தினமும் 78.3 கோடி பேர் பட்டினி! 100 கோடி பேரின் உணவு குப்பைக்கு!
உலகில் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கக் கூடிய வகையில் தயார் செய்யப்பட்டபோதிலும் ஒவ்வொரு நாளும் ஒருபுறம் 78.3 கோடி பேர் பட்டினியில் கிடக்கிறார்கள். இன்னொரு புறம் ஒட்டுமொத்தமாக நூறு கோடி பேருக்கான உணவு குப்பையில் கொட்டப்படுகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமான டபிள்யூஆர்ஏபி ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள வீணாகும் உணவுப் பட்டியல் – 2024-ல் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விற்பனை மற்றும் நுகர்வோர் நிலைகளில் இதுவே மிகவும் துல்லியமான உலகளாவிய மதிப்பீடு எனக் கருதப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் இந்த உலகம் 105 கோடி டன்கள் உணவை வீணாக்கியுள்ளது. இந்த அளவானது, உலகளவில் விற்பனை, உணவு சேவை மற்றும் வீடுகளில் சமைக்கப்படும் உணவு ஆகியவற்றின் ஒட்டுமொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு (19 சதவிகிதம்) என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஏற்கெனவே, உலகளவில் விநியோகத்தின்போது வீணாகும் 13 சதவிகித உணவுப் பொருளுடன் இதுவும் சேருவதாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. வீணாக்கப்படும் உணவில் பெருமளவு வீடுகளிலிருந்து தான் வீணடிக்கப்படுகிறது என்பது அதிர்ச்சித் தகவல்.
2022 ஆம் ஆண்டில் வீடுகளில் வீணாக்கப்பட்ட உணவு மட்டும் 63.1 கோடி டன், அதாவது சுமார் 60 சதவிகிதம்! சராசரியாக, ஒவ்வொரு நபரும் ஓராண்டில் 79 கிலோ உணவை வீணாக்குகிறார். உலகில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் நூறு கோடிப் பேரின் ஒரு வேளை உணவு வீணாக்கப்படுகிறது.
உணவுப் பொருள் வீணாக்கப்படுவதென்பது உலகளாவிய துயரம். ஒருபுறம் உணவு வீணாகிக் கொண்டிருக்க இன்னொரு புறம் பல லட்சக்கணக்கானவர்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்கிறார் ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநர் இங்கர் ஆண்டர்சன்.
பொருளாதார ரீதியாக மதிப்பிட்டால், ஓராண்டில் வீணாக்கப்படும் உணவின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 83 லட்சம் கோடி ரூபாய். இதனை தொடர்ந்து உணவை வீணாக்காமல் இருப்பதை ஒரு உலகளாவிய இயக்கமாக எடுத்துச் செல்லவும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu