உலகம் முழுவதும் சரிகிறதா அமெரிக்காவின் செல்வாக்கு?

உலகம் முழுவதும் சரிகிறதா அமெரிக்காவின் செல்வாக்கு?
X

அமெரிக்க டாலருக்கு , பிரிக்ஸ் அமைப்பும் (கோப்பு படம்)

உலகம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்திய பொருளாதாரத்தடைகள் முடிவுக்கு வருகிறதா?

அமெரிக்காவை பகைத்துக் கொண்டு ஒரு நாடு உலகில் நிம்மதியாக வாழ முடியாது. அதற்கு காரணம் அதன் பலமான ராணுவம் மட்டுமல்ல, அதன் டாலர் ஆதிக்கமும், உலக நாடுகளின் வங்கி வர்த்தகமும் அதன் காலடியில் இருப்பதால் தான்.

இந்தியாவின் 2022-23 க்கான மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியின் தேவை மதிப்பு 162.21 பில்லியன் டாலர். உக்ரைன் போரால் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென அதிகரித்தது. அதனால் கச்சா எண்ணெயை வாங்க இந்தியா கிட்டத்தட்ட குறைந்தது 191 பில்லியன் டாலர் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் ரஷ்யாவிடம் வாங்கியதால் அதன் மதிப்பு 139.86 பில்லியன் டாலராக குறைந்தது.

காரணம் ரஷ்யா மீது அமெரிக்கா தடை போட்டதால், அதன் கச்சா எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் வாங்க மறுத்தது. அதனால் இந்தியாவிற்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொடுக்க ரஷ்யா சம்மதித்தது, அதுவும் இந்திய ரூபாயில்.

அப்படி இல்லாவிட்டால், நம் இந்திய ரூபாய் பணத்தை டாலருக்கு கமிஷன் கொடுத்து வாங்கி, அதை ரஷ்யாவிற்கு கொடுக்க வேண்டும். அங்கே டாலரை வாங்கும் போது (Buy) விலை அதிகம். விற்கும் போது (Sell) குறைவு. அந்த வித்தியாசம் அமெரிக்காவிற்கு லாபம்.

ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா, சீனா இறக்குமதி செய்ததன் மூலம் இரண்டு நன்மைகள் நடந்தது. ஒன்று அதனால் இந்தியா நேரடியாக 23 பில்லியன் டாலரை சேமிக்க முடிந்தது. இரண்டாவது இந்தியா, சீனாவின் டிமாண்ட் மற்ற நாடுகளிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவு குறைந்ததால் அங்கே தேவை குறைவாகியாதால் அதன் விலை ஏற்றம் ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் வந்ததால் பெரிய உயர்வு இல்லாமல் போனது. அப்படியெனில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நமக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டுமே? ஆனால் ஏன் சொல்லாமல் நம் மீது தடை போட முயற்சி செய்தார்கள்?

முன்பு கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது டாலரில் தான் 91% நடந்தது. அதற்கு விலை ஏறினால் உலக நாடுகளுக்கு கூடுதலாக டாலர் தேவைப்படும். அப்போது அதை அமெரிக்கா இலவசமாக பிரிண்ட் செய்து கொள்ளும். ஆனால் உக்ரைன் போரில் அது நினைத்த அளவிற்கு நடக்காமல் போனதால் டாலர் தேவை அதிகரிக்கவில்லை. அப்படியெனில் அந்த விலை உயர்வு அமெரிக்காவையும் பாதிக்குமல்லவா?

பாதித்தது, பெருமளவில் பாதித்தது. அதன் டாலரின் தேவை அதிகரிக்காத போது அது தனது இறக்குமதிக்காக பிரிண்ட் செய்த டாலரால் அதன் மதிப்பு, வாங்கும் திறன் குறைந்தது. அதன் விளைவாக கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் இருந்த Inflation அதிகரித்து விலைவாசி எகிறியது.

எந்த அளவிற்கு என்றால், Pittsburghல் வசிக்கும் எனது நண்பர் வாரம் ஒருமுறை குடும்பத்தின் உணவு தேவைக்காக $60 மட்டும் செலவிடுவார். இப்போது அது $250 டாலராக நான்கு மடங்குகுக்கு மேலாக உயர்ந்தது. அதாவது இதுவரை தன் இஷ்டத்திற்கு டாலர் அடித்த அமெரிக்கா, இப்போது அதை செய்ய முடியவில்லை, அதையும் மீறி செய்ததால் இந்த விலைவாசி உயர்வு?

அதாவது அமெரிக்காவிற்கு பண நெருக்கடி வந்தால் உக்ரைன் போர் போல ஒன்றை ஏற்படுத்தி, கச்சா எண்ணெயின் விலைய ஏற்றி, டாலர் தேவையை அதிகரித்து, அதை இலவசமாக பிரிண்ட் செய்து உல்லாசமாக வாழ்ந்து வந்த அமெரிக்காவிற்கு இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் சம்மட்டி அடி விழுந்தது.

அதனால் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் அதன் மீது பொருளாதார தடை கொண்டு வருவோம் என்று மிரட்டியது. அது இந்திய- ரஷ்யாவிடையே என்ற இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகம், அதில் அமெரிக்கா எப்படி தலையிட முடியும்? அதை ரகசியமாக செய்தால் அதனால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி நம்மில் சிலருக்கு எழுந்திருக்கும். அதற்கு ஐநா சபை காரணமாக இருக்கும் என்று மேற்கொண்டு கேள்வி கேட்காமல் சமாதானமாகி போயிருப்போம். ஆனால் அது தவறு.

கிட்டத்தட்ட அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் இரு நாடுகளுக்கு இடையேயான பரிமாற்றங்கள் என்பது கிட்டத்தட்ட சாத்தியம் இல்லாதது. ஏனெனில் அந்த வர்த்தகத்தை SWIFT எனும் வங்கிகள் மூலமே (இந்தியாவில் வங்கிகளுக்கு இடையே இருக்கும் RBI போல) உலகளவில் நாடுகளுக்கு இடையேயான வங்கி பரிவர்த்தனையை செய்ய முடியும். அது அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

அப்படியெனில் அதற்கு தெரியாமல் அணுவும் அசையாது என்பதால், அதன் மூலம் ரஷ்யாவிற்கு (அதன் வங்கிகளுக்கு) பணம் செலுத்துவதை தடை செய்தது. அது மட்டுமல்ல அமெரிக்க வங்கிகளில் இருந்த ரஷ்யாவின் 600 பில்லியன் டாலரை Block செய்தது, பின்னால் தன்னுடையது என்று தன்னிச்சையாக அறிவித்தது. அதுதான் அமெரிக்கா செய்த உச்சபட்ச முட்டாள்தனம், அதன் வீழ்ச்சியின் ட்விஸ்ட் பாய்ண்ட்.

அதற்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தது. ஆனால் பெரியண்ணன் அமெரிக்காவிற்கு எதிராக பேசினால் நமக்கும் தடைபோட்டு விடுவார்களோ என்று பயந்து பேசவில்லை. ஆனால் இன்று ரஷ்யாவிற்கு நேர்ந்தது நாளை நமக்கும் நேரலாம் என்ற பயம் எல்லா நாடுகளுக்கும் முதன் முதலாக வந்தது.

அதனால் அந்தந்த நாடுகள் தங்களிடம் இருந்த Reserve Currency ஆக வைத்திருந்த டாலர் கையிருப்புகளை விற்று தங்கமாக மாற்றியது. சீனா தன்னிடம் இருந்த 3.1 ட்ரில்லியன் டாலர் கையிருப்பில், 2.5 ட்ரில்லியன் டாலரை விற்று தங்கமாக்கியது. அதனால் தங்கத்தின் விலை ஏறியது, டாலர் மதிப்பு வீழாவிட்டாலும் அதிகரிக்கவில்லை. ஆம் அமெரிக்காவின் டாலரின் மதிப்பு இன்னும் வர்த்தகத்தில் வீழாமல் பார்த்துக் கொண்டாலும், அதன் Purchase Parity Power (PPP) குறைந்ததால், அமெரிக்க நண்பரின் செலவு நான்கு மடங்காக உயர்ந்தது.

இந்தியா உட்பட எல்லா நாடுகளும் அதை முன்பு டாலரில் மட்டுமே செய்ததால் உலக நாடுகள் 81% டாலர் பரிவர்த்தனை மூலமாக இருந்தது. அது இன்று 53% ஆக குறைந்து விட்டது. இருந்தும் உலகளவில் டாலரின் மதிப்பு பெருமளவில் குறையவில்லையே?

ஏனெனில் டாலருக்கு மாற்றாக ஒரு கரன்ஸி இல்லாததால், வர்த்தகம் செய்யும் இரு நாடுகளுக்கு இடையே அவர்கள் சொந்த கரன்சியை பயன்படுத்த வேண்டும். இந்தியா ரஷ்யாவிடம் கொடுத்த ரூபாய்கள் பில்லியன்களாக அதன் வங்கியில் முடங்கியது. அதை சமாளிக்க டாலர் போல ஒரு பொது கரன்சியும், அதற்கான SWIFT போல வங்கி பரிவர்த்தனை கட்டமைப்பு இல்லை என்பதால் டாலரில் தான் வர்த்தகம் நடப்பதால் இன்னும் டாலர் ஆதிக்கம் இருக்கிறது.

இப்போது அதற்கு மாற்றாக BRICS+ தங்கத்தை அடிப்படையாக கொண்ட உலக கரன்ஸியை 2024 அக்டோபரில் நடக்கும் ரஷ்யா BRICS+ மாநாட்டில் அறிவிக்க போவதாக செய்திகள் வருகிறது. அது வந்துவிட்டால் பல நாடுகள் அதற்கு மாறக்கூடும்.

ஏற்கனவே பெட்ரோ டாலர் டீல் சவூதியுடன் முடிந்து போனதால், டாலருக்கு பெருத்த அடி. இப்போது BRICS+ தனது மாற்று கரன்ஸியை அறிவித்து விட்டால் மிகப்பெரும் சரிவை அமெரிக்க $ மட்டுமல்ல ஐரோப்பிய € , பிரிட்டிஷின் £ எல்லாமும் சந்திக்கும்.

ஏற்கனவே தாய்லாந்து உட்பட 49 நாடுகள் BRICS+ அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் 153 நாடுகள் BRICS+ கரன்ஸியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது என்றால் அமெரிக்காவின் ஆட்டம் அடுத்த சில ஆண்டுகளில் முடிவுக்கு வரும்.

அதனால் இனிமேல் அமெரிக்கா Sanction எல்லாம் போட முடியாது. போட்டால் அது SWIFT Transaction ஐத்தான் தடுக்க முடியும். ஆனால் அதற்குத்தான் இணையான BRICS Currency வந்து விட்டால், ஒரு நாடு எதற்கு டாலரில் வர்த்தகம் செய்ய வேண்டும்? அதனால் உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் எந்த வர்த்தகத்தையும் அமெரிக்காவால் தடுக்க முடியாது.

எனவே அமெரிக்காவின் வல்லரசு, பெரியண்ணன் தோரணை எல்லாம் அடுத்த சில ஆண்டுகளில் முடிவுக்கு வரும். ஏன் சில ஆண்டுகள்? இன்னும் இந்தியா போன்ற நாடுகளின் வர்த்தகம் அமெரிக்கா ஐரோப்பாவுடன் நடப்பதால், டாலர் பயன்பாட்டின் தேவை இருப்பதால் அங்கே தொடர்ந்து நடக்கும் பரிவர்த்தனையை டாலரில் தான் செய்ய வேண்டும்.

ஆனாலும் உலகளவில் உலக நாடுகள் தங்களிடம் கையிருப்பில் இருக்கும் டாலரை விற்கும் போது, அமெரிக்கா இஷ்டத்திற்கு பிரிண்ட் செய்த டாலர் எனும் பேப்பர் மீண்டும் அமெரிக்க வங்கிகளுக்கு திரும்ப வரும், ஆனால் அதை வைத்து அமெரிக்கா மற்ற நாடுகளிடம் டாலரை கொடுத்து எல்லாவற்றையும் வாங்க முடியாது எனும்போது அது வெனிசூலா நாட்டின் கரன்ஸியைப்போல மெதுவாக குப்பையாகிப்போகும்.

BIRCS பின்னணியில் இருக்கும் முக்கிய நாடுகள் ரஷ்யா, சீனா , இந்தியா, பிரேசில். இதில் இந்தியாவின் பங்கு அதிமுக்கியமானது. ஏன்னெறால் ரஷ்யாவிற்கு உலகில பல நாடுகள் (NATO சார்பு) நாடுகள் எதிர்ப்பதால் அதனோடு சேராது. சீனாவின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இந்தியாவோ ரஷ்யாவுடனும் நட்பு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடனும் நட்பில் இருக்கிறது என்பதால் பல நாடுகள் இந்தியாவின் மீதுள்ள நம்பிக்கையால் BRICS+ அமைப்பில் சேர்கிறது.

இந்த BRICS அமைப்பு 2008 லேயே ஆரம்பித்தாலும் மோடி வந்த பின்னர் தான் வேகமெடுத்தது என்பதால் மோடியை அகற்ற அமெரிக்கா துடியாய் துடிக்கிறது. அதன் மறுபுறம் சீனா அதன் யுவானை டாலருக்கு மாற்றாக BRICS+ கரன்சியாக கொண்டு வர செய்த முய்ற்சியை இந்தியா தடுத்து விட்டதாலும், அதன் உற்பத்தி ஆதிக்கத்தை தடுப்பதால் சீனாவும் மோடியை அகற்ற பல வகைகளில் முயல்கிறது.

இந்த BRICS கரன்சியில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சேராவிட்டால்? அந்த நாடுகள் பெருமளவு உணவிற்கும், தாது பொருட்களுக்கும், கச்சா எண்ணெய்க்கும், ஏன் நாப்கின் முதல் சோப்பு வரை பல அத்தியாவசிய பொருட்களுக்கு மேற்சொன்ன 159 நாடுகளை சார்ந்திருக்கிறது. அவற்றிடம் வர்த்தகம் செய்ய இப்போது அமெரிக்க $ அல்லது ஐரோப்பாவின் € பயன்படுத்தினாலும், அந்த கரன்ஸிகளை அது BRICS நாடுகளோடு வர்த்தகம் செய்யும்போது நேரடியாக பயன்படுத்த முடியாது.

அப்போது அமெரிக்கா இந்தியா, சீனாவிடம் ஒரு பொருளை வாங்க அதன் டாலரை கொடுத்து BRICS CURRENCY மூலம்தான் வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலை அடுத்த 10 ஆண்டுகளில் வந்து விடும். அதில் அதன் கரன்ஸி மதிப்பு வீழ்வது மட்டுமல்ல, டாலர் மூலம் கிடைத்த மிகப்பெரிய கமிஷன் வருமானமும் மெல்ல மெல்ல குறையும்.

2022ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 7.5 ட்ரில்லியன் டாலராக இருந்த அந்த SWIFT உலக கரன்சி பரிவர்த்தனை மூலம், 3-5% வரை அந்த அமெரிக்க வங்கிகள் பில்லியன்களில் கமிஷன் சம்பாதித்தது. அப்போது 81% ஆக இருந்த அந்த டாலர் பரிவர்த்தனை, உக்ரைன் போருக்கு பின்னால் அது மேலும் மெல்லமெல்ல குறையும்.

அதுவும் குறிப்பாக BRICS கரன்ஸி வந்தவுடன் அதன் சரிவு வேகமெடுக்கும் என்பதால் அமெரிக்காவின் உலக நாடுகள் மீதான கட்டுப்பாடுகள் அதன் கைகளில் இருந்து நழுவிப்போகிறது. அது போனால் பெரியண்ணன் அதிகாரம், அட்டூழியம் எல்லாம் ஒடுங்கிவிடும்!

இதை தடுக்க வேண்டுமெனில் அதற்கு மிக அவசிய தேவை ஒரு உலகப்போர். அதன் மூலம் இந்தியா-சீனா நேரடியாக மோதிக்கொண்டு அதன் பொருளாதாரம் வீழ்ந்தால் மட்டுமே இந்த BRICS கட்டமைப்பு வீழும் என்று காத்திருக்கிறது அமெரிக்கா.

இன்னொரு மிக முக்கியமான செய்தி, BRICS CURRENCY என்பது Bitcoin போல Black Chain Technology மூலம் Digital Currency ஆக வருகிறது. அதனால் வங்கிகளுக்கு இடையேயான வர்த்தகம் மிக எளிதாகி விடும். எனவே இந்தியாவில் ஏற்கனவே ₹2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை. ஆனால் அவை வங்கிகளுக்கிடையே மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அவை Digital Currency ஆக வாய்ப்புகள் அதிகம்.

இந்த BRICS Currency வர்த்தகத்தில் பெல்ஜியம் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளும் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. ஆம் அந்த SWIFT என்ற கம்பெனி ஆரம்பித்ததே பெல்ஜியம் நாட்டில் தான் என்பதை வைத்து பார்த்தால், அமெரிக்காவின் எதிர்காலம்? பெரிய கேள்விக்குறியாகி விடும்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்