குறி வைத்து அடித்தது இஸ்ரேல் : குழம்பி தவிக்கிறது ஈரான்..!

குறி வைத்து அடித்தது இஸ்ரேல் :  குழம்பி தவிக்கிறது ஈரான்..!
X

ஹமாஸ் தலைவர் ஹனியே 

ஹமாஸ் இயக்க தலைவரை ஈரானுக்குள் வைத்து இஸ்ரேல் போட்டுத்தள்ளியதால், கடும் பரிதவிப்பில் சிக்கியுள்ளது ஈரான்.

பாலஸ்தீன ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே என்பவரை எப்படி இஸ்ரேல் ஈரானுக்குள்ளே போட்டு தள்ளியது எனும் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன. ஈரானை மிகுந்த மன உளைச்சலுக்குள்ளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருவரும் மரண பயத்தில் இருக்கும் படியும் அது அடித்து காயபோட்டிருக்கின்றது, ஈரான் குழம்பி நிற்கின்றது.

ஈரான், இஸ்ரேலுக்குள் தாக்க அதை சுற்றி ஏகப்பட்ட தீவிரவாத குழுக்களை உருவாக்கிய போதே அதாவது சுமார் 30 ஆண்டுகள் இந்த முயற்சியில் இருந்த போதே மொசாட் ரகசியமாக ஈரானுக்குள் ஊடுருவி விட்டது. ஈரான் இதை கோட்டை விட்டு விட்டு தன் வீட்டுக்குள் இஸ்ரேல் புகுந்தது தெரியாமல் அங்கே பெரும் மிரட்டலையும் தொல்லைகளையும் செய்து தன்னை பெரியண்ணனாக காட்டிக் கொண்டது.

இஸ்ரேல் தான் ஊடுருவிய காட்சிகளை ஈரானிய அணுவிஞ்ஞானிகளை ஈரானுக்குள்ளே போட்டு தள்ளி காட்டியது. கடும் காவலும் சுமார் 15 அடி தடிமனும் கொண்ட கதவால் மூடப்பட்ட ஈரானிய அணுவுலைக்குள் புகுந்து முக்கிய ஆவணங்களை அடித்து வந்தது மொசாட்.

அப்பொதும் ஈரான் பெரிதாக அசரவில்லை. இஸ்ரேல் ஈரானிய தளபதிகளை லெபனான் சிரியாவிலும் உச்ச தளபதி சலைமானியினை ஈராக்கிலும் தூக்கும் போது ஈரானுக்கு செய்தி சொன்னது. அப்போதும் ஈரான் திருந்தவில்லை. இப்போது தாங்கள் எந்த அளவு ஈரானுக்கு உள்ளே இருக்கின்றோம் என்பதை காட்டி விட்டார்கள்.

நடந்தது இது தான். மிக மிக தேர்ந்த திட்டம் இது. அடிக்கடி ஹனியே ஈரான் வருவதை அறிந்து அவர் எங்கே தங்குகின்றார் எப்படியான பாதுகாப்பில் தங்குகின்றார் என்பதை அலசிய மொசாட், அதற்கான வாய்ப்பை உருவாக்கியது.

ஆம் விபத்தில் ஈரானிய அதிபர் ரைசி கொல்லபட்டார். அதிலே நிறைய மர்மம் உண்டு. அப்படி அவர் கொல்லப்பட்டபோது ஹனியே அஞ்சலிக்கு சென்றார். இஸ்ரேலின் குறியே அது தான். அப்படி அவரை வரவைத்து அவரை தீர்த்து கட்டும் திட்டத்தின் உச்சிக்கு சென்றது. அதன்படி ஈரானில் இருக்கும் இஸ்ரேலிய உளவாளிகள் அவர் அறைக்குள்ளே வெடிகுண்டை பொருத்தினார்கள்.

அது மின்விசிறியா, ஏசி மெஷினா இல்லை கட்டிலின் உபகரணமா எது என தெரியவில்லை. ஆனால் சக்தி வாய்ந்த வெடிகுண்டு அவர் தங்குவார் என கணிக்கப்பட்ட 3 இடங்களில் வைக்கப்பட்டது. ஆனால் அப்போது குண்டுவெடித்தால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும். நம் இலக்கு இருவர் தான் என உணர்ந்த மொசாட் அப்போது அவரை விட்டு விட்டது.

இஸ்ரேல் திட்டப்படி கடந்த மே மாதமே ஹனியே கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சேதம் அதிகமாகும் என்பதால், மொசாட் அனுமதிக்கவில்லை. மிக குறைந்த மக்கள் சேதத்தில் முக்கிய இலக்கு என்பது அவர்கள் கொள்கைகளில் ஒன்று இதனால் தாமதித்தார்கள்.

இதனால் இரையினை கண்காணிக்கும் புலி போல அவனை கண்காணித்தார்கள். பழைய அதிபர் சாவுக்கு வந்த ஹமாஸ் தலைவர் பின் புதிய தலைவர் பதவியேற்புக்கு வந்தார். அந்த விழாவுக்கு வந்த வரை சரியான நேரம் பார்த்து அதிகாலை இரண்டு மணிக்கு தூக்கியிருக்கின்றார்கள்.

அந்த குண்டும் சக்திவாய்ந்த குண்டு அல்ல. ஆனால் அது ஒருவரை பலத்த அதிர்வால் இதயம் வரை தாக்கி கொல்லும் நூதனமான குண்டு. அந்த அதிர்வில் ஹனியே இறந்தார். இது ஒரு தொழிநுட்பம், அதிக சத்ததம் அதிக நெருப்பு எல்லோரையும் துண்டு துண்டாக்கி கொல்வதெல்லாம் பழைய காலம். இது அப்படி அல்ல. ஒரு குண்டு வெடிக்கும் அது ஒருவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தும். அதனால் அருகிருக்கும் நபருக்கு இதயம் பாதிக்கப்படும். மூக்கில் ரத்தம் வழிய இறந்து கிடப்பார்.

இலங்கையில் புலிகள் இயக்க தலைவர்களில் ஒருவரான தமிழ்செல்வன் மேல் இவ்வகை ஆயுதம் பிரயோகிக்கபட்டது. அதேசாயல் தாக்குதல் தான், ஈரானிலும் நடந்துள்ளது. இப்படி குண்டு வெடித்து ஹனியே இறந்ததும் ஈரான் அவசரமாக குற்றவாளிகளை தேடியிருக்கின்றது, அப்போது குற்றவாளிகளை சிசிடிவி காட்சியிலும் கண்டுபிடித்து அவசரமாக தேடியிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் குண்டு வெடித்த அரைமணி நேரத்தில் தன் குடும்பத்தோடு ஈராக்குக்கு தப்பிச் சென்று விட்டார்கள். குற்றவாளிகள் யார் என்றால் ஈரானிய ராணுவத்தின் ஆட்கள். ராணுவ சேவகர்கள் அவர்களை உளவாளிகளாக மாற்றி காரியம் சாதித்தது மொசாத். இந்த சம்பவத்தில் பல சுவாரஸ்யங்கள் உண்டு.

முதலாவது ஈரான் பாதுகாப்பற்ற நாடு என்பது ஈரானிய மக்களுக்கும் அரசுக்கும் புரிந்து விட்டது. எந்த வீட்டில் எந்த மொசாட் உளவாளி இருப்பானோ என அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அச்சம் ஈரானிய உச்ச தலைவர்கள், ராணுவ தளபதிகள் அத்தனை பேருக்கும் வந்து விட்டது. எல்லோரும் பதற்றத்தில் இருக்கின்றார்கள். அதாவது யாரை நம்புவது, யாரை சந்தேகிப்பது என்ற குழப்பத்தில் தவிக்கின்றனர். ஈரான் தலைவர்கள் மத்தியில் எங்கும் நம்பிக்கையின்மையும் குழப்பமும், அவநம்பிக்கை, சந்தேகம் என்ற நிலை நிலவுகிறது. யாரை நம்ப யாரை சந்தேகிக்க என குழம்பி மனநலம் பாதிக்கும் அளவுக்கு சென்று விட்டார்கள் என்றே சொல்லலாம்.

எதிரியினை எதிர்த்து அடிப்பது ஒரு வழி. அவனை குழப்பி குழப்பி திசை திருப்பி சக்தியற்று போக வைப்ப்பது இரண்டாம் வழி. அப்படி இரண்டாம் வழியில் ஈரானை போட்டு சாத்தியிருகின்றது இஸ்ரேல்.

பாலஸ்தீன இயக்கங்களுக்கு எந்த ஈரானில் இருந்து கட்டளை வந்ததோ, அக்டோபர் மாதம் எந்த ஈரான் உத்தரவில் இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியதோ, அந்த ஹமாஸை ஈரானில் அவர்கள் கண்முன்னே கொன்று போட்டிருக்கின்றது மொசாத். இதனால் அதிர்ந்து குழம்பி மரண பயத்தில் இருக்கின்றது ஈரான்.

இன்னொரு விசித்திரம் என்னவென்றால் ஹமாஸ் தலைவரின் பக்கத்து அறையில் தான் இன்னொரு பாலஸ்தீன இயக்க தலைவரும் தங்கியிருந்தார். அவரை இஸ்ரேல் தொடவில்லை. இதனால் அவர் உயிர் தப்பியிருக்கின்றார், இனி அவர் மனநிலை எப்படியிருக்கும். எப்படியான செய்தியினை மொசாத் சொன்னது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

ஈரானுக்குள் பெரும் வலைபின்னலை வைத்திருக்கும் மொசாட்டை மீறி இனி இஸ்ரேலை தொட்டுபார்க்க வாய்ப்பில்லை என அஞ்சிகொண்டிருக்கின்றது ஈரான். எங்கள் எல்லைக்கு நீங்கள் வந்தால் உங்கள் நாட்டுக்குள்ளே உங்கள் வீட்டுக்குள்ளே வருவோம் என மொசாட் காட்டி விட்டது. ஈரான் இப்போது போர்மிரட்டல் பழிவாங்கல் என இஸ்ரேலை மிரட்டினாலும், ஈரானுக்குள் யார் என்ன செய்வார் என்பதே தெரியவில்லை. ஈரானின் "புரட்சிகர படை" முழுக்க மொசாத்தின் ஆட்கள் ஊடுறுவி விட்டார்கள். ஆக மொசாத் தான் புரட்சி செய்திருக்கின்றது.

தன் 75 ஆண்டு கால வரலாற்றில் எத்தனையோ சாதனைகளை செய்திருக்கும் மொசாத், ஈரானிய உத்தரவுபடி தங்களை தாக்கிய ஹமாஸின் தலைவரை மிகுந்த காவலுக்கு இடையில் ஈரானில் போட்டு தள்ளி அடுத்த சாதனையினை பதிவு செய்து கொண்டது.

உலகின் மிக மிக பலமான உளவு அமைப்பு, எந்த வலிமையான இடத்திலும் ஊடுருவி தாக்கும் கில்லாடிகள் என்பதை மீண்டும் உலகுக்கு சொல்லிவிட்டது மொசாட்.

"சாவு பயத்த காட்டிட்டான் பரமா" என்பது சாதாரண வார்த்தை அல்ல, தற்கொலைக்கு ஒருமுறை முயன்றவர்கள் கூட மறுமுறை முயலமாட்டார்கள். அப்படியான பயம் அது. எல்லா தைரியமும் போர்முழக்கமும் எச்சரிக்கையும் எங்கோ போர் நடக்கும்போதும் யாரோ சாகும் போதுதான் அது கண்முன்னால் அதுவும் மிகுந்த காவலுக்குள் இருக்கும் தன்முன்னால் நடக்கும்போது யாராய் இருந்தாலும் மனதால் உடைவார்கள். இரானை அப்படி நொறுக்கி போட்டிருக்கின்றது மொசாட். மிக பெரிய அளவில் போர் நடத்தி காலம், பணம் எல்லாம் செலவழிப்பதை விட இப்படி இன்னொரு கோணத்தில் அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தால் சுலபம்.

போரில் மனோவியல் மிக முக்கியம். ஆயுத பலத்தைவிட மனோபலம் இழந்தால் எதிரி செத்தே விடுவான். அதை மிக நுணுக்கமாக செய்கின்றது இஸ்ரேல். ஈரான் பக்கம் கனத்த மவுனம் நிலவுகின்றது, இஸ்லாமிய புரட்சி என சொல்லி கொண்டிருந்தவர்கள் அடுத்து என்ன புரட்சி செய்ய என தெரியாமல் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடு பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.

இஸ்ரேல் அதன்போக்கில் இருக்கின்றது. காரணம் இந்த கொலையினை செய்தது யார் என உலகமே சொல்லும் போது அவர்கள் வாய்திறக்க அவசியமில்லை. ஈரான் என்ன செய்வது என குழம்பியிருக்க்கும் நேரம் அமெரிக்க போர்கப்பல்கள் கூடுதல் பாதுகாப்புக்காக செங்கடலுக்கு வந்து சேர்ந்து விட்டன.

இனி அடுத்து ஹெஸ்புல்லா கட்டம் கட்டப்படலாம். 1983ல் 253 அமெரிக்க வீரர்களை கொன்றது, அமெரிக்க தூதரை கொன்றது என ஹெஸ்புல்லாவுக்கும் அமெரிக்காவுக்கும் பழைய கணக்கு உண்டு. இந்த கணக்கும் இப்போது தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அது இனி தீர்க்கபடலாம்.

அக்டோபர் மாதம் இஸ்ரேல் தாக்கப்பட்டபோது "தாய் பாம்பின் தலையினை நசுக்குவோம்" என்றது இஸ்ரேல். இப்போது சொன்னதை செய்து கொண்டிருக்கிறது. அலற, அலற எதிரியினை ஒவ்வொரு நொடியும் சாவு பயம் குழப்பத்திலே வைப்பது ஆக பெரிய பழிவாங்கல். அதை சுத்தமாக செய்கின்றது இஸ்ரேல்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil