பிணைக்கைதிகளை விடுவித்தால் காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள்..

பிணைக்கைதிகளை விடுவித்தால்  காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள்..
X

இஸ்ரேல்- ஹமாஸ் போர்க்களம்

பிணைக்கைதிகளை விடுவித்தால் மட்டுமே காசாவிற்கு தண்ணீர், மின்சாரம், எரிபொருள் வழங்கப்படும் என இஸ்ரேல் திட்டவட்ட அறிவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கி ஏழு நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், காஸாவில் 1,100 பேரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (உண்மையான உயிரிழப்பு மிக, மிக அதிகம்) இந்தத் தாக்குதல் காரணமாக காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள் ஆகியவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இதனால், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அடிப்படைத் தேவைகள் இன்றி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஹமாஸ் ஆதரவாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ள இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர், “ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.

அவர்களை விடுவித்தால் மட்டுமே காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை நாங்கள் வழங்குவோம். அவர்கள் தரப்பில் மனிதாபிமானம் காட்டினால் தான் பதிலுக்கு நாங்கள் எங்கள் மனிதாபிமானத்தைக் காட்டுவோம். அதுவரை காசாவுக்கு மின்சாரமோ, குடிநீரோ, எரிபொருளோ வழங்க மாட்டோம். எங்களுக்கு யாரும் போதனை செய்யத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

காசாவில் ஹமாஸ் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. அதோடு, காசா எல்லையைச் சுற்றிலும் இஸ்ரேல் தனது துருப்புகளை குவித்துள்ளது. அங்கு பீரங்கி வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. காசா எல்லையை ஊடுருவி உள்ளே புகுந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகவும், எனினும், அதற்கான அனுமதியை இஸ்ரேலிய அரசு இன்னும் வழங்காததால் அதற்காக காத்திருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

மேலும், தற்போதைய நிலையில், காசாவில் இருந்து இஸ்ரேலிய எல்லையை நோக்கி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சுட்டு வீழ்த்தப்படுவார்கள் என்றும் இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு குண்டுக்கும் ஓர் உயிர்: இஸ்ரேல் ராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் விடுத்துள்ள மிரட்டல் செய்தியில், ‘‘எச்சரிக்கை விடுக்காமல், காசா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசுகிறது. இஸ்ரேல் வீசும் ஒவ்வொரு குண்டுக்கும், இஸ்ரேல் பிணைக் கைதி ஒருவரை கொல்வோம்’’ என கூறியுள்ளது. இஸ்ரேல் மக்கள் 150 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளோம் என ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலில் அரசியல் மாற்றங்களுக்கான முன்னெடுப்பு களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கான்ட்ஸ்-ஐ சந்தித்துள்ள பிரதமர் நேதன்யாகு, ஒருங்கிணைந்த அரசை உருவாக்கவும், போர் அமைச்சரவையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளங்கென் இஸ்ரேலுக்கு வந்துள்ளார். தனது இஸ்ரேலிய பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘இஸ்ரேலுக்குப் பக்கபலமாக அமெரிக்கா இருக்கிறது என்ற செய்தியை தெரிவிப்பதற்கான பயணம் இது’’ என்று கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட ஆசிய நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆபரேஷன் அஜய் எனும் பெயரிலான இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியர்களை ஏற்றிக் கொண்டு முதல் சிறப்பு விமானம் இன்று நாடு திரும்புகிறது. தேவை ஏற்பட்டால் இந்திய கடற்படையும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!