மீண்டும் சீன டிராகனோடு கைகுலுக்குகிறதா டெல்லி புலி..!

மீண்டும் சீன டிராகனோடு  கைகுலுக்குகிறதா டெல்லி புலி..!
X

இந்திய சீன உறவு (கோப்பு படம்)

உலகமே உற்று நோக்கும் உக்ரைனுக்கு பாரதப் பிரதமர் மோடி விஜயம் செய்து இருக்கிறார்.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சுமார் பத்து மணிநேர பயணமாக ரயிலில் உக்ரைனை அடைய தற்போது என்ன அவசியம். எதனை முன்னிட்டு இந்த பயணம்..? யார் நலனுக்காக..? எனப் பலதரப்பட்ட விவாதத்தை இது எழுப்பி இருக்கிறது என்பதே நிஜம்.

உக்ரைன் ரஷ்யா மோதலில் உக்ரைன் கை ஓங்கி இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றம் கடந்த சில நாட்களாக ஏற்படுத்தி இருக்கும் நிலையில் என்ன சமாதானம் பேச ஜெலஸ்க்கியை பார்க்க பிரதமர் நரேந்திர மோடி சென்றிருக்கிறார்...??

கொஞ்சம் நுட்பமான அரசியல் சாகசம் இது என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள். எப்படி????

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. இதில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றதாக நம்பப்பட்டு வந்த நிலையில் யாருமே எதிர்பாராத வண்ணம் ஜோபைடன் பின் நகர கமலாஹாரீஸ் முன்னிலை படுத்தப்பட்டார். அது அவர்கள் எதிர்பார்த்த பலனை தந்திருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.

எப்படியும் அடுத்த அதிபர் ட்ரம்ப் தான் என்கிற இடத்தில் இருந்து தற்போதைக்கு இருவரும் சம பலத்துடன் இருப்பதாக புள்ளி விவர புலிகள் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். திரைமறைவு வித்தகர்களும் எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடி வேலைகளை செய்தாவது கமலாஹாரீஸை ஜெயிக்கவைக்க பார்க்கிறார்கள். இதற்காக மில்லியன் கணக்கான டாலர்களை வாரி இறைத்து வருகிறார்கள்.

திரைமறைவு கைக்கூலிகள் ஏற்கனவே தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டதாகவும். அதன் ஓர் பகுதியாகத் தான் பங்களாதேஷ் ஆட்சி கவிழ்ப்பு முதற்கொண்டு உக்ரைனில் ஜெலன்ஸ்கியை கொண்டு ரஷ்ய எல்லையில் தாக்குதலை தீவிரப்படுத்தும் அத்தனை வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்கின்றனர்.

ஜோபைடன் கட்சியினருக்கு ஜெலன்ஸ்கியின் வெற்றி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது தவிர மத்திய கிழக்கு நாடுகளில் ரஷ்யாவின் கை ஓங்கி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இஸ்ரேல் போர்க்களமும் ஓராண்டை நெருங்கி விட்டது. ஹமாஸ் ஹௌதி மற்றும் ஹூத்தி போராளி குழுக்களின் ஆக்காத்தியங்களை சமாளிக்க முன் எப்போதும் இல்லாத வகையில் தனது கடற்படை கப்பல்கள் தொகுதிகளை மத்திய கடல் பிராந்தியத்தில் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறது அமெரிக்கா.

இஃது ஆப்கானிஸ்தானில் செய்த செலவினங்களை காட்டிலும் கூடுதலாக தற்சமயம் செலவு செய்து வருகிறது அமெரிக்கா என்கிறார்கள். எல்லாம் இந்த ஆண்டு இறுதி வரையில் தான் என்பது அனைவருக்கும் நன்கு தெரிகிறது. அதிலும் குறிப்பாக ஜெலன்ஸ்கிக்கு.

அதைத்தொடர்ந்து தான் கடந்த ஜூன் மாதம் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவது உறுதியானதும் பம்ம ஆரம்பித்த ஜெலன்ஸ்கி, டிரம்ப் மற்றும் பைடன் நேருக்கு நேர் நின்று விவாதம் செய்த நிகழ்ச்சிக்கு பின் நேரிடையாகவே டிரம்ப்பிடம் சரண்டர் ஆனார்.

டிரம்ப்பை மேற்கு உலகம் ரசிக்கவில்லை. அவரை பின் வாங்க விடவுமில்லை. அப்போது தான்.... தான் யாருடைய வாலை பிடித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதையே முழுமையாக உணர்ந்து கொண்டு இருக்கிறார் ஜெலன்ஸ்கி. இதனிடையே கடந்த மாதம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா விஜயம் செய்திருந்தார். இதோ இப்போது உக்ரைன் பயணம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களுக்காக அரசியல் சதுரங்கத்தில் சடுகுடு ஆடிக் கொண்டு இருக்க... இந்தியாவும் தன் பங்கிற்கு காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டது. ஒரு பக்கம் சீனா, தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்யாவிடம் இருந்து நகர்த்தி மத்திய கிழக்கு நாடுகளில் நிலை கொள்ள ஆரம்பித்து விட்டது. தற்சமயம் முதல் இடத்திற்கு இந்தியா முன்னேற்றம் கண்டு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குகிறது.

அமெரிக்க - உக்ரைன் - ரஷ்யா என உள்ள முக்கோண அரசியல் சித்து விளையாட்டை இந்தியா முடிவுக்கு கொண்டு வர பார்க்கிறது. அதேசமயம் சீனா ரஷ்யாவின் நீண்ட கால திட்டமிடலில் ஓர் பகுதியாக அமெரிக்காவை ஆசிய பிராந்தியத்தில் கால் வைக்க விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது. இதில் இந்திய நலனும் இருப்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள் நம்மவர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவை பிடித்தாட்டும் ஜெலன்ஸ்கியை ஏதோவொரு விதத்தில் கட்டுப்படுத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருப்பதாகவே மேற்கு உலகம் நம்புகிறது. போதாக்குறைக்கு லண்டன் பற்றி எரியும் இத்தருணத்தில், மோடியை அவர்களால் பெரியதாக முறைத்துக் கொள்ளவும் முடியவில்லை.

சமய சந்தர்ப்பத்தை நன்கு உணர்ந்த நம்மவர்களுக்கும் அடுத்ததாக தேர்ந்தெடுக்கப்படும் அமெரிக்க அதிபர் யார் என்பதை விடவும் அவர்களின் அரசியல் ஆதாரங்களுக்கு நம் இந்திய தேசம் பலிகடா ஆகிவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்திய- சீன உறவில் பல ரசாயன மாற்றங்கள் தென்பட ஆரம்பித்து விட்டது. கொரனாவிற்கு பின்னான காலத்தில் தடை செய்யப்பட்டுள்ள சீனாவிற்கான நேரடி விமான சேவையை மீண்டும் புதுப்பிக்க தேவையான பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க இருக்கிறார்கள். அது தவிர எல்லை பிரச்சினைகளை தவிர்த்து மற்ற உறவுகளை ஏற்படுத்தவும் ., மின்னணு பொருட்களை மற்றும் அது சார்ந்த உபகரணங்களை மீண்டும் இறக்குமதி செய்யவும் முடிவு மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த நான்கு வருடங்களாக சுமார் 100 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் என இருந்தது, தற்போதைக்கு இந்த காலாண்டில் மட்டுமே 75 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் என மாறியிருப்பதை கொண்டே பலவற்றை யூகிக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.

இதனையும் தாண்டி, சீனா தனியாகவும் தைவான் தனியாகவும் இந்திய நிறுவனங்களின் முதலீடு மற்றும் மூலோபாய வர்த்தக பங்களிப்பை கொண்ட ஒரே நாடாக நம் இந்திய தேசம் மாறி வருகிறது என்பதனையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் உலக வர்த்தக ஆய்வாளர்கள்.

பற்பல முரண்பாடு கொண்டவர்களையும் ஒரே நேரத்தில் கையாளும் பக்குவத்திற்கு நம் இந்திய தேசம் பரிமளித்து வருவதையே இது காட்டுகிறது. இதில் வித்தகர்களாக நம்மவர்கள் மாறி வருகிறார்கள். உதாரணத்திற்கு நம் தமிழக அரசியல் கள நிலவரமும் அதில் ஒன்று தான் போலிருக்கிறது. பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

Tags

Next Story
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி