உக்ரைன் மீது படையெடுப்புக்கு முன் புதின் தப்புக்கணக்கு போட்டுவிட்டாரா?

உக்ரைன் மீது படையெடுப்புக்கு முன் புதின் தப்புக்கணக்கு போட்டுவிட்டாரா?
X

ரஷ்ய அதிபர் புதின்.

உக்ரைன் மீது போர்தொடுக்கும் முன்னதாக ரஷ்ய அதிபர் புதின் பொருளாதாரம் மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் போன்றவை மீது கவனம் செலுத்த தவறி விட்டார் என்பது தெரிகிறது.

உக்ரைன் மீது போர்தொடுக்க உறுதியான முடிவு எடுக்கப்பட்டுவிட்டபோதே, உலக நாடுகளின் நிலைப்பாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்புகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதையெல்லாம் நிச்சயமாக ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டிருப்பார்.

ஆனால், மேற்கத்திய ஊடகங்களால் ரஷ்யாவிற்கு எதிராக கட்டவிழ்த்து விடும் சரமாரியான பிரச்சாரத்தை புதின் குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்று நினைக்கத்தோன்றுகிறது. ரஷ்யாவில் இன்றுவரை 70%க்கும் அதிகமான வங்கி அட்டைகள் வேலை செய்கின்றன. ஆனால் வணிகர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள அஞ்சுகிறார்கள்.காரணம் பணப்பரிவர்த்தனை தீர்க்கப்படுமா? என்கிற குழப்பநிலை. பணம் மூலமாக மட்டுமே வணிகம். அதனால், இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பணத்தை எடுக்க ஏடிஎம் முன்பு பொதுமக்கள் வரிசையில் நின்றது போல இன்று ரஷ்யாவில் ஏடிஎம் வாசல்களில் வரிசைகட்டி பொதுமக்கள் நிற்கிறார்கள். அந்த வகையில் பொருளாதார ரீதியாகவும் அவரது கணக்கு தவறிவிட்டது.

கூகுள்,ஃபேஸ்புக், யூடியூப் பயன்பாடு :

அதேபோல், நகர்ப்புறங்களில் உள்ள 82.7% ரஷ்யர்கள் கூகுள்,ஃபேஸ்புக், யூடியூப் பயன்படுத்துவோர்களாக இருக்கின்றனர். அவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக பிற நாடுகளால் கூறப்படும் பல விஷயங்களை பல சேனல்கள் மற்றும் பேஸ்புக்கில் பார்க்கிறார்கள், படிக்கிறார்கள். அதனால் ரஷ்ய மக்களுக்கு ஒருவித அச்சம் எழுகிறது. தங்களது வாழ்க்கையைப்பற்றிய கேள்வி எழுகிறது. இதனால், ஊடக விஷயத்தில் புதின் சிக்கலை சந்திக்கவேண்டியிருக்கிறது.

சீனாவின் திட்டமிடல் :

ஆனால், சீனா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியான பிரச்னைகள் தனது நாட்டுக்குள் வரும் என்று எதிர்பார்த்தது. அதனால் மேற்கத்திய பிரச்சாரங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து தனது முழு நாட்டையும் துண்டித்துக்கொண்டது. பிற நாடுகள் ஒரு ஆன்லைன் மீட்டிங் நடத்துவது என்றால் கூட கூகுளை எதிர்பார்த்திருக்கும் வேளையில் சீனா, தனக்கென ஒரு தனி ஆப் -ஐ வடிவமைத்துக்கொண்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இதில் மட்டுமல்ல எல்லா நிலைகளிலும் சீனா தற்சார்பு பெற்றுவிட்டது.

மேற்கத்திய ஊடகங்கள் :

இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் இன்னும் மேற்கத்திய ஊடகங்களை முழுமையாக நம்பியுள்ளன. இப்படி இந்தியா இருக்கக்கூடாது என்பதைத்தான் இந்திய பிரதமர் மோடியும் வலியுறுத்தி வருகிறார். ரஷ்யாவுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை நாளை இந்தியாவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

அமைதி காக்கும் மக்கள் :

ஒருவகையில் இப்போது புதின் அதிர்ஷ்டசாலிதான். கிட்டத்தட்ட 50 நாட்களை நோக்கி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. ஆனால், ரஷ்ய மக்களோ அமைதியாக உள்ளனர். அதுதான் அவர்களது இயல்பு. காரணம், ஜார் மன்னர் காலத்தில் 1872 முதல் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தனர். அந்த பாதிப்புகளை ஒப்பிடும்போது இது சாதாரணமாக போய்விட்டது போலுள்ளது. இது புதினுக்கு கிடைத்த நன்மை என்றே சொல்லவேண்டும்.

இதுவே, அமெரிக்கா, இங்கிலாந்து,கனடா அல்லது சீனாவில் நடந்து இருந்திருந்தால் மக்கள் ஆவேசமாக எழுந்திருப்பார்கள். எதிர்ப்புத் தெரிவித்து, கூச்சலிட்டு போராடி இருப்பார்கள். ஆனால் ரஷ்யாவில் (இந்திய மக்களைப்போல) மக்கள் நீண்டகாலமாக கஷ்டப்படுகிறார்கள். ஆனாலும் பொறுமையாக தாங்கிக்கொள்கிறார்கள்.

தப்புக்கணக்கு :

தனது நாட்டுக்கு எதிராக மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தாலும் கூட இதுவரை புதின் ஃபேஸ்புக், கூகுள் எதையும் தடை செய்யவில்லை. பிற நாடுகளில் ரஷ்யாவின் சில ஊடகங்கள் தடை விதிக்கப்பட்டபோதிலும் கூட புதின், ஃபேஸ்புக், கூகுள் ஆகியவற்றை ரஷ்யாவில் தடை செய்யவில்லை.

எல்லாம் சிறிது காலத்திற்கு மட்டுமே. பின்னர் அந்த ஊடகங்கள் வேறு ஒரு பிரச்சனைக்குள் தங்களை திருப்பிக்கொள்வார்கள் என்று புதின் நம்புகிறார். ஒருவகையில் அதுவே உண்மையும் கூட. ஆனாலும் ஒரு நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் இது. தனது நாட்டைப்பற்றிய மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்கள் உலகம் முழுதும் பரவுகிறது என்பதை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

மேற்கத்திய ஊடகங்களின் ரஷ்யாவிற்கு எதிரான பிரச்சாரங்களால் ஹங்கேரி பிரதமர் போன்று பல நாடுகள் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால், புதின் மேற்கத்திய ஊடகங்கள் குறித்த கணிப்பில் தப்புக்கணக்கு போட்டுவிட்டார் என்பதே உண்மை.

விலை கொடுக்க வேண்டும் :

ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ எந்த நாடாக இருந்தாலும் போருக்குப்பிந்தைய விளைவுகளுக்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!