கூகிள் டூடுலில் கவுரவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் கடம்பினி கங்குலி

கூகிள் டூடுலில் கவுரவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் கடம்பினி கங்குலி
X
கூகிள் இன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் கடம்பினி கங்குலியை கவுரவிக்கும் விதமாக டூடுலில் அவரது சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

கூகிள் டூடுல் இந்தியாவில் மருத்துவராக பயிற்சி பெற்ற முதல் பெண் கடம்பினி கங்குலியை நினைவு கூர்ந்தது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயமாகும். மேற்கத்திய மருத்துவம் பயின்று இந்தியாவில் மருத்துவம் செய்த முதல் பெண் மருத்துவரும் ஆவார். இப்போது பங்களாதேஷின் பகுதியாக இருக்கும் பாகல்பூர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்தபோது 1861 ஜூலை 18 அன்று கங்குலி பிறந்தார். அடிப்படையில் மருத்துவரான அவர் பெண்களின் விடுதலை, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு குரல் கொடுத்த சமூக ஆர்வலர் ஆவார்.


இந்தியாவின் முதல் மகளிர் உரிமைகள் அமைப்பின் இணை நிறுவனர் அவரே. அவரது தந்தை, இந்தியப் பெண்களுக்கு கல்வி கிடைக்காத காலகட்டத்தில் கங்குலியை பள்ளியில் சேர்த்தார். கங்குலிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தினார். 1883 ஆம் ஆண்டில், கங்குலியும் அவரது தோழி சந்திரமுகி பாசுயினும் இந்திய வரலாற்றில் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் பெண்கள் என்ற பெருமையைப் பெற்றனர்.

பட்டம் பெற்ற உடனேயே, கங்குலி பேராசிரியரும் சமூக ஆர்வலருமான துவாரகநாத் கங்குலியை மணந்தார். அவரது கணவர் மருத்துவத்தில் பட்டம் பெற கங்குலியை ஊக்குவித்தார். கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படும் வரை, பல ஆரம்ப நிராகரிப்புகள் இருந்தபோதிலும், அவர் முயற்சியை தொடர்ந்தார்.

அவர் 1886 இல் டாக்டர் பட்டம் பெற்றார். இந்தியாவில் படித்து மருத்துவரான முதல் பெண்மணி என்ற வரலாற்றை மீண்டும் உருவாக்கினார். மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றார். இந்தியாவில் பெண்களின் உரிமை இயக்கத்தில் மருத்துவ சேவை மற்றும் அவரது செயல்பாடுகள் மூலம் இந்தியாவில் உள்ள மற்ற பெண்களை கல்வியில் மேம்படுத்த கங்குலி முயன்றார். பல பிரச்சாரங்களில், 1889 இந்திய தேசிய காங்கிரசின் முதல் அனைத்திந்திய மகளிர் குழுவை உருவாக்க கங்குலி ஆறு பேர் கொண்ட குழுவுடன் இணைந்தார்.

கங்குலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 2020ம் ஆண்டில் வாழ்க்கை வரலாற்று தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பப்பட்டது. புதிய தலைமுறையினருக்கு அவரது எழுச்சியூட்டும் கதையைச் சொல்லி அந்த தொடர் புத்துயிர் அளித்தது."கோவிட் -19 காலகட்டம் மருத்துவர்களை போற்றும் ஒரு உன்னத ஆண்டாக மாறியுள்ளது. அவர்களின் தன்னலமற்ற சேவை உலகை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. அவர்களே நிஜ ஹீரோக்களாக கொண்டாடப்படுகிறார்கள் என்பதை நேரில் காண்கிறோம் .

அதேபோல ​​கடம்பினி கங்குலி, இந்தியாவில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனது பங்களிப்பை செய்ததில் முன்னோடியாக இருந்தார். அவரின் அசாத்தியமான மனப்பான்மை, ஆர்வம் அவரை உயர்ந்த இடத்துக்கு கொண்டு வந்தது.இன்று அவரை கூகிள் டூடுள் கொண்டாடுகிறது. இந்தியாவின் முதல் பெண் டாக்டரை கொண்டாடியுள்ளது நமக்கும் பெருமையே.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil