"ஊழல், பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு பெரிய சவால்"

ஊழல், பொருளாதார நெருக்கடி  இலங்கைக்கு பெரிய சவால்
X
இலங்கையில் ஜனாதிபதியாக இருப்பது மிகவும் சிக்கலான ஒரு சவால் நிறைந்த வேலை.

"நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியில் இன்று நனவாகியுள்ளது. சிங்களர், தமிழர், முஸ்லிம்களின் ஒற்றுமை, புதிய யுகத்தின் தொடக்கமாக இருக்கும்" என்று இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்ற அநுர குமார திசாநாயக்க பேசியுள்ளது இதுவரை இருந்த அதிபர்களின் குரலிலிருந்து மாறுபட்டது.

கம்யூனிஸ்ட் போர்வையிலுள்ள இனவாதக் கட்சி என்று சிலரால் விமர்சிக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் அடையாளத்தை மாற்றி, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் கதாநாயகனாக உருவாகி இலங்கையின் இடதுசாரி கொள்கை கொண்ட முதல் அதிபராக அநுர குமார திசாநாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதை இலங்கையில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரம், இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது, வரும் காலங்களில் அவருக்கு முன்னால் உள்ள சவால்கள் என்ன என்பது குறித்து இலங்கையைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எம்.ரிஷான் ஷெரீப் கூறியதாவது:

"ஒருநாட்டில் அப்போதுள்ள அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியின் அடிப்படையில்தான் பொதுவாக ஆட்சி மாற்றம் நிகழும். இலங்கை அதிபர் தேர்தலின் வெற்றி, மேலே குறிப்பிட்ட கருத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

இலங்கையில் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சிகரமான ‘மக்கள் போராட்ட’த்துக்குப் பிறகு நாட்டைக் காப்பாற்ற வந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்கு வெறும் இரண்டரை வருடங்களே ஆயுள் இருந்தது. அக்குறுகியகாலத்துக்குள் அவர் நாட்டு மக்களின் நலனுக்காக எதையும் செய்யாதது, அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தாமல் புறம் தள்ள மக்களை நிர்ப்பந்தித்துள்ளது என்பதை இந்தத்தேர்தல் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் விட்டது, அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்குப் போலி மருந்துகளை வழங்கப் பரிசீலித்தமை, நீதியைக் கையிலெடுத்து மோசமான பல குற்றவாளிகளைச் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்தது போன்ற வன்மையான குற்றச்சாட்டுகள் இந்தக் குறுகிய காலத்துக்குள் ரணில் விக்கிரமசிங்க மீது உள்ளன.

மக்கள் போராட்டத்திற்குப் பிறகுப் பொறுப்பேற்று அதைச் சீரமைக்க வந்த அதிபரே தனது மோசமான செயற்பாடுகளால் சமூகச் சீர்கேடுகளுக்கு வழிவகுத்த காரணத்தால் பொதுமக்கள் பெரும் மாற்றத்தை எதிர்பார்த்திருந்தார்கள். இன்று அந்த மாற்றத்தைச் செய்து காட்டியிருக்கிறார்கள்.

பெருமளவு வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அதிபராக அநுர குமார திசாநாயக்கவிற்கு இப்போது பெரும் பொறுப்பு இருக்கிறது. இலங்கையில் பொதுமக்கள் எதிர்கொண்டிருக்கும் அனைத்து நெருக்கடிகளையும் முடிவுக்குக் கொண்டு வருவார் என்ற முழுமையான நம்பிக்கையை மக்கள் இன்று அவர் மீது வைத்திருக்கிறார்கள்.

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திசாநாயக்கவால் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதும், இலங்கை அரசியலில் இதுவரை மூன்றாவது அரசியல் கட்சியாக இருந்து வந்ததுமான தேசிய மக்கள் சக்தி- National People's Power (NPP) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கூட்டணி ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவைத் துரத்தியடித்த மக்கள் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் அநுர குமார திசாநாயக்க அந்தளவு ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் போராட்டம் படிப்படியாக உக்கிரமடைந்தபோது அவரது கட்சியின் ஆதரவு அதிகமாகி போராட்டத்துக்கு மேலும் வலு சேர்த்தது. தொடர்ந்து ‘மக்கள் போராட்டம்’ கோத்தாபய ராஜபக்ஷவை நாட்டிலிருந்து துரத்தியடித்ததோடு அதற்கான பெரும்புகழ் அநுர குமார திசாநாயக்கவின் கட்சியை வந்தடைந்தது.

‘மக்கள் போராட்டம்’ என்ற ஒன்று மாத்திரம் அன்று நிகழ்ந்திருக்காவிட்டால் இலங்கையின் முக்கிய அரசியல் சக்திகளில் ஒருவராக அநுர குமார திசாநாயக்கவால் மாறியிருக்க வாய்ப்பில்லை. காரணம், அதுவரையில் பாராளுமன்றத்தில் குறைந்தளவு உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகத்தான் அவரது கட்சி இருந்து வந்தது. என்றாலும், மக்கள் போராட்டத்துக்குப் பிறகான கடந்த இரண்டரை வருட காலத்துக்குள் இலங்கை அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் இன்று அவரை நம்பித் தேர்ந்தெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு தமது வாழ்க்கையைச் சீரமைத்துக்கொள்ள நம்பகமான, பொறுப்பான, ஊழலற்ற கட்சியும், ஜனாதிபதியும் தேவையாக இருக்கிறது.

இது, இதுவரை ஆட்சியிலிருந்த எந்தக்கட்சியின் ஜனாதிபதி மீதும் மக்களால் திணிக்கப்படாத மிகப்பெரிய சவால். அவ்வாறே புதிய ஜனாதிபதியிடம் பொதுமக்கள் இன்னும் என்னென்ன சவால்களை எதிர்நோக்கவிருக்கிறார் என்று பார்த்தோமென்றால் முந்தைய ஜனாதிபதிகள், தாம் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைப் பின்னர் நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால், புதிய ஜனாதிபதியால் அவ்வாறிருக்க முடியாது. அவரது ஒவ்வொரு செயல்பாடும் மக்களால் அவதானிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

புதிய ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியாக ஊழல் எதிர்ப்பு என்பது உள்ளது. அவரோடு போட்டியிட்டவர்கள், தாம் ஆட்சியிலிருந்தபோதே ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும், ஊழல்வாதிகளைத் தமது கட்சியில் வைத்திருந்ததும் இந்த தேர்தலில் அவர்களுக்கே கேடாக அமைந்தது.

புதிய ஜனாதிபதியிடம் திடமான உறுதி இருந்தால் ஊழலைத் தடுத்து நிறுத்துவதில் உறுதியாக இருப்பார் என்று நம்பலாம். என்றாலும், இலங்கையின் பொருளாதாரச் சீர்கேட்டைச் சரியான திசையில் கொண்டு வருவது அந்தளவு எளிதான விடயமல்ல. அதற்குரிய பொருளாதார நோக்கும், திறமையும் அதில் பெரும்பங்காற்றும். ஆகவே, புதிய ஜனாதிபதி அதில்தான் கூடிய கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதுவரையில் இலங்கையில் ஊழலற்ற அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல ஆட்சியிலிருந்த எந்தக்கட்சியாலும் முடியவில்லை. எனவேதான் இந்த தேர்தலில் இதுவரை ஆட்சியமைக்காத ஒரு புதிய இடதுசாரிக் கட்சியிடம் தமது நாட்டை ஒப்படைத்திருக்கிறார்கள் இலங்கை மக்கள். ஜனநாயக ஆட்சியில் ஒரு இடதுசாரிக் கூட்டணியிடம் தமது நாட்டை ஒப்படைக்க மக்களுக்குப் பூரண உரிமையுள்ளது.

நாட்டில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வரவும், வளர்ச்சிப் பாதையில் நாட்டைக்கொண்டு செல்லவும் ஒரு புதிய கட்சி, ஒரு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது நல்லதுதான். குறைந்தபட்சம் அவர்கள் ஆட்சியமைத்ததும் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற முற்படுவார்கள். பழையவர்களுக்கோ மக்களை ஏமாற்றத் தெரிந்திருந்தது. புதியவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பதவியேற்றதுமே அந்த ஏமாற்று வித்தைகளைச் செய்யத் துணியமாட்டார். தான் ஒழுங்காக ஆட்சி செய்யவில்லையென்றால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நடந்தது தான் தனக்கும் நடக்கும் என்பதை அவர் நன்கு அறிந்திருப்பார்.

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அதுதான் நடந்தது. மக்கள் அவரிடமிருந்து பெருமளவு எதிர்பார்த்தார்கள். அவரால் எதுவும் மக்களுக்காக நல்லது செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொண்டதுமே மக்கள் ஒன்றிணைந்து அவரைத் துரத்தியடித்தார்கள். இந்த ஆபத்து இலங்கையில் ஜனாதிபதியாக ஆகும் எவருக்கும் இருக்கிறது." என்றார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!