ஜோபைடன் விலகல் : 18 மாதங்களுக்கு முன்பே கணித்த விவேக் ராமசாமி..!
இந்திய வம்சாவளியான அமெரிக்க தொழில் அதிபர் விவேக் ராமசாமி (கோப்பு படம்)
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகியுள்ளார். மேலும், தனக்கு பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ய பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து 18 மாதங்கள் முன்பே, ஜோ பைடன் இம்முறை அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி கணித்தது தெரியவந்துள்ளது.
குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் போட்டியில் இருந்து விலகிய விவேக் ராமசாமி, பிரச்சார களத்தில் கடந்த எட்டு மாதங்களாக பைடனின் உடல்நிலையை குறிப்பிட்டு, அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறி வந்தார்.
சில மாதங்கள் முன்பு ஃபாக்ஸ் நியூஸ் உடனான நேர்காணலின் போது, "ஜோ பைடன் தேர்தலில் போட்டியிட மாட்டார். மாறாக, அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸ் அல்லது மிச்செல் ஒபாமா ஆகியவர்களில் யாரேனும் ஒருவர் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம்" என்று கூறினார் விவேக் ராமசாமி. அவரின் இந்த கணிப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் இதற்காக, விவேக் ராமசாமியை மனநலப் பிரச்சினை உள்ளவர் என்றெல்லாம் கூட சொன்னார்கள்.
இந்த நிலையில் தான் விவேக் ராமசாமியின் கணிப்புப்படி, பைடன் தேர்தலில் இருந்து விலகியதை அடுத்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். எலான் மஸ்க், "ஆம், அவரது கணிப்புகள் அனைத்தும் உண்மையாகி விட்டன" என்று பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, விவேக் ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தனது கணிப்பு வீடியோக்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu