இனி ஆடித்தீர்க்கும் இஸ்ரேல்? போரை தடுக்கப்போவது யார்? ஒரு விரிவான பார்வை..!

இனி ஆடித்தீர்க்கும் இஸ்ரேல்? போரை தடுக்கப்போவது யார்?  ஒரு விரிவான பார்வை..!
X

இஸ்ரேலின் விமானப்படை தாக்குதலில் பற்றி எரியும் கட்டிடம் 

இஸ்ரேல்- பாலஸ்தீன போர் உக்கிரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் பதிலடியை தாங்குமா,பாலஸ்தீனம் என்ற பதட்டம் எழுந்துள்ளது?

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் இந்த சூழலில் முதலில் இஸ்ரேல் மீதான இந்த தாக்குதல் எப்படி நடந்தது எனும் முதல்கட்ட விசாரணையின் முடிவுகள் வந்துள்ளன. இஸ்ரேல் காசா எல்லையில் எப்படி ஹமாஸ் ஊடுருவி இஸ்ரேலிய வீரர்களை கடத்திச் சென்றார்கள் என்பது தெரிந்தது.

இஸ்ரேல் காசா எல்லை 52 கி.மீ., நீளம் கொண்டது. இது நெல்லையில் இருந்து ஆரல்வாய்மொழி வரை உள்ள தொலைவு. ஊடகங்களில் இஸ்ரேல் பாலஸ்தீனம் என பரபரப்பு காட்டினாலும், அங்குள்ள மொத்த பரப்பளவே தமிழ்நாட்டில் பாதி அளவு தான் வரும். அங்கே தான் இவ்வளவு சண்டைகள் நடக்கின்றன.

இஸ்ரேல் 2005ம் ஆண்டு வரை காசாவினை தன் நேரடி கட்டுபாட்டில் வைத்து ராணுவத்தை நிறுத்தியிருந்தது. பின் ராணுவம் வெளியெறிய பின் எல்லையில் 52 கி.மீ., தொலைவுக்கு வேலி அமைத்தது. மகா ராட்சச சுவரும் இரும்பு வேலியுமான அதனை வெடிபொருள் இல்லாமல் உடைத்து கடக்க முடியாது.

இது போக இந்த 52 கிமீ தொலைவில் ஒவ்வொரு கி.மீ இடையிலும் ஒரு தானியங்கி கண்காணிப்பு கோபுரம் துப்பாக்கியோடு இருக்கும். அது ஒரு கி.மீ., முன்னால் அசையும் இலக்கு வந்தால் அதனை பற்றிய தகவல்களை கண்காணிப்பு நிலையத்துக்கு தகவலாய் அனுப்பும். கண்காணிப்பு கேமராவில் இருந்து உத்தரவு வந்தால் இந்த கோபுர துப்பாக்கி தானே சுடும். சக்தி வாய்ந்த இந்த துப்பாக்கி பெரும் சேதம் கொடுக்கும்.

இப்படி மிகக் கடுமையான காவல் கொண்ட வேலி. இதை அடுத்துத்தான் இஸ்ரேலிய முகாம்கள் இருக்கும். ஹமாஸ் தரப்பு செய்த நுணுக்கமான தாக்குதல் என்னவென்றால் சனிக்கிழமை அதிகாலை ஆளில்லா விமானத்தை மேலே எழுப்பி அது இந்த கோபுரத்தின் முன்னால் பறக்காதவாறு உச்சிக்கு கொண்டு சென்று பின் மேலிருந்து சரியாக இறக்கி கோபுரத்தை தாக்கியிருக்கின்றார்கள்.

கோபுரம் செயலிழந்த சில நொடிகளில் சக்தி வாய்ந்த வெடிப்பினை சுவரில் நிகழ்த்தி ஆயிரக்கணக்கில் புகுந்திருக்கின்றார்கள். இந்த கோபுரத்தில் இருந்த குறைபாடு என்னவென்றால் இப்படி தகர்க்கப்படும்போது அது அபாய ஒலி எழுப்பவில்லை. அந்த நுட்பம் இல்லை. இது தான் ஹமாஸுக்கு வாய்ப்பாக மாறியது.

ஓரளவு உடைப்புள்ள, உடைப்பு இல்லா இடங்களில் கிளைடர் விமானங்களிலும் வேலியினை தாண்டி புகுந்திருக்கின்றார்கள். சனிக்கிழமை ஓய்வு அதுவும் யோம்கியூப்பர் மாதம் என்பதால் கொஞ்சம் மெத்தனமாக இருந்த இஸ்ரேலிய வீரர்கள் 100 பேரை பிடித்துச் சென்று விட்டார்கள்.


இதே நேரம் தெற்கே கடல் வழியே கடலோர இஸ்ரேலிய நகரங்களிலும் ஊடுருவல் நடந்திருகின்றது. இந்நேரம் தான் 5 ஆயிரம் ராக்கெட்டை ஒரே நேரத்தில் அனுப்பி கவனத்தை திருப்பியிருக்கின்றார்கள். அயன்ர்டோம் சிஸ்டம் தடுத்தது போக எஞ்சியது பல நகரங்களை தாக்கியிருக்கின்றது. இப்படி நடந்த தாக்குதல்களில் 800க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லபட்டிருக்கின்றனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர் என்கிறது இஸ்ரேலிய தரப்பு.

இப்போது இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தபட்டுள்ளது. அதாவது 1973க்குப் பின் முழு போர் நிலைக்கு இஸ்ரேல் சென்று விட்டது. இனி அந்நாட்டு நீதிமன்றம் கூட சக்தியிழக்கும். எல்லாமே ராணுவம் கைக்குச் செல்லும். பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முன்னாள் தளபதி என்பதால் அவரே ராணுவ தலைமையகம் சென்று அமர்ந்து கொண்டார்.

தற்போது காசா எல்லையில் இஸ்ரேலிய கிராமங்கள் காலி செய்யப்படுகின்றன. இஸ்ரேலிய மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படுகின்றார்கள். டாங்கிகளும் தரைப்படையும் தயார் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன‌. தெற்கு எல்லையான கடலில் இஸ்ரேல் போர்க்கப்பல்கள் கடும் விழிப்பில் இருக்கின்றன. ஊடுருவ வந்த பல ஹமாஸ் வேகப்படகுகளை மூழ்கடித்து விட்டு அவை காவல் நிற்கின்றன‌.

அப்படியே கடலோர நகரங்களில் புகுந்து விட்ட தீவிரவாதிகளை தனித்து வளைத்து பிடிக்கும் சண்டை தொடர்ந்து நடக்கின்றது. இந்நிலையில் வடக்கு சிரிய எல்லையிலும் சிக்கல் வெடிக்கலாம். ஹமாஸுக்கு ஆதரவு என களமிறங்கி உள்ள ஹெஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது சில தாக்குதல்களை செய்திருகின்றது.

இதனால் இஸ்ரேலிய படைகள் அங்கும் நகர்கின்றன. ஹெஸ்புல்லா அமைப்பு ஹமாஸை விட வலிமையானது. ஆக மொத்தம் பெரும் போருக்கு இஸ்ரேல் தயாராகின்றது. "இனி காசா என்றொரு இடம் இருந்தது எனும் அளவு எங்கள் நடவடிக்கை இருக்கும்" என எச்சரிக்கும் இஸ்ரேல் ராணுவம் முழு தயார் நிலைக்கும் சென்று விட்டது.

இனி இஸ்ரேலின் காசா எல்லை வடக்கே ஹெஸ்புல்லா எல்லை ஆகிய இடங்களில் கடும் யுத்தம் வெடிக்கும். இஸ்ரேலுக்கு ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலும் யுத்தம் நடத்திய அனுபவம் உண்டு. இந்த ஹமாஸோ ஹெஸ்புல்லாவோ வலுவான இயக்கம் என்றாலும் அவைகள் இஸ்ரேலிய ராணுவத்தை எதிர்கொள்ளும் அளுவுக்கு வலுவான தேச ராணுவம் அல்ல‌.

அந்த இயக்கங்களிடம் விமானப்டையோ, பெரும் நுட்பமோ இல்லை. பீரங்கிப்படை உள்ளிட்ட வலுவான தரைப்படை பிரிவுகளும் இல்லை. வெறும் துப்பாக்கியும் ராக்கெட்டும் கொண்ட பிரிவு தான் உண்டு. இவைகளை பலமான இஸ்ரேல் எளிதில் நசுக்கி விடும். என்றாலும் இந்த மோதல் மக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் நடக்க உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

இந்த தாக்குதல்கள் நாம் முன்பே சொன்ன 1973 யோம் கியூப்பர் யுத்த காட்சிகள், அதே காலங்கள் அதே நுட்பம். ஆனால் அப்போது பல தேச ராணுவம் வந்தது. இப்போது இயக்கங்கள் தான் வந்திருக்கின்றன‌. 1973க்கு பின் பெரும் போருக்கு தயாராகி விட்டது, இஸ்ரேல். இம்முறை யாரும் மத்தியஸ்தம் பேச வரவில்லை. பேசவும் முயற்சிக்கவுமில்லை.

இஸ்ரேல் இனி கட்டாயம் ஆடிதீர்க்கும் என சமாதானம் பேச வந்த நாடுகள் அனைத்தும் ஒதுங்கி கொண்டு விட்டன. இதன் பாதிப்பு இன்னும் சில மணி நேரங்களில் அல்லது ஓரிரு நாட்களில் தெரியலாம். தற்போது விமான தாக்குதல்கள் உக்கிரமாக நடக்கின்றன. ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாதி அமைப்புக்களின் கட்டளை மையங்கள் அழிக்கபட்டு வருகின்றன.

நொடிக்கு நொடி அழிவுகள் அதிகரிக்கின்றது. ஒரு தரைப்படை முன்னேறிச் செல்ல விமான தாக்குதல் வழிகாட்டல் அவசியம். இஸ்ரேலியர்கள் அதை தொடங்கி விட்டார்கள். இனி தரைப்படை களம் புகுந்து விடலாம். அநேகமாக 2005க்கு முன்பிருந்த நிலை அதாவது காஸா ஆக்கிரமிப்புக்கு இஸ்ரேல் தயாராவது போல் தெரிகின்றது. நடக்கப்போகும் பிரளயத்தினை தடுக்கும் சக்தி யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.

சில இஸ்லாமிய நாடுகள் ஐ.நா., அவையினை கூட்ட அழைப்பு விடுக்கின்றன. ஆனால் அது சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. ரஷ்யா தற்போது சிக்கிக் கிடக்கிறது. சீனா அமைதியாக இருக்கிறது. இந்த நாடுகளைத் தவிர வேறு யாருக்கும் அவையினை கூட்டும் சக்தி இல்லை. ஏற்கனவே 800க்கும் மேற்பட்டோரை இழந்த வலி, பல ஆயிரம் பேர் காயத்துடன் கிடக்கும் வலி, 100 ராணுவத்தாரை கைதிகளாக கொடுத்த வன்மம் ஆகியவற்றோடு கண்களை உருட்டி காலடி எடுத்து வைத்து விட்டது இஸ்ரேல்.

1973க்குப்பின் தேசங்களுடனான போரை இஸ்ரேல் செய்யவில்லை. 2006ல் ஹெஸ்புல்லாவுடன் பெரும் யுத்தம் செய்த இஸ்ரேல் அதன் பின் சிறிய சண்டைகளை மட்டுமே ஹாமஸுடன் செய்தது. இப்போது பெரும் போருக்கு தயாராகி விட்டனர். என்னென்ன வகையில் மிரட்டுவார்கள், அழிவை தரப்போகிறார்கள் என்பது இனிதான் தெரியும்.

போராட்ட இயக்கங்களால் அரசுகளை அச்சுறுத்தலாமே தவிர ஒரு போதும் வெற்றி கொள்ள முடியாது. இந்த போராட்ட இயக்கங்களின் பலம் அவ்வளவு தான். ஆனால் ஒரு தேசத்தின் பலம் மிகப்பெரிது. அதுவும் இஸ்ரேல் போன்ற நாட்டின் பலம் அபரிமிதமானது. அது என்னவென்று இனி தான் தெரியும். ஆடித்தீர்த்து விட்டுத்தான் நிறுத்துவார்கள்.

ஹமாஸுக்கும் ஹெஸ்புல்லாவ்க்கும் பின்னால் ஈரான் இருப்பது ஒன்றும் ரகசியமல்ல. அத்தேசத்தின் அமைதிக்கும் இனி உத்தரவாதமில்லை என்பதும் நிதர்சனம்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil