“கண்ணீர் விட்டு அழுதது ஏன்?” ரொனால்டோ உருக்கமான விளக்கம்

“கண்ணீர் விட்டு அழுதது ஏன்?” ரொனால்டோ உருக்கமான விளக்கம்
X

கால்பந்து வீரர் ரொனால்டோ.

யூரோ கால்பந்து போட்டியின் போது கண்ணீர் விட்டு அழுத காரணத்தை ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

ஸ்லோவேனியாவுக்கு எதிரான ‘ரவுண்ட் ஆஃப் 16’ நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் விடாப்பிடியாக ஆடிய அந்த அணியை போர்ச்சுகல் அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-0 என்று வீழ்த்தியது.

இருந்தாலும், இந்தப் போட்டியில் ஸ்லோவேனியா கோலை போர்ச்சுகல் கோல் கீப்பர் தடுத்திருக்கா விட்டால், கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் கோட்டை விட்ட ரொனால்டோ போர்ச்சுகல் வெளியேற்றத்துக்கு காரணம் என்ற பெரும் சுமையை காலம் முழுவதும் சுமக்க வேண்டி வந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் ரொனால்டோவின் பெனால்டி கிக்கை ஸ்லோவேனியா கோல்கீப்பர் தனக்கு இடது புறம் பாய்ந்து தட்டி விட்டார். ரொனால்டோவுக்கு அழுகை பொங்கி வந்தது. கண்ணீர் விட்டு அழுதார், இவர் அழுததைப் பார்த்த போர்ச்சுகல் வீரர்கள் அவரைத் தேற்றினர்.

ஆனால், கடைசியில் பெனால்டி ஷூட் அவுட்டில் பதற்றத்துடன் இருந்தாலும் தன் அனுபவ திறமையால் கோல் அடித்து ஈடு செய்தார் ரொனால்டோ. இந்நிலையில் தான் அழுததற்கு தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் ரொனால்டோ.

“மிகவும் பலமான மனிதர்களுக்குக் கூட மோசமான நாட்கள் அமையும். அதுவும் அணி என்னுடைய பங்களிப்பின் தேவையை நம்பியிருக்கும் போது, நான் பின்னடைவைக் கொடுத்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. உணர்வு ரீதியாக மிகவும் தாழ்ந்து விட்டேன். முதலில் துயரப்பட்டேன், அழுதேன். ஆனால், பிற்பாடு மகிழ்ச்சியடைந்தேன். இதுதான் கால்பந்து, விவரிக்க முடியாத தருணங்கள் நிரம்பிய ஆட்டம். இந்த ஆண்டு ஒரே ஒரு தவறு செய்தேன். அதுவும் அணிக்கு கோல் தேவைப்படும் நேரத்தில். ஸ்லோவேனிய கோல்கீப்பர் ஆப்லாக் தடுத்து விட்டார். அப்போது நான் வாய்ப்பைக் கோட்டை விட்டேன். ஆனால், அணி வென்றுள்ளது.

பெனால்டி ஷூட் அவுட்டில் நான் இருமுறை இந்த ஆண்டில் சொதப்பியிருப்பதும் நினைவுக்கு வந்தது. ஆனால் மூன்றாம் முறை கச்சிதமாக அடித்தேன். சில வேளைகளில் கால்பந்தாட்டம் நியாயத்தை அளிக்கும். நாங்கள் காலிறுதிக்குள் நுழைய தகுதியான அணியே. நான் பிரச்சினைகளை சந்திக்கத் தயங்க மாட்டேன்.

சில வேளைகளில் நான் நல்ல முறையில் ஆடுவேன். சில சமயங்களில் அப்படி ஆட முடியாமல் போகும். ஆனால், முயற்சி செய்யாமல் கைவிடுவது என்பது மட்டும் என்னிடம் நடக்காது” இவ்வாறு ரொனால்டோ கூறினார்.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க