தக்காளியா? தங்கமா? தாறுமாறாக எகிறும் விலை; இல்லத்தரசிகள் கவலை

கடந்த சில நாட்களாக தங்கம் விலையை போல் தக்காளி விலையும் அதிகரித்து வருவது, இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது.

இந்த வாரத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட விசேஷ தினங்கள் வருகின்றன. அடுத்த மாதத் தொடக்கத்தில் தீபாவளி பண்டிகை வருகிறது. இந்த சூழலில், தினசரி சமையலில் அத்தியாவசிய பொருட்களான தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் உள்ளது. இதுதவிர, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டு காய்கறிகள் வரவழைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, தக்காளி மட்டும் தினமும் 100 முதல் 110 லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.

தற்போது, பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்வதால், தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, கோயம்பேட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக, அதன் விலையும் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, கடந்த வாரம், 30, 40 ரூபாயை தொட்டது.

தற்போது, தக்காளி கிலோ ஒன்றின் விலை 60 ரூபாயை நெருங்கியுள்ளது. சென்னை கொத்தவால் சாவடியில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 20 ரூபாய் அதிகரித்து 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரு தக்காளியும் 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் இன்று தக்காளி விலை கிலோ 57-ரூபாயை தொட்டுள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு, தக்காளி விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இப்படியே விலை உயர்ந்தால், தக்காளியும் ஒருநாள் தங்கத்தை போலாகிவிடுமோ என்று அச்சப்படும் பொதுமக்கள், தற்போதைய விலையேற்றத்தால் கவலை அடைந்துள்ளனர்.

Tags

Next Story