27 நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா

27 நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா
X

கோவிட் பரிசோதனை (கோப்பு படம்)

உலகில் புதிய வகை கொரோனா 27 நாடுகளில் மீண்டும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது. மூன்று பெரிய கொரோனா அலைகள் உலகை தாக்கி அதிர வைத்தன. நான்காவது அலை சற்று தீவிரம் குறைவாக இருந்தது. அதன் பின்னர் கடந்த மூன்று வருடமாக கொரோனா ஆங்காங்கே இருந்தாலும், அதன் தீவிரத்தன்மை குறைந்து காணப்பட்டது.

இந்திய மருத்துவர்கள் உட்பட உலக மருத்துவர்கள் அத்தனை பேரும் கொரோனா தொற்றினை இனி உலகில் இருந்து வெளியேற்றுவது கடினம். அது நம்முடன் இருந்து கொண்டு தான் இருக்கும். நாம் தான் அதற்கு ஏற்ப நம் வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் புதிய வகை கொரோனா உலகில் 27 நாடுகளில் பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. XEC variant என்று புதிய வகை கொரோனாவிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொற்று உலக நாடுகளை ஆட்டுவிக்க ஆரம்பித்து உள்ளது.

கிட்டத்தட்ட பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது.

இந்த புதிய வகை கொரோனா திரிபு அதிக தாக்கம் கொண்டதாக உள்ளது. இந்த புதிய வகை திரிபு குறித்து பிரிட்டனில் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜெர்மனியில் தான் இந்த திரிபு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் மற்ற நாடுகளுக்கு மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்றவை காணப்படும்.

புதிய வகை கொரோனா திரிபின் தன்மையை, செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போதைய நிலையில் இதன் தீவிரத்தன்மை பற்றி எதுவும் கூற முடியாது என்றும் உலக மருத்துவ நிபுணர்கள் கூறி இருக்கின்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself