைக்கு தீவிரமாக உதவியதுதான் மிகக்கொடூரம். இந்த இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வர, வங்காளதேசம் என்ற புதிய தேசத்தை உருவாக்க, சோவியத் ஒன்றியத்தின் (USSR) உதவியை இந்தியா பயன்படுத்திக்கொண்டது.

தார்மீக அடிப்படையில் பேச முடியாவிட்டால்கூட குறைந்தபட்ஷமாக நடைமுறை அடிப்படையிலாவது பேச வேண்டும். வங்காள இனப்படுகொலை பிரச்சினையில் ஆதரவளிக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு இதனால் என்ன பயன்? மேற்கத்திய நாடுகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? என்று இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்திக்கவேண்டும். வேறு எதிலும் உடன்பட்டுப் போகாத இந்தியாவும் பாகிஸ்தானும் இதில் ஒரே கொள்கையை கொண்டிருந்தது ஆச்சர்ய உண்மை. ஆமாம், அதனால்தான் இந்தப் பிரச்னை முடிவுக்கு வர முடிந்தது. வங்காளதேசம் என்ற ஒரு தனி நாடு உருவானது.

80கள் முழுவதும், போராட்டத்திற்கு பயிற்சி அளித்து ஆப்கானிஸ்தானை மேற்கு நாடுகள் சீர்குலைத்தபோது, ​​இந்தியா அதை நிறுத்திக்கொள்ளுமாறு கெஞ்சியது. இது 80 களின் பிற்பகுதியிலிருந்து 90 களிலும் கூட இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவைத் தோற்கடித்த பிறகு, இந்தியாவைச் சுற்றியுள்ள நகரங்களில் குண்டுகளை வீச போராளிகளுக்கு ஆப்கானிஸ்தான் பயிற்சி அளித்தது.

மேற்கத்திய நாடுகளின் சொந்த நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளானபோதுதான் அதன் முட்டாள்தனத்தை உணர்ந்தன. அப்போதும் கூட அவர்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக தங்கள் தவறான செயல்களை தொடர்ந்தனர் என்பது வருத்தமான செய்தி.

ரஷ்ய ஆதரவு :

கடந்த நூற்றாண்டில், ஐரோப்பா, இந்தியப் பாதுகாப்பிற்குச் செய்ததை விட, ஐரோப்பியப் பாதுகாப்பிற்கு இந்தியா அதிகம் செய்திருக்கிறது. ரஷ்யா ஒரு அமைதியான நாடாகவோ அல்லது ஜனநாயக நாடாகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், குறைந்தபட்சம் UNSC-ல் இந்தியாவுக்கு ஆதரவாகவே இருந்தது.

மேற்கத்திய நாடுகளுக்கு நம்பிக்கையளிக்கவும், ஆதரவு அளிக்கவும் நாம் விரும்பினால், அது இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். அதாவது நாம் அவர்களுக்கு ஒன்று செய்தால் அதற்கு பிரதிபலன் அவர்களிடம் இருந்து நமக்கு இருக்கவேண்டும்.

துண்டித்துக்கொண்ட ஈரான் உறவு :

அப்படி இல்லை என்பதை வலியுறுத்த இந்த உதாரணம் போதும். மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தால், ஈரானுடனான உறவை இந்தியா முறித்துக் கொண்டது. ஈரானிடம் இருந்து எரிவாயு இறக்குமதியை விட்டுக்கொடுத்தால் அதற்கு ஈடாக இந்தியாவுக்கு அணுசக்தி பொருட்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இந்தியா அணு எரிபொருளைப் பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

அதோடு விட்டார்களா? ஈரான்,இந்தியாவுக்கு சாதகமான துறைமுக அணுகலையும், இந்தியாவுக்கான எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தையும் கைவிட்டது. இதுதான் அவர்கள் செய்த நன்றிக்கடன். இப்போது, இந்தியா மீண்டும் ஒருமுறை தியாகம் செய்யவேண்டும் என்று கேட்கப்படுகிறது. இது தார்மீக அடிப்படையிலும் இல்லை; நடைமுறை அடிப்படையிலும் இல்லை. மேற்கத்திய நாடுகள் எப்போது இந்த சுயநலப் போக்கிலிருந்து வெளிவரும்? எப்போது இந்த உலகை மதிக்கத் தொடங்கும்?

இந்த லட்சணத்தில்தான் உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்துள்ளபோது இந்தியா குரல் கொடுக்கவேண்டுமாம். இவர்கள் வாயெல்லாம் கட்டப்பட்டுள்ளதா?

Tags

Next Story