உழைப்பாளர் உரிமைகளை வென்றெடுத்த மே தினம் இன்று...
மண்பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ல பெண் உழைப்பாளர்கள்
உழைப்பாளர் உரிமைகளை வென்றெடுத்த 'மே தினம் (.01.05.2022.). இன்று...
மே முதல் நாள், உலக உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம் சுலபமாக கைகூடிவிடவில்லை. பல போராட்டங்களுக்கு பின் விளைந்தது.
தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு, 12 முதல் 15 மணிநேரம் வேலை செய்தாக வேண்டிய நிலை கி.பி.,18ம் நுாற்றாண்டில் நிலவியது. முழுநேரமும் தொழிற்சாலையிலோ, வேலையிடத்திலோ இருந்தாக வேண்டும். குழந்தைகளை கொஞ்சவோ, குடும்பத்தை கவனிக்கவோ போதிய நேரம் இருக்காது; சம்பளமும் குறைவு.
இந்த நிலையை மாற்ற, உலகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஒரு நாளில், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கை எழுந்தது.அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற அமைப்பு, எட்டு மணிநேர வேலையை வலியுறுத்தி போராடி வந்தது. இந்த அமைப்பு, அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தை, மே 1, 1886ல் அறைகூவல் விடுத்தது. இந்த அறைகூவலே, மே தினம் பிறப்பதற்கு காரணமாயிற்று.
அழைப்பை ஏற்று அமெரிக்காவில் தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, பால்டிமோரில், 3.5 லட்சம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க பெருநிறுவனங்கள் தவித்தன. ரயில் போக்குவரத்தும் முடங்கியது. நிலக்கரி சுரங்கம், ரயில்வே தொழில், கப்பல் கட்டும் தொழில் என, பல தரப்பு தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்கா, சிகாகோ நகர ஹேமார்க்கெட் சதுக்கத்தில், மே 4, 1886ல் தொழிலாளர்கள் திரண்டனர்; மாபெரும் பேரணி நடத்தினர். ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்வதை வலியுறுத்தி முழங்கினர். அப்போது, கூட்டத்தின் நடுவே திடீர் என குண்டு வெடித்தது. பெரும் கலவரம் மூண்டது. கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது காவல்துறை. இதில், 11 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். போராட்டம் பெரும் கலவரத்தில் முடிந்தது.
இதையடுத்து, பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. கலவரத்தை துாண்டியதாக எழுத்தாளர்கள் உள்பட, ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதில் சிலரை, நவம்பர் 11, 1887 அன்று துாக்கிலிட்டனர். அவர்களது இறுதி ஊர்வலத்தில், 5 லட்சம் பேர் பங்கேற்றனர். அமெரிக்காவில் அது கறுப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில், சர்வதேச தொழிலாளர் மன்றம், ஜூலை 14, 1889ல் கூடியது.இது, பொதுவுடமை இயக்க, இரண்டாவது அகிலத்தின் துவக்கமாக கருதப்படுகிறது. இதில், பொதுவுடமை இயக்க முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரடெரிக் ஏங்கெல்ஸ் உட்பட, 18 நாடுகளைச் சேர்ந்த, 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டம், எட்டு மணிநேர வேலையை வலியுறுத்தியது. இதுதான் மே முதல் நாளை உலக உழைப்பாளர் தினமாக கொண்டாட வழிசெய்துள்ளது. இந்தியாவில், சென்னை மாநகரில் தொழிலாளர் தினம், 1923ல் முதன்முதலில் கொண்டாடப்பட்டது இன்றும் தொடர்ந்து தமிழகமெங்கும் உலக உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu