ஆப்கானிஸ்தானில் போராட்டங்களை படமாக்க முயன்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல்
காயமடைந்த செய்தியாளர்கள் தகி தர்யாபி, நெமத்துல்லா நக்தி
ஆப்கானிஸ்தானில் போராட்டங்களை படமாக்க முயன்ற செய்தியாளர்கள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். முதுகில் உள்ள காயங்களுடன் செய்தியாளர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எடிலாட்ரோஸ் என்ற செய்தி பத்திரிக்கை நிறுவனத்தின் 2 செய்தியாளர்கள் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்தனர். அவர்கள் தாலிபன்களால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களை தாலிபன்கள் தடி மற்றும் கேபிள்களாலும், சவுக்காலும் மாறி மாறி அடித்ததாகக் கூறபட்டுள்ளது. சில மணி நேரம் கழித்து எந்த விளக்கமும் இல்லாமல் அவர்களை விட்டு விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
"தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் கூறும்போது, அவர்கள் எங்களை வேறு அறைக்கு அழைத்துச் சென்றனர். கைகளை பின்னால் கட்டினர். அதன் பின்னரே கம்பு, கேபிள் மற்றும் சவுக்கால் அடித்தனர் என்று கூறியுள்ளனர். அவர்கள் அடிக்கும்போது நான் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டாம் என்றே அமைதியாக இருந்தேன். நான் முரண்டு பிடித்தால், அவர்கள் என்னை இன்னும் மோசமாக அடிப்பார்கள் என்று நினைத்தேன். அதனால் நான் என் உடலின் முதுகை காட்டி தரையில் படுத்தேன் என்கிறார் ஒரு பத்திரிக்கையாளர்.
8 பேர் வந்து என்னை அடிக்கத்தொடங்கினார்கள். எதுவெல்லாம் கைக்கு கிடைத்ததோ குச்சிகள், போலீஸ் தடி, ரப்பர் என கையில் கிடைத்தவற்றையெல்லாம் எடுத்து அடித்தனர். என் முகத்தில் ஏற்பட்டிருக்கும் காயம் கூட அவர்கள் என்னை பூட்ஸ் காலால் உதைத்தபோது ஏற்பட்டதே என்கிறார் இன்னொருவர். அடிக்கத்தொடங்கிய சில நிமிடங்களிலேயே நான் மயக்கமாகி விட்டேன். அதனால் அடிப்பதை நிறுத்தினார்கள்.பின்னர் வேறு கட்டிடத்துக்கு மாற்றினார்கள். இரண்டு மணி நேரம் கழிந்த பிறகு விடுவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். நடக்க முடியாமல் இருந்த எங்களை வேகமாக நடக்கச் சொன்னார்கள் என்று கவலையுடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu