பாரதம் என்ற பெயரை ரசித்த சீன அதிபர் ஜி ஜின்பிங்.
மேற்கு உலக நாடுகளின் பெரும் அச்சமாக இன்று எழுந்து நிற்கிறது குளோபல் சௌத். அதன் தலைமை பீடத்தில் மோடி. நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி... தனது செயல்பாடுகளால் அசரடித்துக் கொண்டு நிற்கிறார்.
தற்சமயம் ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! இதன் தாக்கம் எந்த அளவுக்கு சென்றிருக்கிறது என்றால் அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதுவும் இருபது நாட்கள் கூட இல்லாத நிலையில், அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரிக்ஸ் மாநாட்டை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் மேற்கு உலக வாசிகள்.
அவர்கள் விக்கித்து நிற்பது அவர்களின் செயல்பாடுகளில் வெளிப்படுகிறது. ஏதோ அலங்கார வார்த்தைகளில் சொல்லப்படும் தகவலாக எண்ண வேண்டாம். இன்றைய தேதியில் நிதர்சனமான உண்மை இது. உதாரணமாக பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினோடு, ஜீ ஜிங் பிங் மற்றும் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் லட்சக்கணக்கில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தனைக்கும் ரஷ்ய அதிபர் புடின் மீது பொருளாதார தடை அமலில் இருக்கும் இந்த நிலையில் சுமார் 36 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அங்கு குழுமி இருக்கிறார்கள். நாளைய உலகை கட்டமைக்க போகும் விஷயத்தை விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் மேற்கு உலகம் பதைபதைக்காமல் என்ன செய்யும்.
இரண்டு அணு ஆயுத நாடுகள் இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கு ஒருவர் மார்தட்டி களத்தில் இறங்க ஐந்து ஆண்டுகள் எதிர்த்து நின்ற தருணத்தில் இருந்து திடீரென பின் வாங்கி சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நாங்கள் தான் நாயகர்கள் என மார்தட்டி நின்ற ஜீ ஜின் பிங் பெரிதும் நம்பியது தனது பொருளாதார பட்டுப் பாதை திட்டத்தை. பெல்ட் அன்ட் ரோட் திட்டத்தின் மூலம் உலக நாடுகளை ஒன்றிணைக்கும் விதமான பாதையை அமைப்பதற்கு திட்டமிட்டு அதற்கான வேலைகளில் கிட்டத்தட்ட 65% முடித்து விட்டிருந்தது.
பிஆர்ஐ மூலம் உலகப் பொருளாதாரத்தை கட்டியாளும் திட்டமிடலை நன்கு புரிந்து வைத்திருத்த மோடி, அதற்கான எதிர்வினை ஒன்றை சத்தமில்லாமல் முன்னெடுத்தார். இன்று நடக்கிறதே பிரிக்ஸ் மாநாடு, அது ஆரம்பிக்கபட்ட சமயத்தில்., முன்னெடுக்கப்பட்ட விதத்தில் BRI பங்களிப்பே பிரதானமாக இருந்தது.
ஆனானப்பட்ட அமெரிக்காவும் எதிர்வினை ஒன்றை முன்னெடுத்து இருக்கிறது. B3W எனப் பெயர் கொடுத்தனர். Build Back Betterworld எனப் பெயர் வைத்ததோடு சரி. அது கேட்ட தொகை அத்தனை பெரியது. அமெரிக்காவை விற்றாலும் கட்டாத மலைக்க வைக்கும் தொகையாக அது இருந்ததால் யாரும் சட்டை பண்ணவில்லை.
ஆனால் பிரதமர் மோடியின் திட்டமிடல் வேறு விதமாக இருந்தது. அடி மேல் அடிவைத்து, இன்று அதனை சாதித்தும் காட்டியிருக்கிறார். நாளைய சரித்திரமாக மாறி நிற்கிறார். பலவீனமான வெறும் பிரிக்ஸ் இன்று அசுர பலம் வாய்ந்த பிரிக்ஸ் பிளஸ்சாக மாறி நிற்பதற்கு இவரே முழுமுதற் காரணம்.
தற்சமயம் நடைபெறும் பிரிக்ஸ் பிளஸ் மாநாட்டில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து இருக்கின்றன. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தான் தற்போது இணைந்த நாடுகளின் பட்டியல். இன்னமும் இணைவதற்கு கிட்டத்தட்ட முப்பது நாடுகள் காத்துக்கிடக்கின்றன. பிரிக்ஸ் பேமெண்ட், பிரிக்ஸ் பேங்க் என வேக வேகமாக உருவெடுத்து வருகின்றன.
ஒரு பக்கம் ஈரானிய அதிபர் மசூத் பெஸஸ்கியானை சந்தித்த பிரதமர் மோடி மறுபக்கம் ஜீ ஜின் பிங்கை சந்தித்தார். மோடி, ஜெய்சங்கர், அஜித் தோவல் என ஒரு பக்கம் அமர எதிரில் ஜீ ஜின் பிங் தனது பரிவாரங்களுடன் அமர்ந்திருந்த புகைப்படத்தை பிரதமர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
இது உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியது என்றால், ஜீ ஜின் பிங்கை வைத்து கொண்டே பாரதம் என்ற சொல்லை பயன்படுத்தி மோடி பேச துவங்கி அத்தனை பேரையும் கதிகலங்க செய்திருந்தார். இதே போன்றதொரு உச்சி மாநாடு இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சமயத்தில் இந்தியா என்பதற்கு பாரதம் என்கிற பெயர் பலகையை வைத்ததற்கு இந்த ஜீ ஜின் பிங் அந்த குதி குதித்தார். ஆனால் இம்முறை மோடி முன் அடங்கி அமர்ந்ததோடு, புன்முறுவலுடன் பாரதம் என்ற வார்த்தைகளை ரசித்தார். அந்த இடத்தில் ஜி ஜின்பிங்கிற்கு வேறு வழியே இல்லை.
அதுதான் பிரதமர் மோடியின் பலம். இன்று அசுர பலத்துடன் மோடி தனது திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். முதல் நாள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினோடு நேரடி பேச்சு வார்த்தையின் போது மொழிபெயர்ப்பாளர் புடினின் பேச்சை மொழி பெயர்த்த சமயத்தில் இடைமறித்த மோடி, மொழி பெயர்ப்பாளர் இல்லாமலேயே நாங்கள் இருவரும் பேசிக் கொள்வது எங்கள் மனதிற்கு புரிகிறது என்றார். அந்த அளவிற்கு புடினுக்கும் மோடிக்கும் ஒற்றுமை இருக்கிறது.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் கீழ் வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்த பட்சம் 5% விகிதாச்சாரத்தை அது கொண்டிருக்க வேண்டும் என நிர்ணயக்கப்பட்டுள்ளது. கொரானாவுக்கு முன்னான காலத்தில் நம் இந்திய வளர்ச்சி விகிதம் இரண்டு மூன்று சதவீதமாக இருந்த சமயத்தில் சீன பொருளாதார வளர்ச்சி கிட்டத்தட்ட 8% மேல் இருந்தது.
இன்று இந்திய பொருளாதாரம் வளர்ச்சி 7 சதவீதம் என்கிற நிலையில் சீன பொருளாதாரம் 4.5% எனும் விகிதத்தில் இறங்குமுகத்தில் தள்ளாடி கொண்டு வருகிறது. அப்படியான சூழலில் குறைந்த பட்சம் ஐந்து சதவீத வளர்ச்சி என்பது ஜிங் பிங் முகத்தில் பல்பு எரிய வைத்திருக்கிறது.
மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய ரஷ்யாவிற்கு பொருளாதார தடை அமலில் இருக்கும் இந்த சூழலில் ஐந்து சதவீதம் என்பது மிக பெரிய சமாச்சாரம். ஆக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்ய பிரிக்ஸ் பிளஸ் தயார் நிலையில் களமிறங்கி இருக்கிறது. காலப் போக்கில் நிச்சயம் இது டீ - டாலரைஷேஷனை நோக்கி நகர்வது என்பது தவிர்க்க முடியாத நிலைக்கு கொண்டு செல்லும் என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள்.
ஓர் வகையில் சொல்வதானால் அகண்ட பாரதம் என்பதை போர்முனையில் சாதிக்காமல் பொருளாதார வல்லமையுடன் நம் சந்ததியினருக்கு சொந்தமாக்க வழி வகுத்து செயல்பட்டு வருகிறார்கள் நம்மவர்கள். வெகு நிச்சயமாக வெற்றி காண்பர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என தாராளமாக சொல்லலாம். எதிர்கொள்ள நாமும் தயார் நிலையில்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu