சரிவின் விழிம்பில் நிற்கும் அமெரிக்கா..!
கோப்பு படம்
"ரிசர்வ் கரன்ஸி மதிப்பினை அமெரிக்க டாலர் இழந்த மறுகணம் அமெரிக்கா ஒரு மூன்றாம் உலக நாடாக மாறி விடும்" என டொனால்ட் ட்ரம்ப் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையான விஷயம். உலகின் மிகப்பெரிய கடன்கார நாடு அமெரிக்கா தான். தனது ரிசர்வ் கரன்ஸி அந்தஸ்த்தை துஷ்பிரயோகம் செய்து கணக்கு வழக்கில்லாமல் டாலரை அச்சடித்து இதுவரையில் உலகை முட்டாள்களாக்கி வைத்திருந்தது அமெரிக்கா. உலக நாடுகள் விழித்துக் கொண்டு விட்டன. இனிமேல் அது செல்லுபடியாவது கடினம்.
இன்றைய அமெரிக்கா உருப்படியாகத் தயாரிப்பது எதுவுமில்லை. எல்லாமே வெளிநாடுகளில் இருந்து தான் வந்தாக வேண்டிய நிலைமை. உணவுப் பொருட்களில் இருந்து டெஸ்லா கார் வரையில் (சீனாவில் தயாராகி) வெளிநாட்டில் இருந்து தான் வருகிறது. இருந்த எல்லாத் தொழில்களும் அழிந்து விட்டன அல்லது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரி மட்டும் தான் கொஞ்சம் உருப்படியாக இருக்கிறது என்றாலும் சாஃப்ட்வேரைச் சாப்பிடமுடியாது. அதற்கும் மேலாக எல்லா மென்பொருள் நிறுவனங்களும் இந்தியாவிற்கு இடம் பெயர வரிசைகட்டி நின்று கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா மெல்ல, மெல்ல தன் ஒளியை இழந்து கொண்டிருக்கிறது. நம்புகிறவர்கள் நம்புங்கள். நம்பாதவர்களைக் குறித்து சொல்ல ஒன்றுமில்லை. அடுத்த பத்தாண்டுகளில் (அல்லது பதினைந்து) உலகம் மிக வேறுபட்ட அமெரிக்காவைக் காண நேரிடும். முட்டாள் அரசியல்வாதிகளும், வெள்ளை இனவாத தலைக்கனமும் அமெரிக்காவின் இன்றைய நிலைமைக்கு அடிப்படைக் காரணங்கள்.
அமெரிக்க டாலர் இன்னும் சிறிது காலத்தில் தனது ரிசர்வ் கரன்ஸி அந்தஸ்தினை இழக்கும் என்றே உலக பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. தேவையற்ற போர்களில் இருந்து, தனக்குப் பிடிக்காத நாடுகளை ஒதுக்கி அழிக்க நினைப்பது வரையில் பல காரணங்கள் உள்ளன.
உலக நாடுகள் எடுக்கவிருக்கும், எதிர்வரும் இரண்டு முக்கிய நடவடிக்கைகள் அமெரிக்காவின் ரிசர்வ் கரன்ஸி அந்தஸ்தை இழக்கக் காரணமாக அமையப்போகின்றன. முதலாவது, பிரிக்ஸ் நாடுகள் கொண்டு வரவிருக்கும் பிரிக்ஸ் கரன்ஸி. நடைமுறைக்கு சிறிது சிக்கலான ஒன்று என்றாலும் பிரிக்ஸ் கரன்ஸி வருவது தவிர்க்கவியலாதது. அதற்கு முழுமுதல் காரணமும் அமெரிக்கா தான்.
இரண்டாவது, இந்தியாவின் UPI. இதைச் சொன்னால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இன்றைய உலக வர்த்தகம் அமெரிக்காவின் SWIFT சிஸ்டத்தின் மூலம் இயங்குகிறது. உதாரணமாக, இந்தியா ஆப்பிரிக்காவிலிருந்து ஏதேனும் மூலப்பொருளை இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் அதற்கான ஒப்பந்தமும், பணமும் மேற்படி SWIFT சிஸ்டத்தின் வழியாக நடக்கும்.
இதன் காரணமாக அந்த குறிப்பிட்ட மூலப்பொருளை இந்தியா என்ன விலைக்கு வாங்கியது, எவ்வளவு வாங்கியது போன்ற முக்கியத் தகவல்களை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் உடனடியாக அறிந்து கொள்ளும். அதற்கேற்றாற்போல அந்த நாடுகள் விலையை உயர்த்தியும், தாழ்த்தியும் லாபம் பார்ப்பது எளிதாக இருந்தது. இன்னொருபுறம் தனக்குப் பிடிக்காத நாட்டிற்கு எதுவும் சப்ளை செய்யக்கூடாது என்று பிற நாடுகளை மிரட்டவும் ஏதுவாக இருந்தது. சில சமயங்களில் ஓவராக மிரட்டல் விட்டு அடிவாங்கவும் தயங்கவில்லை.
உதாரணமாக, உக்ரைன் போரினைக் காரணம் காட்டி அமெரிக்கா ரஷ்யாவை SWIFT சிஸ்டத்திலிருந்து தூக்கியது. இதன் மூலம் ரஷ்யா எந்த நாட்டுடனும் வியாபாரம் செய்ய முடியாது என நினைத்தது அமெரிக்கா. அப்படி ஏதாவது நாடு முயன்றாலும் அதனை மிரட்டி அடக்கியது. இந்த இக்கட்டான சமயத்தில் இந்தியா ரஷ்யாவுக்குக் கை கொடுத்தது.
அதன் வர்த்தகம் ரூபாய்- ரூபிளில் நடந்ததால் அமெரிக்க டாலருக்கு வேலையே இல்லாமல் போனது மட்டுமல்லாமல், இந்தியாவும், ரஷ்யாவும் என்ன விதமான வியாபாரங்களை, எவ்வளவு மதிப்பில் செய்கிறார்கள் போன்ற தகவல்கள் கிடைக்காமல் போனது. இதனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன.
எவ்வளவோ முறை கெஞ்சியும், மிரட்டியும் பார்த்தும் மோடி அசராமல் ரஷ்யாவுடன் தொடர்ந்து வியாபாரம் செய்வதால் ரஷ்யப் பொருளாதாரம் நாளுக்கு நாள் வளர்வதனைப் பார்த்து பொறுமிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இதற்கிடையே இந்தியா தனது UPI சிஸ்டத்தை உலகம் முழுவதும் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு இணையான டெக்னாலஜி இன்று வரையில் உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லை. அமெரிக்கா உட்பட. உலக நாடுகள் இந்தியாவின் UPI சிஸ்டத்தை உபயோகிக்க ஆரம்பித்தால் அங்கு டாலருக்கு வேலை இல்லை. அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டின் கரன்ஸியிலேயே வர்த்தகம் செய்து கொள்ள அதில் வசதி இருக்கிறது. இதனால் இரண்டு தரப்புக்கும் ஏராளமான பணம் மிச்சமாகும். என்ன வர்த்தகம், எவ்வளவிற்கு நடந்தது போன்ற விவரங்கள் அந்த இரண்டு நாடுகளுடன் மட்டுமே முடிந்து விடும் என்பதால் அமெரிக்காவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இனி பயப்படத் தேவையில்லை என்பதும் முக்கிய காரணமாக அமையும்.
மெல்ல, மெல்ல மோடி இந்த உலத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். எதிர்வரும் காலம் இந்தியாவின் காலம். அதில் சந்தேகமேயில்லை. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் வழக்கம் போல சிறப்பாகவே இருந்தது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் இன்னமும் மோடியை மிகவும் மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க-இந்திய உறவில் ஏகப்பட்ட விரிசல்கள், மோதல்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றது என்றாலும் மறைமுகமாக இருதரப்பும் ஒன்றை ஒன்று நட்புடன் நெருங்குவதையே விரும்புகின்றன.
அமெரிக்க ராணுவத் தரப்பு இந்தியாவுடனான நல்லுறவை விரும்புகிறது. ஆனால் அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மெண்ட் இந்தியாவிற்கு எதிரான மனநிலையில் இருக்கிறது. எல்லா வெளிநாட்டு பாலிசிகளையும் நிர்ணயிக்கும் அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மெண்ட்டைத் தாண்டி அமெரிக்க-இந்திய நல்லுறவு சாத்தியமே இல்லை. எதிர்காலத்தில் இந்த நிலை மாறக்கூடும் அல்லது மாறாமலேயே கூட இருக்கலாம். இது அத்தனையையும் உணர்ந்த இந்தியா அதனைக் குறித்து அதிகக் கவலை கொள்வதவாகவும் தெரியவில்லை. ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு தான் இந்தியா தேவையே தவிர இந்தியாவுக்கு அமெரிக்கா தேவையில்லை.
கடந்த பத்தாண்டுகளில் உலகளாவிய முறையில் மோடி அரசாங்கம் எடுத்த சதுரங்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள இன்றைய அமெரிக்கா தடுமாறி வருகிறது என்பதுதான் உண்மை. இதனைக் குறித்து ஒரு புத்தகமே எழுதலாம் என்கிற அளவிற்கு இந்திய நடவடிக்கைகள் மேற்கத்திய உலகை, குறிப்பாக அமெரிக்காவை அசைத்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. மோடியை எப்பாடுபட்டாவது தோற்கடிக்கவேண்டும் என்கிற நினைப்பில் பணத்தை அள்ளிவீசிய பிறகும் மோடி மீண்டும் பாரதப் பிரதமரானதை அமெரிக்கர்களால் இன்னமும் ஜீரணிக்க இயலவில்லை.
இந்தியத் தேர்தல்களில் அமெரிக்காவின் தலையீட்டை மோடி விரும்பவில்லை என்பதிலும் சந்தேகமில்லை. ஏகப்பட்ட உள்ளடி வேலைகள் இரண்டு நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கின்றன. எது எப்படியானாலும் எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழக் காத்திருக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu