சுற்றுலா பிரியரா? அப்ப லட்சத்தீவு சென்று வாருங்கள்

சுற்றுலா பிரியரா? அப்ப லட்சத்தீவு சென்று வாருங்கள்
X

சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் லட்சத்தீவுகள் 

இயற்கையை விரும்புபவர்களுக்கும், ஸ்கூபா டைவிங், நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் சாகச பிரியர்களுக்குமான சொர்க்க பூமி லட்சத்தீவு

லட்சத்தீவுகளில் மொத்தம் 36 தீவுகள், 12 பவளப்பாறைகள் மற்றும் மூன்று திட்டுகள் மட்டுமே உள்ளன. ஆனால், இவற்றில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள இயற்கை அழகை ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

நகரப்பகுதியில் தினசரி பரபரப்பான வேளைகளுக்கு இடையே விடுமுறையை கொண்டாட விரும்புபவர்கள் லட்சத்தீவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் எட்டு யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவு ஒன்றாகும். 1956ல் யூனியன் பிரதேசமாக மாறியது. இங்குள்ள 36 தீவுகளில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மினிகாய் தீவு, கல்பேனி தீவுகள், கத்மத் தீவுகள், பங்காரம் தீவு மற்றும் தின்னகர தீவு உள்ளிட்டவை மிகவும் பிரபலமான இடங்களாகும்.

இயற்கையை விரும்புபவர்களுக்கும், ஸ்கூபா டைவிங், நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் சாகச பிரியர்களுக்கும் அதை சொர்க்க பூமி என்றே சொல்லலாம். ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். இங்குள்ள கடற்கரையில் உள்ள மணல் வெள்ளை நிறத்தில் காணப்படும். அதில் மாலை நேரத்தில் அமர்ந்து ஓய்வு எடுப்பதே, இங்குள்ள மக்களின் பொழுதுபோக்கு.


கேரள மாநிலத்தின் கொச்சி வழியாகத்தான் லட்சத்தீவுக்கு செல்ல முடியும். கொச்சியிலிருந்து லட்சத்தீவுக்கு விமானம் மற்றும் கப்பல் வசதி உள்ளது. வாரத்தில் ஆறு நாட்களுக்கும் ஏர் இந்தியா லட்சத்தீவுகளுக்கு விமானங்களை இயக்குவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்தீவுக்குள் நேரடியாக நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள லட்சத்தீவு நிர்வாகத்தினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். முதலில் அனுமதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து, உங்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து உள்ளூர் காவல்நிலையத்தில் அளித்து உரிய அனுமதி பெற வேண்டும்.

பின்னர், நுழைவு அனுமதியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது கொச்சியில் உள்ள வெல்லிங்டன் தீவில் அமைந்துள்ள லட்சத்தீவு நிர்வாக அலுவலகத்தில் நேரிலும் பெறலாம்.

லட்சத்தீவை அடைந்ததும், இந்த நுழைவு அனுமதிப்பத்திரத்தை அங்குள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் விமானத்தில் செல்வதாக இருந்தால் முடிந்தளவு உங்களின் பேக்கிங்கை குறைவாக இருக்க திட்டமிடுங்கள்; இங்குள்ள விமானங்கள் சிறியவை மற்றும் குறைந்த திறன் கொண்டவை. எனவே, இதற்கேற்ப உங்களின் லக்கேஜ் இருக்க வேண்டும்.

விமானம் மூலம் செல்வதாக இருந்தால் கொச்சியில் இருந்து அகத்தி விமான நிலையத்தில் இறக்கி விடப்படுவீர்கள்.

கொச்சியில் இருந்தும் மங்களூருவில் இருந்தும், இந்த தீவுகளுக்கு கப்பல் போக்குவரத்து உண்டு. கப்பலில் செல்வதாக இருந்தால், எம்.வி. கவரட்டி, எம்.வி. மினிகாய், எம்.வி. அமிண்டிவி, எம்.வி. கோரல்ஸ், எம்.வி. லகூன், எம்.வி.லட்சத்தீவு கடல் மற்றும் எம்.வி. அரபிக்கடல் உள்ளிட்ட ஏழு கப்பல்கள் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்குச் செல்கின்றன. அவரவர் பட்ஜெட்டுக்கேற்ப ஏசி, டீலக்ஸ் என தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். கொச்சியில் இருந்து 14 முதல் 20 மணி நேர பயணத்தில் இலக்கை அடையலாம்.


லட்சத்தீவின் சிறப்புகள்

  • கடற்கரையில் நடந்து சென்று கற்கள் அல்லது குண்டுகளை சேகரிக்கலாம்.
  • தைரியமான நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் உற்சாகத்தின் அலைகளை அனுபவிக்கவும்.
  • லட்சத்தீவில் இருந்தால், ஆயுர்வேத மசாஜ் செய்ய நீங்கள் பதிவு செய்ய வேண்டும், ஏனெனில் அது உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லையும் புதுப்பிக்கும்.
  • நாவில் எச்சில் ஊற செய்யும் கடல் உணவுகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகளைச் சுவைக்கலாம்.
  • நீங்கள் தென்னை நார்ப் பொருட்களை விரும்புபவராக இருந்தால், அமின்டிவி தீவுக்குச் செல்லுங்கள்.
  • சிறந்த ஸ்நோர்கெலிங் அனுபவத்திற்கு, நீங்கள் கல்பேனி தீவை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த தீவு ஆழமற்ற நீர் மற்றும் தங்க மணல் கரையின் தாயகமாகும், இது சூரியக் கதிர்கள் அதன் மீது விழும்போது பிரகாசிக்கும்.
  • அகத்தி தீவின் பவளப்பாறைகள் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

அமைதியை விரும்புகிறவர்கள். ஒருமுறை லட்சத்தீவுக்கு சென்று வாருங்கள். அருமையான தேசம் அது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!