உக்ரைனும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியம், ஏன்?

உக்ரைனும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியம், ஏன்?
X

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி 

இந்தியா, ரஷ்யா மீது நட்பும், பாசமும் வைத்திருந்தாலும், அந்நாட்டின் உறவை எச்சரிக்கையாக கையாள்கிறது.

ரஷ்யாவுடன் இந்தியா நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும் கவனமாக கையாள்கிறது. காரணம் நல்லவர் என்று சொல்லி கொண்டு உலகின் மிக பெரிய பலம் பொருந்திய நாடுகளுக்கு மத்தியில் வாழ்வது சாத்தியமில்லை. நாட்டை ஆள்பவர் வல்லவராக இருக்கும் வரையே நாடு நிலைத்திருக்கும்.

அனைத்து உலக நாடுகளுடனும் நல் உறவை மேற்கொள்வதே இப்போது இந்தியாவிற்கு நல்லது. நாட்டுக்கு நல்லது. இதற்கு உக்ரைனும் விதிவிலக்கல்ல. பெரும்பாலோனோர் பார்வை உக்ரைனுக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்பதுவே. ஆனால் உக்ரைன் அழிந்தால் இந்தியாவுக்கு பேரடியாக இருக்கும்.

ஆச்சர்யமாக இருக்கிறதா? படித்து பாருங்கள் ஆச்சர்யத்தின் உண்மை விளங்கும். இந்தியாவின் பாதுகாப்பு சாதனங்களில் 65% ரஷ்யாவுடையது. ரஷ்யாவிடம் ஒரு கெட்டபழக்கம் உள்ளது. ஆயுதங்களை குறைந்த விலைக்கு கொடுத்து விட்டு, பராமரிப்பு என்ற பெயரில் தேவைக்கு அதிகமான பணத்தை கறப்பதில் அந்த நாடு கில்லாடி. மோடி வந்த பின்னர் ரஷ்யாவின் இந்த நாடகம் பலிக்கவில்லை.

ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, சுயசார்பு இந்தியா என தற்காப்பு கலைகளில் நாட்டினை மிகவும் கை தேர்ந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார். மோடியின் இந்த திட்டங்களை புதின் பலமுறை பாராட்டியது அத்தனை பேருக்கும் தெரியும். காரணம் இந்த திட்டங்களால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளானது ரஷ்யா தானே. மோடி ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் ஆயுதங்களை பல மடங்கு குறைத்து விட்டார்.

தவிர ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆயுதங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்குவதற்கு உக்ரைன் நாட்டினை பயன்படுத்தி வருகிறார். காரணம் ரஷ்யாவின் ஆயுதங்களுக்கு தேவையான அத்தனை உதிரி பாகங்களையும் இந்தியாவிற்கு உக்ரைன் தான் வழங்கி வருகிறது.

அதுவும் மிகவும் குறைந்த விலையில். இந்திய கடற்படையின் கப்பல்களில் 70% இயங்குவது உக்ரைனிலுள்ள Zorya-Mashproekt நிறுவன தயாரிப்பு Gas Turbine என்ஜின்களால் தான். தற்போது இந்தியா தயாரித்து வரும் அதி நவீன புதிய போர்க்கப்பலின்(Talvar Class Destroyer) என்ஜினையும் உக்ரைன் தயாரித்து வருகிறது.

சுருக்கமாக சொன்னால் இந்தியாவிடம் உள்ள ரஷ்யா தயாரிப்பான 22வகை போர்கப்பல்களுக்கு 130 என்ஜின்கள் தேவை உள்ளது. அதன் தேவையை பூர்த்தி செய்யவே 2009, 2017, 2021ல் இந்தியா உக்ரைனோடு 60 வகையான ஒப்பந்தம் போட்டுள்ளது. தற்போதைய போரால் என்ஜின்கள் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமா??? இந்திய விமானப்படையின் Work Horse எனப்படும் AN 32 கார்கோ விமானத்தின் என்ஜின்களுக்கான முக்கிய உபகரணங்களை தயாரிக்கும் Antono நிறுவனமும் உக்ரைனில் தான் உள்ளது. இந்தியாவிடம் கிட்டதட்ட 100 AN32 விமானங்கள் உள்ளன. கிட்டதட்ட 40- 50 ஆட்களை( 7.5 டன்) ஏற்றிக்கொண்டு பறக்கும் விமானம் இது.

அடுத்து இந்திய விமானப்படையின் முதுகெலும்பு போன்ற ரஷ்யா தயாரிப்பு Su Mk30i போர் விமானத்தின் (300க்கு மேல் உள்ளது) தற்பாதுகாப்புக்கு முக்கியமான R27 ஏவுகணையையும் உக்ரைன் செய்கிறது. அதை வாங்கவும் ஒப்பந்தம் செய்திருந்தோம்.

இந்திய விமானப்படைதளங்களை தற்காக்க இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ள OSA-AK (SAM) & Tunguska ஏவுகணைகளையும் உக்ரைன் தாயாரிக்கிறது. அதை அப்டேட் செய்யவும் அதற்கான பராமாரிப்புக்கும் உக்ரைனோடு ஒப்பந்தம் செய்திருந்தோம்.

அதுமட்டுமில்ல இந்திய தரைப்படையின் முதுகெலும்பான T72 & T90 பீரங்கிகளின் 130mm குழாய்களையும் உக்ரைன் செய்வதால் அதை வாங்கவும் அப்டேட் செய்யவும் உக்ரைனோடு ஒப்பந்தம் செய்திருந்தோம்.

இன்னும் பலவகை ரஷ்யா தயாரிப்பு ஆயுதங்களுக்கான பராமரிப்பு & அப்டேட் செய்ய உக்ரேனோடு 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறோம். வேறெந்த நாட்டிடமும் ரஷ்ய நாட்டின் ஆயுதங்களுக்கான உதிரி மாற்று உபகரணங்கள் இல்லை.

ஏன் ரஷ்யாவே அதற்கான பராமரிப்பையும் அப்டேட்டையும் செய்யாமல் ஏன் உக்ரைனை நாட வேண்டும்? ரஷ்யா மிக மலிவு விலைக்கு ஆயுதங்களை விற்று விட்டு உபகரணத்திற்கும் - பராமரிப்புக்கும் - மேம்படுத்தலுக்கும் கொள்ளை லாபம் பார்த்து விடும். சிறந்த உதாரணம் INS விக்கிரமாதித்யா விமான தாங்கி கப்பலும் & IAF Sukhoi 30 MKI போர் விமானங்களும்.

அது தவிர பராமரிப்பையும் ரஷ்யாவில் மட்டுமே செய்வார்கள். அந்த உபகரணங்களை செய்வதற்கான தொழில் நுட்பங்களையும் (ToT) ஒரு போதும் தரமாட்டார்கள் - தந்ததில்லை! பேருக்கு ஒன்றிரண்டு தருவார்கள். கூகுளில் தேடிப் பாருங்கள் உண்மை விளங்கும்.

சரி பராமரிப்பை குறித்த நேரத்தில் செய்து தருவார்களா? அதுவும் நடக்காது. இதனாலேயே.... ஒருகாலத்தில் 80% ஆக இருந்த ரஷ்ய இறக்குமதி இன்று 30%க்கு கீழே போய் விட்டது. ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்குவதை குறைத்துக் கொண்ட இந்தியா, வாங்கிய ஆயுதங்களை பராமரிக்க உக்ரைனை உதவிக்கு வைத்துக் கொண்டது. இப்படி ரஷ்யாவிற்கு தெரியாமலேயே, ரஷ்ய ஆயுதங்களை பராமரிக்க இந்தியா ஒரு நுாதன வழிமுறைகளை கடைபிடித்து வந்தது.

இதனால் உக்ரைன் மீது இந்தியாவிற்கு எப்போதும் ஒரு பாசம் இருக்கத்தான் செய்கிறது. என்ன தான் ஆயுதம் கொடுத்தாலும், ரஷ்யாவை முழுமையாக சார்ந்து இருப்பது சிக்கல் என்பது இந்தியாவிற்கு தெரியும். எனவே ரஷ்யாவிற்கு மாற்றாக, அதாவது ரஷ்யாவின் உபகரணங்களை பராமரிக்க, உதிரி பாகங்களை தயாரிக்க இந்தியா உக்ரைனை பயன்படுத்தி வருகிறது.

அப்ப ரஷ்யா இல்லையென்றால் அந்த இடத்தை அமெரிக்கா பிடித்து விட்டது என்று பலரும் கருதுகிறார்கள். அதுதான் இல்லை. அமெரிக்காவை இந்தியாவும் முழுமையாக முழுமனதோடு நம்ப இயலாது - இந்தியாவை அமெரிக்காவும் முழுமையாக முழுமனதோடு நம்ப இயலாது இருப்பதால்.

அதற்கு மாற்றாக பிரான்ஸ் வந்துள்ளது. தொழில்நுட்ப பகிர்வு - உள்நாட்டு தயாரிப்புக்கு ஒத்துழைப்பு என்கிற உறுதிமொழியோடு இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரான்ஸ் வாமன அவதாரம் எடுத்துள்ளது - இந்தியாவின் நட்பில். முழுமையாக நம்பி உலகை கைவிட்டால்.

அமெரிக்கா இந்தியாவுக்கு ஆயுதம் வழங்குவது போல் பாகிஸ்தானுக்கும் ஆயுதங்களை வழங்கி, சண்டையை மூட்டி விட்டு - முட்டு சந்தில் உட்காரவைத்து விடுவார்கள் என்கிற எச்சரிக்கை உணர்வு இந்தியாவுக்கும் உள்ளது.

அமெரிக்கா இந்தியாவை நம்பி அனைத்து தொழில் நுட்பங்களை தந்தால் மிக சுலபமாக ரஷ்யாவின் கைகளுக்கு போய் விடும் என்கிற மரண பயம் அமெரிக்காவுக்கு உள்ளது. ஏன் என்றால் அன்றிலிருந்து இன்று வரை பாதுகாப்புத் துறையில் இந்தியாவில் பரவியுள்ள ரஷ்யாவின் மாயவலை அப்படிப்பட்டது.

அதனாலேயே அமெரிக்கா அப்ப அப்ப சில அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு கொடுத்து கவனமாக கவனித்து ஆழம் பார்க்கிறது; ஆக இரு நாடுகளும் ஒருவரையொருவர் Trustable Strategic Partnerஆக உருவெடுப்பதற்கான வழிமுறையை உருவாக்கி கொஞ்சம் கொஞ்சமாக செயல் முறைக்கு உட்படுத்தி சோதித்து வருகிறார்கள். அதன் வெளிப்பாடே U2 I2 உடன்படிக்கை - QUAD உடன்படிக்கை - Vayu Shkathi 2024 Excerise என பற்பல உடன்படிக்கைகள்.

உலகின் நம்பர் 1 ஆளில்லா விமானம் Predator, நிலத்தில் எதிரிகளின் பீரங்கிகளை வேட்டையாட Apache & கடலில் நீர்மூழ்கிகளை வேட்டையாட MH Romeo Helicopter, மலை முகட்டுக்கு படைகளை கொண்டு செல்ல CH 47 Chinook, மலை முகட்டில் எதிரிகளின் பதுங்குழிகளையும் கட்டமைப்பையும் தகர்க்க M777 Howitzer என அத நவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

அடுத்ததாக இந்தியாவோடு இணைந்து 6ம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்கவும் - அதிநவீன விமான தங்கி கப்பல்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளையும் உண்டாக்க அனுமதியும் வழங்கியுள்ளது. இந்தியா பாதுகாப்பாக இருப்பது தான் அமெரிக்காவிற்கு மிகவும் நல்லது. அதனால் இந்தியாவிற்கு அமெரிக்கா இப்போது ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கிறது.

சரி மீண்டும் வருவோம் உக்ரைனுக்கு பாதுகாப்பு துறைக்கு மட்டுமல்ல, இந்தியாவின் உணவு பாதுகாப்புக்கும் உக்ரைன் மிக முக்கியம். இந்தியா பயன்படுத்தும் சமையல் எண்ணெயில் 51% வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகிறது. அதில் முதல் இடம் சூரிய காந்தி எண்ணெய். இதை இந்தியா உக்ரைனிடமிருந்து 80%க்கு மேல் இறக்குமதி செய்கிறது.

கச்சா எண்ணெய் மட்டுமல்ல - சமையல் எண்ணெயையும் பெருமளவில் அதாவது இந்திய சந்தை சந்தை பயன்பாட்டில் சரிபாதிக்கு இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் சூரியகாந்தியே காட்சி பொருளாக ஆன பின்பு சந்தையில் எப்படி இப்படி கிடைக்கிறது என்றபவர்கள் கூகுளில் சற்று தேடி பார்த்தால் உண்மை விளங்கும்.

ஏன் சூரிய காந்தி எண்ணெய்க்கு மட்டும் இத்தனை முக்கியம்? மலிவு விலை தான் மிக முக்கிய காரணம். உலகுக்கே 75% சூரிய காந்தி எண்ணெயை வழங்குவது உக்ரைனும் & ரஷ்யாவும் மட்டுமே.

அதுமட்டுமல்ல இந்தியாவின் போக்குவரத்து துறையில் முதன்மையானது இரயில்வேயின் உள்நாட்டு உற்பத்தியின் மணிமகுடம் "வந்தே பாரத் இரயில்" அதற்கான சக்கரங்களை வழங்கிய தேசம் உக்ரைன். தற்போது இந்தியா கிட்டதட்ட 100 வந்தே பாரத் இரயில்களை செய்து வருகிறது ஒவ்வொன்றும் 100லிருந்து 120கோடி மதிப்பில்.

என்னது சக்கரங்களை உக்ரைன் கொடுத்ததா என்ற ஆச்சர்யத்தோடு நிற்காது தேடி பாருங்கள். ஆக அந்த அந்த தேசம் அந்த தேசத்தின் நன்மை கருதியே முடிவுகளை எடுக்கும் அதன்படி இந்தியாவின் 2047 என்ற இலக்குக்கு ரஷ்யாவை போன்றே, அமெரிக்காவை போன்றே, பிரான்ஸை போன்றே, உக்ரைனும் மிக முக்கியம். 2047ஐ இந்தியா பாதுகாப்பாக கடந்து விட்டால், உலகம் நம்மிடம் சரணடைந்து விடும்.

இப்போது புரிகிறதா உக்ரைன் மீதான பிரதமர் மோடியின் அக்கரை. ஏன் இவ்வளவு நாள் தாமதித்தார் என கேட்கிறீர்களா? இருதரப்பும் ஒருவரை ஒருவர் அடித்து ஓய்ந்து விட்டனர். இருவரும் ஒருவரிடம், ஒருவர் சிக்கிக் கொண்டு காப்பாற்ற யாராவது வருவார்களா என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது மோடி சொன்னதை இருவரும் கேட்கிறார்கள். இதனை போரின் தொடக்கத்தில் செய்திருந்தால், இருவருமே கேட்டிருக்க மாட்டார்கள். போர் நிறுத்தத்தை கூட துல்லியமான சரியான நேரம் பார்த்து தான் செய்ய வேண்டியிருக்கிறது. இனிமேல் நிச்சயம் போரின் தீவிரம் படிப்படியாக குறைந்து, இருதரப்பும் அமைதிக்கு வந்து விடுவார்கள். ஆக ரஷ்யா- உக்ரைன் போரில் வென்றது இந்தியாவாக இருக்கும்.

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!