வங்கப்புலியோடு மோதும் டிராகன்..! வீழ்வேன் என்று நினைத்தாயோ..?

வங்கப்புலியோடு மோதும் டிராகன்..! வீழ்வேன் என்று நினைத்தாயோ..?
X
உக்ரைன்-ரஷ்யா மோதலைப் போன்று உலக அளவில் மிகவும் கவனிக்கப்படும் ஆனால் பொது வெளியில் அவதானிக்க முடியாத மோதல் ஒன்று இருக்கிறது. அதை விரிவாகப் பார்ப்போம்.

வங்கப்புலியோடு மோதும் டிராகன் என்பது புதுடெல்லி - பெய்ஜிங் இடையே நடக்கும் பொருளாதார வர்த்தக சண்டை நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. இதனை முதலில் தொடங்கியதென்னவோ ஜின்பிங் தான். ஆனால், அதில் கோலோச்ச ஆரம்பித்தது இந்தியர்கள். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் கதற ஆரம்பித்து பெய்ஜிங். தற்போது முழித்து கொண்ட அது அடித்து ஆட பிரம்ம பிரயத்தனங்களை செய்து கொண்டு இருக்கிறது.

இன்றைய தேதியில் ஒரு இடத்தில் அது முன்னிலைக்கு வந்திருக்கிறது. இதனை புரிந்து கொள்ள நாம் கடந்த கால அரசியல் அவதானிப்பை ஆழமாக கொண்டு இருக்க வேண்டியது அவசியம். அது கடந்த ஆட்சிக்காலத்தில் பெய்ஜிங் தனது கனவு திட்டமான பொருளாதார பட்டுப் பாதை திட்டத்தை கையில் எடுத்தது. பார்க்கும் இடமெல்லாம் வாங்கிக்குவித்தது. உடன்படாதவர்களை கும்மி அடித்தும் இருக்கிறது. இந்த இடத்தில் தான் இந்திய தலைவர்களையும் மடக்கி, இந்தியாவை சுற்றிவளைத்தது.

பாகிஸ்தானிய குவாலியர் துறைமுகத்தில் ஆரம்பித்து டிபோட்டி,மாலத்தீவு, இலங்கை, பங்களாதேஷ் அதன் அருகில் உள்ள மியான்மர், கொக்கோ தீவுகள் வரை வளைத்துப் பிடித்து கொக்கரித்தது. அந்நாளைய பிரதமரையே நம் இந்திய அருணாசலப் பிரதேசத்தில் கால் வைக்கக் கூடாது என உத்தரவே பிறப்பித்து தனது பராக்கிரம பிரதாபங்களை வெளிப்படுத்தியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நொந்தே போனார்கள் நமது இந்திய ராணுவத்தினர்.

அந்த நிலையில் தான் 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடந்தது. காட்சி மாற்றங்களும் நடந்தன. அவை உலக அரங்கில் அதிர்வலைகளை உண்டாக்கி விட்டது. ஆனானப்பட்ட சீனாவையே அடக்கி அதற்கு கடிவாளம் போட ஒரு நாடு இருக்கிறது என அப்போது இந்தியர்கள் காண்பித்துக் கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் இந்தியாவின் பதிலடிகளால் அரண்டே போனார்கள் சீனர்கள்.

2016-17 ஆம் ஆண்டு நமக்கு மிக முக்கியமானதொரு ஆண்டு. இன்று உலக அளவில் நடக்கும் பல செயல் திட்டங்களுக்கான விதை இந்த காலகட்டத்தில் தான் விதைகளாக ஊன்றப்பட்டது. அதில் மிக முக்கியமானது இந்திய-ரஷ்யா இடையே கூட்டுத் தயாரிப்பில் உருவாக இருந்த SU-57 திட்டம். இந்த திட்டங்களை இந்தியா மறு ஆய்வு செய்தது. (இதன் பின்னர் இதிலிருந்து இந்தியா வெளியேறி விட்டது).இந்திய ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாக இருந்த நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திட்டங்களை மறு ஆய்வு செய்தது (இதில் இருந்தும் பின்னாளில் இந்தியா விலகி விட்டது)

ரஷ்யாவிடம் இருந்து வாங்கவிருந்த மிக் 29 k விமான ரகங்களை தள்ளி வைத்து விட்டது. இதே காலகட்டத்தில் தான் அமெரிக்க தயாரிப்பு ராணுவ விமானங்களை, அவர்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்த ஹெலிகாப்டர்களை தேடிப் பிடித்து போய் குறைந்த விலையில் வாங்கி வந்தனர். சில பலவற்றை இங்கு நம் இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டமிட்டு பாதை வகுத்தனர்.

இன்று இத்துறை அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் தான் இந்திய பிரதமர் ரஷ்யா சென்றிருந்த போது அங்கு வைத்து பல ஒப்பந்தங்களை மீட்டுருவாக்கம் செய்து கையெழுத்து இட்டார். அதில் மிக முக்கியமானது சென்னையில் இருந்து ரஷ்யாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கு கப்பல் விடும் திட்டம்.

மிக மிக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்ட அறிவிப்பு அந்நாளில் பெய்ஜிங்கில் இருந்த ஜின்பிங்கை நிலை குலையச் செய்தது என்றே சொல்லலாம். காரணம் சீனா உரிமை கொண்டாடும் தென் சீனக் கடல் பகுதி ஊடாகவே இந்த திட்டப்பாதை வந்தது. பலரும் இந்திய நகர்வு குறித்து அசந்தே போனார்கள் என்றால் அது மிகையாகாது. இந்த நிகழ்வுக்கு பிறகு தான் சீனா பல யுத்த முஸ்தீப்புகளில் முனைப்பு காட்டி வந்து நம் இந்திய எல்லையில் பலத்த அடி வாங்கிக் கொண்டு சென்றது.

இன்று அந்த துறைமுகத்தை ரஷ்யா சீனாவிற்கு நீண்ட கால நோக்கில் குத்தகைக்கு விட்டு இருக்கிறது. விளாடிவோஸ்டாக் துறைமுகம் அமைந்துள்ள இடம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. வட கொரியா, ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சந்திக்கும் முனையம் என்கிறார்கள். நீண்ட காலமாக இதனை சீனா சொந்தம் கொண்டாடி வந்த நிலையில் இன்று அதனை ரஷ்யா தரைவார்த்து இருக்கிறது. இத்தனைக்கும் ரஷ்யாவின் கிழக்கு ராணுவ தளம் இன்னமும் அங்கு செயல்பாட்டில் இருந்து வருகிறது.

போதாக்குறைக்கு அதனை இன்றளவும் இந்தியாவோடு பகிர்ந்து கொண்டு பராமரிப்பும் செய்து கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் ஜிங் பிங்கிற்கு தூக்கி கொடுத்து இருக்கிறார், விளாடிமிர் புடின். கிட்டத்தட்ட 167 ஆண்டுகளுக்கு பிறகு சீனா அதிகார பூர்வமாக இந்த இடத்தில் கால் பதிந்திருக்கிறது என்றே சொல்லலாம். இவையெல்லாம் வெளியே தெரியும் சங்கதிகள். ஆனால், இதன் பின்னணியில் வேறோர் சமாச்சாரம் இருக்கிறது.

ஜப்பானில் ஹிரோஷிமாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் நமது பாரதப் பிரதமருக்கு கிடைத்த வரவேற்பை ஜின்பிங் ரசிக்கவில்லை என்கிறார்கள், அங்கு வந்திருந்த மேற்கு உலக நாடுகளின் தலைவர்கள். இந்திய பிரதமரை கொண்டாடியதை புடினும் விரும்பவில்லை. போதாக்குறைக்கு உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேசியது குறித்து அவர் வருத்தத்தில் இருந்ததாக சொல்கிறார்கள். காரணம் யுத்தம் ஆரம்பித்த நாள் முதல் இது தான் இந்திய பிரதமரின் முதல் சந்திப்பு என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.

இது ஒரு புறம் இருக்க G7 உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு பப்புவா நியூ கினி வந்தார் நமது பாரதப் பிரதமர். பொதுவாக சம்பிரதாய மரபுப் படி பொழுது சாய்ந்த பிறகு யாரையும் வரவேற்க, வரவேற்புக் கொடுக்க அந்த நாடு மரபு அனுமதிப்பதில்லை. வழக்கத்திற்கு மாறாக நம் பாரதப் பிரதமரை வரவேற்க முழு அரசு மரியாதையுடன் அந்நாட்டின் பிரதமரே விமான நிலையம் வந்திருந்தார். போதாக்குறைக்கு அந்நாட்டின் பிரதமரான ஜேம்ஸ் மரப்பே, நமது இந்திய பிரதமரின் கால்களைத் தொட்டு வணங்கி வரவேற்றார். பல உலக நாட்டு தலைவர்கள் அலமலந்து போனது இதில் தான்.

ஜின்பிங் கொதி நிலை உஷ்ணத்தை தொட்டது இந்த இடத்தில் தான். காரணம் ஒரு காலத்தில் பப்புவா நியூகினி அவரது கைக்காட்டி பொம்மை. தன்னிஷ்டப்படி ஆட்டிவித்து கொண்டு இருந்தார். இன்னமும் ஆழமாக சொன்னால் இன்றைய நவீன உலகின் அதி நவீன ஹைப்பர் 5G தொழில் நுட்ப பண்புகளை சீனா ஏற்கெனவே 2017 ஆம் ஆண்டே உலகிற்கு விநியோகம் செய்யத் தயார் நிலையில் இருந்தது.

அந்த சமயத்தில் ஏகப்பட்ட தகிடுதத்தங்களை அரங்கேற்ற இந்த பப்புவா நியூ கினி நாட்டை தான் தேர்வு செய்து வைத்திருந்தது. அதாவது திரைமறைவு வேலைகளை இந்த நாட்டில் அது அமைந்திருந்த சர்வர்கள் மூலமாகவே செய்ய காலம் பார்த்து காத்திருந்த சமயத்தில் தான், நம்மவர்கள் எதேச்சையாக இதனை கண்டுபிடித்தார்கள். அரசு ஏஜன்சிகள் மூலம் உலக நாடுகளுக்கும் தகவல் தெரிவிக்க சப்தமே இல்லாமல் தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று பப்புவா நியூ கினி அரசை கை காட்டி விட்டு நகர்ந்து விட்டது, சீனா.

அன்று அந்நாளில் பப்புவா நியூ கினி அரசுக்கு பக்கபலமாக நின்றது நம்மவர்கள் தான். நெக்குருகிப் போனார்கள் அவர்கள். காலங்காலமாக நம் இந்தியாவோடு வணிக தொடர்பில் உள்ள நாடு தான் இந்த பப்புவா நியூ கினி. கரும்பு விவசாயத்திற்கு பெயர் போன நாடு. பெருந்தொற்று ஏற்பட்ட சமயத்தில் ஆபத்பாந்தவனாக அரவணைத்து காத்து நின்றதும் நம்மவர்கள் தான்.

ஒட்டு மொத்தமாக உணர்ச்சி பிழம்பாக வரவேற்க வந்த அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மரப்பே சட்டென்று கால்களைப் பற்றி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அஃது அந்நாட்டின் பிரதமரின் செயல்பாடு அல்ல. ஒட்டுமொத்த மக்களின் அன்பின் வெளிப்பாடு. காரணம் உயர் கல்வியில் 32% சதவீதமும் மருத்துவத்தில் 39% சதவீதமும் நம்முடைய பங்களிப்பாக இருக்கிறது. அத்தனையும் இலவசமாக கிடைக்க அல்லது குறைந்த விலையில் கிடைக்கும்படி நம்மவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவையெல்லாம் விளம்பரங்கள் இல்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. ஆதலால் மனமுவந்து இந்த நன்றி அறிதலை நமது பாரதப் பிரதமருக்கு வெளிக்காட்டி இருக்கிறார்கள்‌. இத்தனைக்கும் ஜேம்ஸ் மரப்பே கிருத்துவ மத பிஷப்பாக, ஊழியமும் இன்றளவும் செய்து வருகிறார்‌ என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவற்றை எல்லாம் கவுண்டர் செய்யவே சமயம் பார்த்து இந்த ரஷ்ய துறைமுகத்தை பெய்ஜிங் கேட்டு வாங்கி இருக்கிறது.

விளாடிமிர் புடினை பொருத்தவரையில் இந்தியா அதன் ராணுவ சாதனங்களுக்கு தன்னை விடுத்து அமெரிக்கா பக்கம் அதிகம் சார்ந்து நிற்க ஆரம்பித்திருக்கிறதை ஓர் குறைபாடாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார். ஜெலன்ஸ்கியை சந்தித்த சமயத்தில் தான் அவருடைய நாட்டின் மருத்துவம் சார்ந்த நலனில் அக்கறை கொள்ளவதாகவும் உறுதுணையாக நிற்பதாகவும் நமது பிரதமர் கூறியதை விரும்பவில்லை என்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள். ஆதலால் நமது பாரதப் பிரதமரோடு ஊடல் போக்கை கையாண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஃது கிட்டத்தட்ட இந்திய நட்பு தங்களுக்கு மட்டுமே முழுமையான சொந்தம் என அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் சொந்தம் கொண்டாட தலைப்பட்டு இருக்கிறார்கள், என்பதற்கான அடையாளங்கள். இப்படியான சந்துஷ்டியான நிலையில் நம் இந்திய தேசத்திற்கு சில பல சங்கடங்களும் எழத்தான் செய்திருக்கிறது. ஆனால் வலுவான வலிமையான தலைமையில் நம் பாரதம் பீடு நடை போடுகிறது என நாம் பெருமிதம் கொள்ள ஓர் உன்னத தருணம் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!