பெற்றோர், அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளம்- இன்று உலக பெற்றோர் தினம் .
தாய் – பத்து மாதம் வயிற்றிலும், வாழ்நாள் முழுதும் தன் மனதிலும் நம்மை சுமப்பவள். தந்தை – பத்து வயது வரை தன் தோளிலும், வாழ்நாள் முழுதும் தன் நெஞ்சிலும் நம்மை சுமப்பவர். அவர்களுக்கு நன்றி கூறும் ஒரு நாள்... அவர்களைப் பெருமை படுத்தும் இரு நாள். உலக பெற்றோர்கள் தினம்!!
உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலில் அன்னையர் தினமாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் தினம் தனியாகக் கொண்டாடப்படுவது மற்றும் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் இரண்டையும் சேர்த்து தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
பெற்றோர்கள் தன்னலம் கருதாமல், தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோர் மற்றும் குழந்தைகள் என்கிற உறவுடன் வாழ்நாளை தியாகம் செய்கின்றனர். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் ஐ.நா. சபை 2012ஆம் ஆண்டில் இத்தினத்தைப் பிரகடனம் செய்தது.
குடும்பம் சார்ந்த அரசாங்கக் கொள்கைகள், பசி மற்றும் வறுமையை நீக்குவது, பகிரப்பட்ட பொருளாதார செழிப்பை ஊக்குவிப்பது, சமூக மேம்பாட்டை அடைவது போன்ற நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை. எனினும், சமூக வாழ்க்கையின் மையம் குடும்பமே ஆகும்.
உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் எனக் கருதி ஜூன் 1 ம் தேதியை உலக பெற்றோர் தினம் என ஐக்கிய நாடுகள் சபையினர் அறிவித்தனர். முழு உலகிலும், உலக பெற்றோர் தினம் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.
கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம், பெற்றோரைப் பாராட்டி, அவர்களுக்கு அன்பு, பாசம், கவனிப்பு மற்றும் மரியாதை ஆகியவை கிடைப்பதை உறுதி செய்வதாகும். நம் பெற்றோர் நமக்களித்த தியாகம், வளர்ப்பு, கவனிப்பு மற்றும் அசாதாரண ஆதரவு ஆகியவற்றிற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களை மகிழ்விக்கும் நாளாகும் இது.இதுவும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் பெற்றோர் தினம் ஜூலை மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இது குழந்தைகள் வளர்ப்பதில் பெற்றோரின் பங்கை அங்கீகரிப்பதற்காக 1994 ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவர் பில் கிளிண்டனால் கொண்டுவரப்பட்டது.தென் கொரியாவில் பெற்றோர் தினம் மே 8 ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu