உலகின் 2வது நபருக்கு மூளையில் சிப் பொருத்தம்!
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளைக்கும் கணினிக்குமான தொடர்பை உருவாக்க மின்னணு சாதனமான ‘சிப்’ ஒன்றை உருவாக்கியுள்ளது.
நாம் மனதில் நினைக்கும் எண்ணங்களின் மூலம் ஸ்மார்ட்போன் உள்பட நவீன தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதே மூளையில் பொருத்தப்படும் நியூராலிங்க் சிப் வடிவமைக்கப்பட்டதன் நோக்கம். எதிர்காலத்தில் கைப்பேசிகளே இருக்காது. நியூராலிங்க் மட்டுமே இருக்கும் என்று எலான் மஸ்க் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
விபத்தில் தோள்பட்டைகளுக்குக் கீழே செயலிழந்துவிட்ட நோலண்ட் அர்பாக் என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் நியூராலிங்க் சிப் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
இந்த நிலையில், அவரைத் தொடர்ந்து இரண்டாவதாக ஒரு நபருக்கு நியூராலிங்க் சிப் பொருத்தப்பட்டுள்ளது என்ற தகவலை நியூராலிங் இணை நிறுவனரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நபர் முதுகுத்தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட நபர்களைப் போல, மாற்றுத் திறனாளிகள் உள்பட பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்டோருக்கு நியூராலிங்க் சிப் மிகுந்த பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளையில் இந்த சிப் பொருத்தப்பட்டால், மனிதர்களின் திறன் மேம்படுவதுடன், அந்த மனிதர்கள் ‘சூப்பர்மேன்’ போல அசாத்திய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும், அவர்களால் தொழில்நுட்பங்களை தங்களது எண்ண ஓட்டங்கல் மூலம் கட்டுப்படுத்த முடியுமென எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பங்களை எளிதாகக் கையாள்வதிலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் போட்டிப்போடும் அளவுக்கு மனிதர்களை திறன்மிக்கவர்களாக மாற்றும் சக்தி இந்த சிப்புக்கு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது மிகுந்த பாதுகாப்பானது எனக் கூறும் எலான் மஸ்க், வருங்காலங்களில் பெரும்பாலானவர்கள் நியூராலிங்க் சிப்பை பொருத்திக்கொள்ள விரும்புவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நிகழாண்டில் மேலும் 8 பேருக்கு நியூராலிங்க் சிப் பொருத்த திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu