தாக்குதல் தொடங்கிய லெபனான்! பற்றி எரிய போகும் மத்திய கிழக்கு நாடுகள்

தாக்குதல் தொடங்கிய லெபனான்! பற்றி எரிய போகும் மத்திய கிழக்கு நாடுகள்
X
இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல் தொடங்கி உள்ள நிலையில், ஈரானும் களம் இறங்குவதால் மத்திய கிழக்கு நாடுகள் பற்றி எரிய போகிறது

ஒன்பது மாதங்களுக்கும் மேலாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர், தற்போது பல நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஹமாஸ் படையின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்துப் படுகொலை செய்திருக்கிறது இஸ்ரேல். லெபனானிலும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். இதனால், மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் உருவாகியிருக்கிறது

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணப் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என்ற சந்தேகம் நீடிக்கும் நிலையில், ஈரானின் புதிய அதிபராகப் பதவியேற்றார் மசூத். இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார் ஹமாஸ் படையின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே.

பதவியேற்பு விழா முடிந்த சில மணி நேரத்திலேயே, ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள ஹனியேவின் வீட்டில் தாக்குதல் நடத்தி, அவரைப் படுகொலை செய்திருக்கிறது இஸ்ரேல் ராணுவம். இதை உறுதி செய்த ஹமாஸ் படை, `விரைவில் இதற்குப் பதிலடி கொடுப்போம்’ என்று சூளுரைத்திருக்கிறது. மேலும், ``ஹமாஸ் என்பது ஒரு சித்தாந்தம். ஒரு தலைவரைக் கொன்று விட்டால், ஹமாஸை ஒழித்து விட முடியாது’’ என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்தப் படுகொலைக்குக் காரணமான இஸ்ரேலுக்கு, ரஷ்யா, சீனா, ஜோர்டான், துருக்கி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், ``இது கோழைத்தனமான செயல். அபாயகரமானதும்கூட’’ என்றிருக்கிறார். இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த கத்தார், ``பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்காற்றியவர் ஹனியே. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த ஒரு தரப்பின் பிரதிநிதியை, மற்றொரு தரப்பு கொலை செய்தால் அமைதி எப்படித் திரும்பும்?’’ எனக் கேள்வியெழுப்பியிருக்கிறது.

ஈரானோ, ``ஹனியே ஒரு போராளி. அவர் சிந்திய ரத்தம் நிச்சயம் வீண் போகாது. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டியது எங்கள் கடமை’’ என்றிருக்கிறது. இதுவரையிலும் இஸ்ரேல் போரில் மறைமுகமாக ஹமாஸுக்கு உதவிவந்த ஈரான், இனி நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கப்போவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மத்திய கிழக்கில் இதுவரையில்லாத உச்சக்கட்ட பதற்றம் உருவாகியிருக்கிறது. `இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானும் இறங்கினால், உலகம் முழுவதும் பல பிரச்னைகள் உண்டாகும்’ என எச்சரிக்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுநர்கள். ஆனால் அமெரிக்காவோ, ``மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் வெடிக்காது’’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

`பாலஸ்தீனம் தனி நாடாக வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் இஸ்ரேலை எதிர்த்து போராடிவரும் ஹமாஸ் அமைப்பின் பல முக்கிய முடிவுகளை எடுத்தவர் ஹனியே. அகதிகள் முகாமில் பிறந்து வளர்ந்த ஹனியே, 1980-களி லிருந்து ஹமாஸ் அமைப்பின் உறுப்பினராக இருக்கிறார். 2006-ல் பாலஸ்தீனத்தின் பிரதமராகப் பதவியேற்றார். அங்கு வெடித்த அரசியல் குழப்பத்தால், ஒரே ஆண்டில் அவரது பதவி பறிபோனது. தொடர்ந்து, ஹமாஸின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர், 2017-ல் ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவரானார். அடுத்த ஆண்டே, அவரைப் பயங்கரவாதியாக அறிவித்தது அமெரிக்கா.

ஹமாஸ் அமைப்பில், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை வைத்திருந்த ஹனியேதான், அந்த அமைப்பின் ஒட்டுமொத்தத் தலைவராகக் கருதப்பட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், காஸா விலிருந்த ஹனியேவின் மகன்கள், பேரப் பிள்ளைகள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ஹமாஸ் அரசியல் பிரிவின் துணைத் தலைவர் அல் அரூரி, ராணுவத் துணைத் தளபதி மர்வான் ஆகியோரின் வரிசையில் ஹனியேவையும் கொலை செய்திருக்கிறது இஸ்ரேல்.

ஹனியேவின் கொலை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ‘ஹமாஸின் ராணுவத் தளபதி முகமது டெய்ஃப், கடந்த மாதம் காஸாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக’ தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது இஸ்ரேல்.

இதற்கிடையில், `ஹிஸ்புல்லா அமைப்பு, எங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் கோலன் குன்றுகள் பகுதியில் தாக்குதல் நடத்தி, குழந்தைகள் உட்பட 12 பேரைக் கொன்றிருக்கிறது’ என்றது இஸ்ரேல். ஆனால், அந்தத் தாக்குதலைத் தாங்கள் நடத்தவில்லை என மறுத்தது ஹிஸ்புல்லா. இருந்தும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்தத் தாக்குதலில், ஹிஸ்புல்லா தளபதி ஃபாவுத் ஷுக்கர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தாலும், இதை ஹிஸ்புல்லா உட்பட வேறெந்தத் தரப்பும் உறுதிப்படுத்தவில்லை. தங்கள் நாட்டுக்குள் சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குக் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கிறது லெபனான்.

தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கி விட்டது லெபனான். தொடர்ச்சியாக 25 நிமிடம் பல ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்கியுள்ளது லெபனான். “ஹமாஸுடனான போரில், அமெரிக்காவின் துணையுடன் காஸாவிலுள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களைக் குறிவைத்து இனப்படுகொலையில் ஈடுபட்டுவருகிறது இஸ்ரேல். ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலுக்குக் குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், லெபனான் தலைநகரிலேயே இஸ்ரேல் நடத்தியிருக்கும் தாக்குதல், ஹிஸ்புல்லாவை மட்டுமல்லாமல், லெபனானையும் கோபப்படுத்தியிருக்கிறது. இதனால், ஹமாஸ், இரானுடன் இணைந்து ஹிஸ்புல்லாவும் நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கி உள்ளது. ஈரான், லெபனான், துருக்கி என அடுத்தடுத்து தாக்குதல்களில் பலநாடுகள் இறங்கும் நிலை காணப்படுகிறது.

லெபனான் தாக்குதலை தொடங்கி விட்டது. ஈரான் எந்த நிமிடமும் தொடங்கும். இதற்கிடையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளன. இதனால் மத்திய கிழக்கு மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரிடும்” என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

காஸாவில் அமைதி திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், ஈரானையும் லெபனானையும் சீண்டியிருக்கிறது இஸ்ரேல். இவையெல்லாம், `இந்தப் போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது’ என்ற வருத்தமான செய்தியையே வெளிப்படுத்துகின்றன எனவும் பல தலைவர்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!