செல்போன் என்ற விஷயம் அறிமுகமாகி எத்தனை வருடம் ஆகியிருக்கும்... தெரியுமா
செல்போன்..நமக்கெல்லாம் செல்போன் என்ற விஷயம் அறிமுகமாகி எத்தனை வருடம் ஆகியிருக்கும்...
ஒரு பதினைந்து வருடம் அல்லது இருபது வருடம் இருக்குமா ? அதே நேரத்தில் உலகின் முதல் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டு எத்தனை வருடம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்...
மோட்டோரோலா நிறுவனத்தின் Motorola DynaTAC-தான் உலகின் முதல் செல்போன். 1973-ம் ஆண்டு இதே போல் ஒரு ஏப்ரல் 3-ம் தேதியன்றுதான் அந்த செல்போனில் இருந்து முதல் கால் செய்யப்பட்டது. அது நிஜமாவே செங்கல்தான்!
1940களின் காலகட்டத்திலேயே ஒரு செல்போனை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் அமெரிக்காவில் இருந்த பல்வேறு நிறுவனங்களிடம் இருந்தது. அந்த வருடத்திலேயே ஒரு நிறுவனம் அமெரிக்க அரசின் தொலைத்தொடர்பு துறையிடம் செல்போன் தயாரிப்பதற்கான அனுமதியைக் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தது.
அதற்கடுத்தடுத்த வருடங்களில் இந்தத்துறையில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை; மோட்டோரோலா தனது ஆட்டத்தைத் தொடங்கும் வரை. செல்போன் தயாரிக்கும் முயற்சியில் மோட்டோரோலா முழு முயற்சியில் இறங்கியது. 1960-ம் ஆண்டு ஜான் எப் மிட்ஷெல் என்ற பொறியாளர் அந்த நிறுவனத்தின் செல்போன் தயாரிப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அதன் பிறகு அவர் தலைமையிலான குழுவினர் ட்ரான்ஸ்சிஸ்டர்கள் மூலமாக இயங்கும் முதல் பேஜரை கண்டுபிடிக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து 1973-ம் ஆண்டு மார்ட்டின் கூப்பர் என்பவர்தான் முதன் முதலாக கையில் எடுத்துச் செல்லும் வகையிலான செல்போனை உருவாக்கினார். அதுதான் Motorola DynaTAC. நம்மில் பலருக்கு செல்போன் என்றாலே உடனே ஞாபகத்துக்கு வரும் பெயர் நோக்கியாவாகத்தான் இருக்கும். அவை நம் கைகளுக்கு வரும்பொழுது, அதன் அளவு கைக்கு அடக்கமாக இருந்தது; அப்படி இருந்துமே அதற்கே நம்மூர்க்காரர்கள் 'செங்கல்' என்று பெயர் வைத்தார்கள். ஆனால் 1973-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மொபைலை நேரில் பார்த்திருந்தால் அதற்கு அந்தப் பெயர் பொருத்தமாக இருந்திருக்கும். அதன் அளவு பத்து இன்ச், எடை ஒரு கிலோவிற்கும் மேல். அதை ஒரு கையில் வைத்துப் பேசுவதே சற்று கடினமான விஷயம்தான். 10 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 நிமிடம் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்ற அளவிற்குத்தான் அதன் பேட்டரி திறன் இருந்தது.
மார்ட்டின் கூப்பர் எப்படியோ ஒருவழியாக செல்போனை உருவாக்கி விட்டார் . அதை எப்படியாவது பயன்படுத்திப் பார்க்க வேண்டுமே, யாருக்காவது போன் செய்ய வேண்டுமே என்று நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கினார். செல்போனில் கால் செய்ய வேண்டும் என்றால் முதலில் அதற்கு தேவையான கட்டமைப்புகள் வேண்டுமே? உடனே அதற்காக மன்ஹட்டன் பகுதியில் 900- MHz அலைவரிசையைத் தரும் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. அடுத்தது யாருக்காவது போன் செய்து பரிசோதித்துப் பார்ப்பதுதான் மிச்சம்.
1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி மன்ஹட்டன் பகுதிக்கு சென்று அவர் நிற்கும் பகுதியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நியூ ஜெர்சியில் அமைந்திருக்கும் பெல் லேப்ஸ் ( Bell Labs) நிறுவனத்தின் தலைமையகத்திற்கு கால் செய்கிறார். நியாயமாகப் பார்க்கப்போனால் மார்ட்டின் மோட்டோரோலா நிறுவனத்திற்குத்தானே கால் செய்திருக்க வேண்டும்? அவர் எதற்காக பெல் லேப்ஸ்க்கு போன் செய்தார்? அங்குதான் விஷயமே இருக்கிறது.
அந்த கால கட்டத்தில் மொபைல் தயாரிக்கும் முயற்சியில் மோட்டோரோலாவுக்கு போட்டியாக இருந்தது இந்த பெல் லேப்ஸ்தான். மார்ட்டின் கூப்பர் அவர்களுக்குப் போன் செய்து சொன்ன விஷயமும் அதுதான், உலகில் முதன்முதலாக செல்போன் மூலமாக நடைபெற்ற முதல் உரையாடலும் அதுதான் ஜோயல், நான்தான் மார்ட்டின் பேசுகிறேன். நான் எதிலிருந்து பேசுகிறேன் தெரியுமா? நாங்கள் உருவாக்கிய உண்மையான கையடக்க செல்போனில் இருந்து. அதன் பிறகு அந்த செல்போன் அரசாங்கத்தின் அனுமதியை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு பத்து வருடங்கள் ஆனது.1984-ம் ஆண்டில்தான் Motorola DynaTAC விற்பனைக்கு வந்தது. அப்பொழுது அதன் விலை இரண்டு லட்சத்திற்கும் அதிகம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu